புதன், 6 மே, 2015

தமிழ் இலக்கணம் அறிவோம்!-4

தமிழில் முதலெழுத்துகளாகிய முப்பதைத் தவிர, மற்ற அனைத்தும் 'சார்பெழுத்துகள்' என்று சொல்லப்படும். அதாவது, முதல் எழுத்துகளைச் சார்ந்து அமைபவை.

மொத்தம் 247 எழுத்துகள், அதில் முப்பது முதலெழுத்துகள், அப்படியானால், சார்பெழுத்துகள் 247 – 30 = 217. சரிதானே? இல்லை. தமிழில் சார்பெழுத்துகளின் எண்ணிக்கை 217ஐவிட அதிகம்!

'அவர் ஒருத்தரே நாலு ஆள் வேலையைச் செஞ்சிடுவார்' என்று சொல்கிறோமில்லையா? அங்கே 1 = 4, கணக்குப்படி தவறு, ஆனால் எதார்த்தத்தில் சரி.

அதுபோல, தமிழில் சில எழுத்துகள் ஒரே வடிவத்தில் இருப்பினும், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறுவிதமாக ஒலிக்கின்றன. ஆகவே, அவற்றைத் தனித்தனி எண்ணிக்கையாகக் கணக்கிடுகிறது இலக்கணம்.

இதன்படி, தமிழில் உள்ள சார்பெழுத்துகளை இத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்:

* உயிர்மெய்
* ஆய்தம்
* உயிர் அளபெடை
* ஒற்று அளபெடை
* குற்றியலிகரம்
* குற்றியலுகரம்
* ஐகாரக் குறுக்கம்
* ஔகாரக் குறுக்கம்
* மகரக் குறுக்கம்
* ஆய்தக் குறுக்கம்

முதலில், நம் எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த உயிர்மெய் எழுத்துகள். உயிரும் மெய்யும், அதாவது 12 உயிர் எழுத்துகள், 18 மெய் எழுத்துகளோடு வெவ்வேறுவிதமாகச் சேர்ந்து உருவாகும் 12 * 18 = 216 எழுத்துகள்.

க் + அ = க
க் + ஆ = கா
க் + இ = கி
க் + ஈ = கீ

ன் + ஐ = னை
ன் + ஒ = னொ
ன் + ஓ = னோ
ன் + ஔ = னௌ

இங்கே அ + க் என்று எழுதாமல், க் + அ என்று நான் மாற்றி எழுதியிருப்பதைக் கவனியுங்கள். 'உயிர் மெய்' என்று பெயர் இருப்பதால், உயிர் எழுத்தைதானே முதலில் சொல்லவேண்டும்?

உண்மைதான். ஆனால், இந்த எழுத்தை உச்சரிக்கும்போது, எந்த ஒலி முதலில் வருகிறது என்று யோசியுங்கள். ஓரிரு உயிர்மெய் எழுத்துகளைச் சொல்லிப் பாருங்கள்.

'க' என்பதில், 'க்' ஒலி (அதாவது மெய்யெழுத்து)தான் முதலில் ஒலிக்கும், அதன்பிறகு அது 'அ' எனும் உயிரெழுத்தின் ஒலியைச் சேர்த்துக்கொள்ளும்.

இதுவே 'கோ' என்று ஆகும்போது, மறுபடி 'க்' ஒலிதான் முதலில் கேட்கும், பின்னர் அதன்மீது 'ஓ' எனும் உயிரெழுத்து ஒலி சவாரி செய்யும்.

இப்படி நாம் எந்த உயிர்மெய் எழுத்தை எடுத்துக்கொண்டாலும் சரி, முதலில் மெய்யெழுத்தின் ஒலி கேட்கும், பிறகுதான் உயிரெழுத்தின் ஒலி.

உயிரெழுத்துகளில் குறில், நெடில் உண்டு என்று பார்த்தோம், மெய்யெழுத்துகளில் வல்லினம், மெல்லினம், இடையினம் உண்டு என்று பார்த்தோம்.

