தேனி மாவட்டத்தில் கட்டிடத் தொழிலாளியின் மகள் எஸ்எஸ்எல்சி தேர்வில் அரசுப் பள்ளிகள் அளவில் மாவட்டத்தில் முதல் இடம் பெற்றார்.

ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமராஜ். கட்டிடத் தொழிலாளி. இவரது மகள் ஆர். ராஜேஸ்வரி, அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து எஸ்எஸ்எல்சி தேர்வில் 492 மதிப்பெண் பெற்று, அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றுள்ளார்.

இவர் எடுத்த பிற மதிப்பெண்கள் விவரம்: தமிழ் 97, ஆங்கிலம் 96, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 என பெற்றுள்ளார்.

கூழ் விற்பவரின் மகள்

ஆண்டிபட்டியை சேர்ந்த கம்பங்கூழ் விற்பவர் ரவிச்சந்திரன். இவரது மகள் ஆர். பாலவைஷ்ணவி. ஆண்டிபட்டி அரசு மேல்நிலையில் படித்து எஸ்எஸ்எல்சி தேர்வில் 490 மதிப்பெண் பெற்று, அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். அவர் பெற்ற பிற மதிப்பெண்கள்: தமிழ் 96, ஆங்கிலம் 95, கணிதம் 99, அறிவியல் 100, சமூக அறிவியல் 100.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைத்துள்ளது. என்னை சிரமப்பட்டு படிக்க வைத்த பெற்றோருக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டுள்ளேன் என்றார்.