அப்பா வழிச் சொத்தும் அம்மா வழிச் சொத்தும் பிள்ளைகளுக்கு வந்து சேர்வதுபோல, உயிர்மெய் எழுத்துகளில் குறில், நெடில் உண்டு, வல்லினம், மெல்லினம், இடையினமும் உண்டு:

* குறில் வகை உயிரெழுத்துகளுடன் சேரும் மெய்யெழுத்துகள் குறில் வகை உயிர்மெய்யெழுத்துகளைத் தோற்றுவிக்கும். உதாரணமாக, க, ங, கி, ஙி முதலியன

5 குறில் * 18 மெய் = 90 குறில் உயிர்மெய் எழுத்துகள்

* நெடில் வகை உயிரெழுத்துகளுடன் சேரும் மெய்யெழுத்துகள் நெடில் வகை உயிர்ம்மெய்யெழுத்துகளைத் தோற்றுவிக்கும். உதாரணமாக, கா, ஙா, கீ, ஙீ முதலியன

7 நெடில் * 18 மெய் = 126 நெடில் உயிர்மெய் எழுத்துகள்

* வல்லின மெய்யெழுத்துகளுடன் சேரும் உயிரெழுத்துகள் வல்லின வகை உயிர்மெய்யெழுத்துகளைத் தோற்றுவிக்கும். உதாரணமாக, க, கா, கி, கீ, ப, பா, பி, பீ முதலியன

6 வல்லினம் * 12 உயிர் = 72 வல்லின உயிர்மெய் எழுத்துகள்

* மெல்லின மெய்யெழுத்துகளுடன் சேரும் உயிரெழுத்துகள் மெல்லின வகை உயிர்மெய்யெழுத்துகளைத் தோற்றுவிக்கும். உதாரணமாக, ந, நா, நி, நீ, ம, மா, மி, மீ முதலியன

6 மெல்லினம் * 12 உயிர் = 72 மெல்லின உயிர்மெய் எழுத்துகள்

* இடையின மெய்யெழுத்துகளுடன் சேரும் உயிரெழுத்துகள் இடையின வகை உயிர்மெய்யெழுத்துகளைத் தோற்றுவிக்கும். உதாரணமாக, ய, யா, யி, யீ, வ, வா, வி, வீ முதலியன

6 இடையினம் * 12 உயிர் = 72 இடையின உயிர்மெய் எழுத்துகள்

அடுத்து, மாத்திரைக் கணக்கு.

க் + அ = க என்கிறோம், இதில் 'க்' அரை மாத்திரை, 'அ' ஒரு மாத்திரை, அப்படியானால், 'க' என்ற உயிர்மெய் எழுத்துக்கு ஒன்றரை மாத்திரை. கரெக்டா?

மறுபடியும், அந்தக் கணக்குப் பாடத்தையெல்லாம் தாற்காலிகமாக மறந்துவிடுங்கள். இங்கே 'க'க்கு 1.5 மாத்திரை இல்லை, ஒரே ஒரு மாத்திரைதான்.

காரணம், 'க' என்பதை நாம் 'க்அ' என்று தனித்தனியே உச்சரிப்பதில்லை, சொல்லும்போதே அவை ஒன்றாகக் கலந்துவிடுகின்றன, நடுவில் காற்று நுழையவும் இடைவெளி இல்லாதபடி கட்டித் தழுவுகிற காதலர்களைப்போல!

இதனால், 'அ' என்பதை உச்சரிப்பதற்கு ஆகும் அதே நேரம்தான், 'க' என்பதை உச்சரிப்பதற்கும் ஆகும், சந்தேகமிருந்தால் ஸ்டாப் வாட்ச் சகிதம் கணக்குப் போட்டுப் பாருங்கள்.

நன்னூல் இதனை 'உயிர் அளவாய்' என்று குறிப்பிடுகிறது. அதாவது, ஓர் உயிர் எழுத்தும், ஒரு மெய் எழுத்தும் இணையும்போது, அந்த உயிர்மெய் எழுத்தின் மாத்திரை அளவு = அந்த உயிர் எழுத்தின் மாத்திரை அளவு.

அதாவது, உயிர்மெய்க் குறில் எழுத்துகள் எல்லாம் 1 மாத்திரை அளவு, உயிர்மெய் நெடில் எழுத்துகள் எல்லாம் 2 மாத்திரை அளவு.

இதென்ன அநியாயம்! கொஞ்சம் நேரம் முன்புதான் உயிர் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் அம்மா, அப்பாமாதிரி, உயிர்மெய் எழுத்து பிள்ளைமாதிரி என்று சொன்னோம், ஆனால் இப்போது மெய் எழுத்தின் அரை மாத்திரையைக் கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது சரியில்லையே!

அதற்காகதானோ என்னவோ, உயிர்மெய் எழுத்துகளைப் பேனா பிடித்து எழுதும்போது, அங்கே உயிர் எழுத்துக்கு வேலை இல்லை, மெய் எழுத்துமட்டும்தான் தெரியும்.

அதாவது, 'கு' என்று எழுதும்போது, அதில் க் + உ என இரண்டு எழுத்துகள் இருப்பினும், நமக்கு 'க்' வடிவம்தான் தெரியும், 'உ' வடிவம் தெரியாது. மற்ற எல்லா உயிர்மெய் எழுத்துகளும் இப்படிதான்.

இதையும் நன்னூல் குறிப்பிடுகிறது, 'உயிர் அளவாய், அதன் வடிவு ஒழித்து', அதாவது உயிர்மெய் எழுத்து உருவாகும்போது, அதன் மாத்திரை அளவு உயிருக்குச் சமமாக இருக்கும், ஆனால் எழுதும் வடிவம் உயிருக்குச் சம்பந்தமே இல்லாமல், மெய்யைச் சார்ந்து இருக்கும்.

ஆக, உயிருக்கும், மெய்க்கும் சரியாகப் போய்விட்டது. இனிமேல் சண்டை வேண்டாம்!

அடுத்து, ஆய்த எழுத்து. அதாவது, ஃ.

நம் பள்ளிகளில் ஆனா ஆவன்னா சொல்லித்தரும்போதே, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ என்று முடித்துவிடுவார்கள். இதனால், 'ஃ' என்பதும் உயிரெழுத்துகளில் ஒன்று என நாம் நினைக்க வாய்ப்புள்ளது.

இன்னும் சிலர், ஆய்த எழுத்தின் உச்சியில் ஒரு புள்ளி இருப்பதால், அதை மெய்யெழுத்தில் சேர்க்கிறார்கள். ஆய்த எழுத்துக்கும் அரை மாத்திரை, மெய்யெழுத்துக்கும் அரை மாத்திரை என்பது இன்னொரு காரணம்.

ஆனால் இலக்கணப்படி, ஆய்த எழுத்து தனியாக, சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை உயிரெழுத்துகளுடனோ மெய்யெழுத்துகளுடனோ சேர்க்கக்கூடாது.

இந்த ஆய்த எழுத்தை 'முற்றாய்தம்' என்றும் குறிப்பிடுவது உண்டு. அது ஏன் என்பதை ஆய்தக் குறுக்கம் பற்றிப் பேசும்போது பார்க்கலாம்.

இப்போது, 'ஆய்த எழுத்து' என்ற பெயர் ஏன் வந்தது என்பதுபற்றிச் சில கருத்துகள்.

ஆய்தம் என்பதை ஆயுதம் என்று எடுத்துக்கொண்டால், அது ஒரு போர்க் கருவியைக் குறிக்கும். கேடயம் மற்றும் சூலம் ஆகிய இரண்டு போர்க் கருவிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்துதான் 'ஆய்த எழுத்து' என்ற பெயர் வந்திருக்கவேண்டும் என்று ஊகிக்கிறார்கள்.

கேடயம் என்பது, தடுக்கும் கருவி. எப்போதாவது டிவியில் பிளாக் & வொயிட் சினிமா போடுவார்கள், அதில் வரும் போர்க் காட்சிகளைக் கவனித்துப் பார்த்தால், வீரர்கள் ஒரு கையில் வாள் அல்லது வேல் வைத்திருப்பார்கள், இன்னொரு கையில், எதிராளியின் தாக்குதலைத் தடுப்பதற்காகக் கேடயம் வைத்திருப்பார்கள். இப்போதும், கலவரங்களை அடக்க வரும் காவலர்கள் கையில் இதைப் பார்க்கலாம்.

அந்தக் கேடயத்தில் மூன்று புள்ளிகள் 'ஃ' வடிவத்தில் இருக்கும். அந்த டிஸைன்மாதிரியே இந்த எழுத்து அமைந்துவிட்டதால், இதனை 'ஆயுத எழுத்து' என்று சொல்வார்களாம்.

இதேபோல், திரிசூலத்தில் நடுவில் உள்ள கூர்மையான பகுதி நீண்டிருக்கும், அதற்கு இருபுறமும் சற்றே குட்டையான கூர்மைப் பகுதிகள் இருக்கும். தொலைவிலிருந்து பார்க்கும்போது, அந்த மூன்று கூர்மை நுனிகளின் தொகுப்பு 'ஃ'போலவே இருக்கும்.

இப்படி ஏதோ ஓர் ஆயுதத்தைக் குறிப்பிடும்வகையில்தான் 'ஃ'க்கு 'ஆய்த எழுத்து' என்று பெயர் வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது, நம்பப்படுகிறது.

இந்த அழகான, Logical விளக்கம் கேட்க நன்றாக உள்ளது. ஆனால் இலக்கணபூர்வமாக இதற்குச் சாட்சிகள் இல்லை. பல அறிஞர்கள் 'ஆய்தம்' வேறு, 'ஆயுதம் வேறு' என்கிறார்கள்.

தமிழில் ஆய்தல் என்றால், ஒரு விஷயத்தை மேலோட்டமாகப் பார்க்காமல் உள்ளே இறங்கிச் சென்று நுணுக்கமாக ஆராய்ச்சி செய்தல்.

இதே 'ஆய்தல்'க்கு இன்னொரு விளக்கமும் உண்டு. பெரிய ஒரு விஷயத்தைப் பிரித்துச் சிறிதாக்குதல், அதாவது, வலிமையானதை மென்மையாக்குதல்.

உதாரணமாக, 'கீரை ஆய்ஞ்சு கொடு' என்று சொல்கிறோமல்லவா? இதன் அர்த்தம், பெரிய கீரைக் கட்டைச் சிறு இலைகளாகப் பிரித்தல்.

இதேபோல், 'ஃ' என்கிற ஆய்த எழுத்தும், வல்லின எழுத்துகளுக்கு முன்பாக வரும்போது, அதை மென்மையாக்கிவிடும், அதாவது, மெல்லினமாக்கிவிடும்.

உதாரணமாக, இந்த இரண்டு சொற்களையும் சத்தமாகச் சொல்லிப் பாருங்கள்: மக்கு, எஃகு

இரு சொற்களிலும் 'கு' என்ற எழுத்து இருக்கிறது. ஆனால், 'மக்கு' என்பதில் வரும் 'கு'வும், 'எஃகு' என்பதில் உள்ள 'கு'வும் ஒரேமாதிரி ஒலிப்பதில்லை, சொல்லிப்பார்த்தால் தெளிவாகத் தெரியும், முதல் 'கு'க்கும், இரண்டாவது 'கு'க்கும் நம் வாய் திறக்கிற விதம், நாக்கு மடங்குகிற விதம் மாறுபடும்.

இதற்குக் காரணம், 'எஃகு' என்பதில் உள்ள 'ஃ'தான். 'கு' என்ற வல்லின எழுத்தைக் கொஞ்சம் மாற்றி, மெல்லினம்போல் ஒலிக்கச் செய்துவிடுகிறது.

நுட்பமான இந்தக் காரணத்தால், ஆய்கிற / மென்மையாக்குகிற எழுத்து என்ற அர்த்தத்தில் அதனை 'ஆய்த எழுத்து' என்று அழைத்தார்களாம்.

இந்த இரண்டு காரணங்களில் எது சரி என்கிற ஆராய்ச்சி நம் நோக்கமல்ல, ஆய்த எழுத்தின் இலக்கணத்தை வாசிக்கும்போது இதையும் தெரிந்துகொள்கிறோம். அவ்வளவுதான்!

ஆய்த எழுத்து எப்போதும் தனித்து வராது. வேறு எழுத்துகளுடன் சேர்ந்துதான் வரும்.

எந்த எழுத்துகள்? அதையும் நன்னூல் வரையறுக்கிறது:

குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்த்த வல் ஆறன் மிசைத்தே

இதன் பொருள், மூன்று புள்ளிகளைக் கொண்ட ஆய்த எழுத்து, வல்லினக் குறில் எழுத்துகளுக்கு முன்பாக வரும்.

உதாரணமாக, 'எஃகு' என்பதில் 'கு' என்ற எழுத்து வல்லினம் + குறில், அதற்கு முன்பாக 'ஃ' வந்துள்ளது. இதேபோல் அஃது, இஃது என்று பல உதாரணங்களைச் சொல்லலாம். ஒரே பிரச்னை, இவற்றையெல்லாம் நாம் அன்றாடப் பேச்சில் பயன்படுத்துவதில்லை.

அதற்குப் பதிலாக, இன்றைக்கு நாம் ஆய்த எழுத்தை ஒரு மிக விநோதமான காரணத்துக்காக உபயோகிக்கிறோம், பிற மொழிகளில் வரும் f' / Ph போன்ற ஒலிகளைக் குறிப்பதற்காக!

உதாரணமாக, 'காஃபி' என்று எழுதினால், அது Coffeeயைக் குறிப்பதாக நம்புகிறோம். 'ஃபோன்' என்று எழுதினால், அது Phoneஐக் குறிப்பதாக நம்புகிறோம், இது சரியா?

இலக்கணப்படி இந்த வழக்கத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. இது பின்னர் நாமே உருவாக்கிக்கொண்ட ஒரு சமீபத்திய பழக்கமாக இருக்கவேண்டும்.

அப்படியானால், 'காஃபி' என்று எழுதுவது சரியா, தவறா?

'காபி' என்பதன் உச்சரிப்பு 'kaapi', இது 'coffee' என்பதைக் குறிக்காது. நிறைவாக வரும் 'பி'யைக் கொஞ்சம் மென்மையாக்கி உச்சரிக்கவேண்டும்.

ஹிந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற மற்ற மொழிகளில் pa, ppa, ba, bha என்று வெவ்வேறு ஒலிகளுக்கு ஏற்ற உயிர்மெய் எழுத்துகள் உண்டு. தமிழில் அது இல்லை.

ஆகவே, 'பி' என்பதைப் 'pi' என்றில்லாமல் 'fi' என்று உச்சரிக்கச் செய்வதற்காக, அங்கே 'காஃபி' என்று எழுதுகிறோம், ஆய்தம் தன் இயல்புப்படி வல்லின 'பி'யை மெல்லினம்மாதிரி உச்சரிக்கச் செய்துவிடும், மேலே பார்த்த 'எஃகு' உதாரணத்தைப்போல.

அந்தவிதத்தில், இங்கே ஆய்தத்தைப் பயன்படுத்துவது தவறல்ல. ஆனால் அது தமிழ் இலக்கணப்படி சரியும் அல்ல. 'காபி' என்றுமட்டும் எழுதி, உச்சரிக்கும்போது, அது பயன்படும் சூழலைக் (Context) கருதி 'Coffee' என்றோ 'Kaapi' என்றோ உச்சரிப்பதுதான் முறை.

சிலர் 'காfபி' என்று எழுதுகிறார்கள். அதற்கு 'காஃபி' பெட்டர்!

எதற்கு இத்தனை வம்பு, கொஞ்சம் தண்ணீர்மட்டும் சாப்பிட்டுவிட்டுப் பாடத்துக்குத் திரும்புவோம்!

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* சார்பெழுத்தின் வகைகள்
* உயிர்மெய் எழுத்து : குறில் (90), நெடில் (126), வல்லினம் (72), மெல்லினம் (72), இடையினம் (72)
* உயிர்மெய் எழுத்துகளின் மாத்திரை அளவு (1 அல்லது 2)
* உயிர்மெய் எழுத்துகளின் வடிவம்
* ஆய்த எழுத்து : உயிரா? மெய்யா?
* பெயர்க் காரணம்
* வல்லினத்தைன் மென்மையாக்குதல்
* F / Ph ஒலிகள் வரும் இடங்களில் 'ஃ' பயன்படுத்துவது சரியா?


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக