வெள்ளி, 1 மே, 2015

TRB PG TAMIL:நற்றிணை




இங்கு நற்றிணை -  பாடல்களின் உள்ளடக்கங்களைக் காணலாம். இணைதலும் பிரிதலும் கொண்டு அகவாழ்வின் நுட்பங்களைக் கவிஞர்கள் எடுத்துக் காட்டுவதைக் காணலாம்.

நின்ற சொல்லர்

எனத் தொடங்கும் கபிலர் பாடல் (நற்றிணை - 1).

 கபிலர்

குறிஞ்சித்திணையை மிகச் சிறப்பாகப் பாடிய கபிலர் குறிஞ்சிக் கபிலர் என்றே அழைக்கப்பட்டவர். புலவர்கள் போற்றும் புலவராக, பாரியின் ஆருயிர் நண்பராக, சங்கப் புலவர்களுள் மிகுதியான பாடல்களை வடித்தவராகக் கபிலரை அறிகிறோம். சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே (சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்குவதுபோல, இவள் உயிர் மிகச் சிறியது; ஆனால் இவள் காதலோ மிகப் பெரியதாய் உள்ளது என்பது இதன் பொருள்) என்பது போன்ற அருமையான உவமைகளும், குறிஞ்சி நில வருணனைகளும், நுட்ப உணர்வு வெளிப்பாடுகளும் கபிலர் கவிதையைத் தனித்து எடுத்துக் காட்டுவன.

கபிலரின் சங்கப்பாடல்கள் 234 ஆகும். அவை நற்றிணையில் 20, குறுந்தொகையில் 29, கலித்தொகையில் 29, ஐங்குறுநூற்றில் 100, பதிற்றுப்பத்தில் 10, அகநானூற்றில் 16, புறநானூற்றில் 30 மற்றும் பத்துப்பாட்டில் குறிஞ்சிப்பாட்டு எனும் நூல்.

 திணை : குறிஞ்சி

 கூற்று : பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.

தலைவன் பிரியக் கருதியதை அறிந்த தோழி தலைவியிடம் அதனைத் தெரிவிக்கிறாள். தலைவனது அன்பையும் மனப்போக்கையும் நன்கறிந்திருக்கும் தலைவி, அவன் பிரியமாட்டான் என உறுதியாகக் கூறுகிறாள்.

 

தலைவி தோழியை நோக்கிக் கூறுகிறாள்: 'தோழி! என் தலைவர் நிலைத்து நிற்கும் வாய்மைச் சொல்லுடையவர்; பழகப்பழக நீடிக்கும் இனிமையுடையவர்; ஒரு நாளும் என் தோள்களைப் பிரிந்தறியாதவர். அவரைப் போன்ற மேலானவர்களுடைய நட்பு தாமரைத் தாதையும் சந்தனத் தாதையும் ஊதி எடுத்துச் சந்தன மரத்தில் அமைத்த தேன் இறால் போன்ற மேன்மையுடையது. நீரில்லா உலகம் வாழ முடியாததுபோல, 'அவரில்லாமல் நான் வாழமாட்டேன்' என்பதை அவர் அறிவார். பிரிவினால் ஏற்படும் என் நெற்றிப் பசலைக்கே அஞ்சுபவர் என்னைப் பிரிதலாகிய சிறுமைச் செயல் செய்வாரா? சொல்!'

பாடலில் தெரியும் சுவை உவகைச் சுவை. (உவகை = மகிழ்ச்சி) தலைவியின் உவகை, தலைவன் மீது அவள் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றியது. தலைவனது சொல்லும் செயலும் உணர்வும் மேலானவை என்பதை அவள் சொற்கள் உணர்த்துகின்றன. இலட்சியக் காதல் எப்படியிருக்கும் என்பதை இத்தலைவியிடம் தெரிந்து கொள்கிறோம் அல்லவா! கபிலர், உயர்ந்த மானிடப் பண்புகள் சிலவற்றை இப்பாடலில் சுட்டிக் காட்டுகிறார்: 1) சொன்ன சொல்லை மீறுவது கூடாது 2) உண்மையான அன்புறவு நீடித்து இனியதாக இருப்பது.

அழுந்துபட வீழ்ந்த

எனத் தொடங்கும் பெரும்பதுமனார் பாடல் (நற்றிணை - 2).

 பெரும்பதுமனார்

மீளிப் பெரும்பதுமனார் என்றும் இவர் வழங்கப்படுகிறார். பாலைத்திணையைச் சிறப்பாகப் பாடியவர். திருமணத்துக்கு முன்னர், தலைவியின் சிலம்பைக் கழற்றி நீக்கும் சிலம்புகழி நோன்பு என்னும் வழக்கம் இருந்ததை இவர் பாடலால் உணர்கிறோம்.

 திணை : பாலை

 கூற்று : உடன்போக்கில் செல்லும் தலைவனையும் தலைவியையும் இடைச்சுரத்தில் கண்டோர் தமக்குள் சொல்லிக் கொண்டது.

(உடன்போக்கு : தோழியின் தூண்டுதலால் தலைவியை மணந்து கொள்வதற்காகத் தலைவன் அவளைப் பிறர் அறியாமல் அழைத்துச் செல்லுதல். சுரம் : பாலைவழி)

கண்டோர் கூறுவது : 'பெரிய குன்றம்; தழைத்த ஈச்ச மரங்கள் நிறைந்த காடு; காற்றுச் சுழன்றடிக்கிறது. புலிக்குட்டிகள் வழிச் செல்வோரின் தலைகளை மோதிச் சிதறிச் சிவந்த தலையும் குருதி படிந்த வாயுமாகக் காட்சி தருகின்றன. மாலைப் பொழுதில் அவை தாம் பதுங்கியுள்ள மரலின் தூறுகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. வழிநெடுக இண்டங்கொடிகளும் ஈங்கையும் பரவிக் கிடக்கின்றன. இத்தகைய கொடிய பாலை வழியில், இரவில், இந்த இளம்பெண்ணை முன்னே நடக்கவிட்டுப் பின்செல்லும் இந்தத் தலைவனின் உள்ளம் கொடியது; வேகக்காற்றுடன் மழைபெய்யும் போது பாறைகளைப் புரட்டி விடுகின்ற இடியைவிட மிகக் கொடியது இவன் உள்ளம்.'

link-movie

இளையோன் உள்ளம்
காலொடு பட்டமாரி
மால்வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே

எனும் கண்டோர் கூற்றில் வெளிப்படையாகத் தெரிவது உயிரைப் பொருட்படுத்தாத ஒரு காதல் பிணைப்பு.

(கால் = காற்று; உரும் = இடி; மரல் = கற்றாழை; ஈங்கை = ஒருவகைக்கொடி)

'ஈன் பருந்துயவும்'

எனத் தொடங்கும் இளங்கீரனார் பாடல் (நற்றிணை - 3).

 இளங்கீரனார்

பாலைத்திணையையும், பாலை நிலத்து வேடுவர் இயல்புகளையும் சிறப்பாகப் பாடியுள்ள இப்புலவர் வேடர் மரபில் வந்தவர் எனக் குறிப்பிடப்படுகிறார். தலைவியின் இனிமைக்கு, வினை (மேற்கொண்ட செயல்) முடித்தலால் வரும் இனிமையை உவமை காட்டிய இவரது கவிதை அகம்-புறம் இரண்டையும் சிறப்பாக இணைக்கிறது.

 திணை : பாலை

 கூற்று : முன்னொரு முறை பொருள்வயின் பிரிந்த தலைமகன் மீண்டும் பொருள் தேடப் புறப்படுமாறு தூண்டும் தன் நெஞ்சை நோக்கிச் சொல்லியது.

முன்னைய பிரிவின் போது, மாலைப் பொழுதில், தன் தலைவி எவ்வாறு வருந்துவாள் என்பதை நினைத்து வருந்தியிருந்த தலைவன், அதனை இப்போது தன் நெஞ்சிற்கு நினைவுபடுத்துகிறான்.

தலைவன் பேசுகிறான்: 'நெஞ்சே! வழிப்போக்கரைத் துன்புறுத்தி வாழும் வில்வீரர்களின் பாலை நிலக்குடியிருப்பு அது. குஞ்சுகளை ஈன்ற (குஞ்சு பொரித்த) பருந்து அசதியுடன் தங்கியிருக்கும் வேப்ப மரத்தின் புள்ளி நிழலில் சிறுவர்கள் நெல்லிக்காயைக் கொண்டு பாண்டில் ஆடுவர். வெம்மையான அச்சிற்றூரில் தலைவியைப் பிரிந்து தனித்திருந்த போது என் மன வலிமையைக் கொல்லும் மாலைப் பொழுது வரும். கருதிய செயலை முடித்தால் எத்தகைய இனிமை கிட்டுமோ அது போன்ற இனிமையுடைய நம் தலைவி இந்த மாலைப்பொழுதில் விளக்கேற்றி அதன் முன் நின்று 'அவர் இன்னும் வரவில்லையே' என வருந்திக் கொண்டிருப்பாள் என நினைத்து நான் வருந்தினேன் அல்லவா!'

'இதனை நன்கறிந்த நீ இப்போது பொருளுக்காகத் தலைவியைப் பிரியத் தூண்டலாமா?' என்பது தலைவன் நெஞ்சினிடம் கேட்காமல் கேட்கும் கேள்வி. தலைவனுக்குள் நிகழும் மனப்போராட்டத்தில் பொருளாசையை வெல்கிறது காதல் உணர்வு. "வினை முடித்தன்ன இனியோள்" என்று தலைவியைக் குறிப்பிடுவது, அவளைப் பிரிந்து சென்று அடையக் கூடிய இனிமை வேறில்லை என்பதைப் புலப்படுத்துகிறது.

மரத்திலுள்ள பருந்துக்கு வருத்தம்; மரத்தடியில் விளையாடும் சிறுவர்க்கு மகிழ்ச்சி! இந்தக் காட்சி பிரிவை எண்ணி வருந்தும் தலைவனையும் பொருளை எண்ணி மகிழும் நெஞ்சையும் குறிப்பாக ஒப்புமைப்படுத்துவதை உணரலாம்.

"கானலஞ்சிறுகுடி"

எனத்தொடங்கும் அம்மூவனார் பாடல் (நற்றிணை - 4).

 அம்மூவனார்

இவர் நெய்தல் திணையைப் பாடுவதில் சிறந்தவர். நெய்தல் நில வளங்களும் அழகுகளும் இவர் பாடலிற் காணப்படும் சிறப்பியல்புகள் ஆகும். ஐங்குறுநூற்றில் நெய்தல் திணைப்பாடல்கள் நூறும் இவர் பாடியவையே. கடற்கரைப் பட்டினங்களாகிய தொண்டியும், கொற்கையும் இவர் பாடல்களில் சிறப்பிக்கப்படுகின்றன. இவர் சேர நாட்டைச் சேர்ந்தவர் எனக் கருதப்படுகிறார்.

 திணை : நெய்தல்

 கூற்று : தலைவன் சிறைப்புறமாக நிற்கத் தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.

களவுக் காதலைப் பிறர் அறிந்தால் அலர் தூற்றுவர்; அன்னை இற்செறிப்பாள் என்பதனைத் தலைவியிடம் பேசுவது போலத் தலைவனுக்குச் சொல்லித் 'தலைவியை மணந்து கொண்டு உனது ஊர்க்கு அழைத்துச் செல்வதே நல்லது' எனக் குறிப்புணர்த்துகிறாள் தோழி. (சிறைப்புறம்: வேலிப்புறம்: அலர்: களவுக் காதலை அறியும் அயலார் பழிதூற்றுதல். வரைவு கடாதல் : திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுதல்.)

தோழி தலைவியை நோக்கிப் பேசுகிறாள் : 'தோழி ! பரதவர்கள் மீன் பிடிக்கக் கடல் மீது செல்வதற்காக நல்லநேரம் பார்த்துப் புன்னையின் செழிப்பான நிழலில் தங்கியிருப்பர். மீன் பிடி வலைகள் மணலில் புலர்ந்து கொண்டிருக்கும். அத்தகைய கடல்துறைத் தலைவராகிய நம் தலைவரிடம் சென்று, நமக்குண்டாகிய பழிச்சொல்லை அன்னை அறிந்தால் இங்கே சந்தித்தல் அரிதாகிவிடும் என்பதைச் சொல்லிவிடலாமா? சொன்னால் அவர் நம்மைத் தம் ஊர்க்கு அழைத்துச் செல்ல மாட்டாரா? கடற்கழிகள் சூழ்ந்த அவரது ஊர் இனிய காட்சிகள் நிறைந்தது; உப்பு வாணிகரின் ஆரவாரத்தில் பசுக்கூட்டங்கள் திடுக்கிட்டெழும்; அவர்களின் வண்டிச்சக்கரங்கள் மணலில் எழுப்பும் நறநற எனும் ஓசைகேட்டுக் கழனியில் உள்ள நாரைகள் அஞ்சும். அவ்வூர்க்கு நம்மைக் கொண்டு செல்ல மாட்டாரா?'

முறைப்படி தலைவன் தலைவியை மணந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் குறிப்பாகத் தெரிகிறது கவிதையில். வண்டிச்சக்கரம் எழுப்பும் ஓசைக்கு நாரைகள் அஞ்சும் என்பது, தலைவன் மணம்பேச வரும் முரசு ஒலி கேட்டால் அலர் தூற்றுவோர் அடங்குவர் என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறது.

"நீர்வளர் ஆம்பல்"

எனத் தொடங்கும் பரணர் பாடல் (நற்றிணை - 6).

 பரணர்

தலைசிறந்த புலவரான கபிலருக்குப் பரணர் நண்பர். இவரும் தலைசிறந்த புலவரே. இலக்கணத்தில் உம்மைத் தொகைக்கு எடுத்துக் காட்டாகக் 'கபிலபரணர்' எனும் தொடரையே காட்டுவர். இது இவ்விருவரின் நட்பை மட்டுமன்றி, ஒப்பான புலமை மேம்பாட்டையும் குறிப்பதாகும். அகப்பாடல்களில் மன்னர், வள்ளல்கள், ஊர்கள் பற்றிய புறச் செய்திகளைப் பொருத்தமாக இணைத்துப் பாடுவதில் பரணர் இணையற்றவர். இவர் பாடலுக்குப் பரிசாகக் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் என்ற சேரமன்னன் தன் மகன் குட்டுவன் சேரலையே வழங்க முன் வந்தான் என்பது, பரணர் கவிதையின் மேன்மையையும் செங்குட்டுவனின் தமிழ்ச்சுவை ஆர்வத்தையும் ஒருங்கே உணர்த்தும் செய்தியாகும்.

 திணை : குறிஞ்சி

 கூற்று : இரவுக்குறியில் வந்து தலைவியைச் சந்திக்க முடியாது வருந்தும் தலைவன் தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. அதாவது இரவுக்குறி வேண்டி வந்தவன், தான் வந்திருக்கும் செய்தியைத் தலைவியிடம் போய்ச் சொன்னால் போதும்; 'யார்' என்று கேட்காமலே அவள் பெரிதும் மகிழ்வாள்; அவ்வாறு போய்ச்சொல்ல யாருமில்லையே என்று வருந்துகிறான். (இரவுக்குறி : தலைவன் தலைவியை இரவில் சந்திக்க ஏற்பாடு செய்து வைத்த இடம்)

தலைவன் தன் நெஞ்சை நோக்கிப் பேசுகிறான் : 'என் நெஞ்சே ! ஆம்பல் பூவின் தண்டை உரித்தாற் போன்றிருக்கிற, சற்று அழகு குறைந்த மாமை நிறமும், குவளைக் கண்ணும், தேமல் படர்ந்த அல்குலும், பெரிய தோள்களும் உடைய நம் தலைவியிடம் நமது வருகையை யாரேனும் சென்று தெரிவித்தால் 'அவர் யார்?' என்று கேட்கமாட்டாள். குமிழ மரத்தின் கனிகளை இளமான்கள் விரும்பி உண்ணும் வல்வில் ஓரியின் கானம் போல நறுமணம் கமழ்கின்ற அடர்ந்த கருங்கூந்தலையுடைய அவள் 'யாம் வந்திருக்கிறோம்' என்பதைக் கேட்டவுடனே களிமயக்கம் கொள்வாள்'

'அவ்வாறு சென்று சொல்ல யாருமில்லையே !' எனக் குறிப்புணர்த்தித் தனக்கு உதவுமாறு தோழியைத் தலைவன் வேண்டுவதை நாம் உணர்கிறோம். தலைவி அவனை நன்கறிவாள் என்பதையும் அவனுக்காகவே காத்திருக்கிறாள் என்பதையும் "இவர் யார் என்குவள் அல்லள்", "பெரும்பேதுறுவள் யாம் வந்தனம் எனவே" எனும் கூற்றுகளால் உணரலாம்.

மானுக்குக் குமிழ மரத்தின் கனிபோலத் தலைவிக்குத் தலைவன் வரவு இனியது எனும் குறிப்புப் பொருள் கவிதையில் உணர்த்தப்படுகிறது.

வல்வில் ஓரி என்னும் மன்னனைப் பற்றிய குறிப்பு வரலாற்றை அறிய உதவுகிறது.

"சூருடை நனந்தலை"

எனத் தொடங்கும் நல்வெள்ளியார் பாடல் (நற்றிணை - 7).

 நல்வெள்ளியார்

இவர் பெண்பாற் புலவர் ஆவார். இவரது ஊர் மதுரை. நற்றிணையில் 2, குறுந்தொகையில் 1, அகநானூற்றில் 1 என இவரது பாடல்கள் நான்கே எனினும் அழகான வருணனைகளாலும், மறைமுக உணர்ச்சிச் சித்திரிப்பினாலும் உயர்ந்த தரமுடையவை அவை.

 திணை : பாலை

 கூற்று : அறத்தொடு நிற்றலின் பின் (காதல் வெளிப்படுத்தப்பட்ட பின்பு) தலைமகன் உடனே மணந்து கொள்ளாமல், பொருள் தேடப் பிரிந்து போயிருக்கிறான். அவன் வருவதாகச் சொன்ன கார்காலம் வந்து விட்டது. தலைவி வருந்துகிறாள். மழைக்காலம் வந்துவிட்டதை அறியும் தலைவன் வந்துவிடுவான் எனத் தோழி தேற்றுகிறாள்.

தோழி தலைவியை நோக்கிப் பேசுகிறாள் : 'யானை மூங்கில் நெல்லைத் தின்றுவிட்டு மகிழ்ச்சியுடன் உறங்கும் மலைப்புறம்; சந்தன மரங்கள் நிறைந்த "வாடு பெருங்காடு" அது. அங்கே பெருமழை பொழிந்தால் அச்சந்தரும் ஆழமான சுனைகளில் நீர் நிறையும்; மலைப்பக்கங்களில் அருவிகள் ஆர்ப்பரிக்கும்; கற்களைப் புரட்டிக் கொண்டு வேகமாக ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மூங்கில்களை மூழ்கடித்துக் காட்டில் மோதி ஆர்ப்பரிக்கும். இதோ, இப்போதே மழை பொழிய வானம் மின்னி முழங்கிக் கொண்டிருக்கிறது.'

தோழியின் பேச்சு வெறும் மழை வருணனையாக மட்டுமே நின்று விடுகிறது. வெறும் வருணனையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கவிதை அமைவது சங்க இலக்கியத்தில் இல்லை. ஆகவே தோழியின் பேச்சில் மறைபொருள் இருக்க வேண்டும். பல காலம் நீரின்றி வறண்டு கிடந்த சுனைகளும் அருவிகளும் காடும் செழிக்குமாறு மழை கனத்துப் பெய்யும் என்ற வருணனையில் பல நாட்கள் தலைவனைப் பிரிந்து தவித்துக் கொண்டிருந்த தலைவி மகிழுமாறு தலைவன் வந்துவிடுவான் என்ற இறைச்சி (குறிப்பு)ப் பொருள் அமைந்திருக்கிறது. அதேபோல் கவலையற்றுத் துயிலும் யானையும் இனிக் கவலையற்றுத் துயில விருக்கிற தலைவியைக் குறிப்பாக உணர்த்துகிறது.

"அழிவில முயலும்"

எனத் தொடங்கும் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல் (நற்றிணை - 9).

 பாலை பாடிய பெருங்கடுங்கோ

'பாலை பாடிய' என்னும் அடைமொழி, இப்புலவர் பாலைத் திணையைச் சிறப்பாகப் பாடியவர் என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. இவர் சேர அரச மரபைச் சேர்ந்தவர். அதனால் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ எனவும் அழைக்கப்படுபவர். செல்வம் தேடுதலின் சிறப்பு - முறையற்ற வழியில் வரும் செல்வம் - செல்வத்தின் இழிவு - கொடை என்று இவ்வாறு தம் பாடல்களில் பொருள் பற்றிப் பல இடங்களில் இவர் கூறியிருக்கும் கருத்துகள் இவரை ஏனைய புலவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவன. இவர் மன்னர் குடியிற் பிறந்து வளர்ந்தமையால் இவ்வகைக் கருத்தோட்டம் இவருக்கு அமைந்திருக்கக் கூடும். 'தலைவியைப் பிரிந்து, பிரிந்த இடத்தில் மனம் பொருந்தியிருப்பேனாயின் இரவலர்கள் என்னைத் துறந்து போகும் நாட்கள் மிகுதியாகட்டும்' என வஞ்சினம் கூறும் இவரது பாடலின் தலைவன் இவரது கருத்தையே எதிரொலிக்கிறான் என்பதை உணரலாம்.

 திணை : பாலை

 கூற்று : உடன் போகின்ற தலைமகன் தலைமகளுக்கு உரைத்தது. அதாவது பயணத்தில் துன்பமான பகுதிகளைத் தாண்டிய பின்பு சோலைகளும் சிற்றூர்களும் நிறைந்துள்ள எஞ்சிய பகுதியில் தலைவி விளையாடி மகிழ்ந்து மெல்ல வரலாம் எனக் கூறித் தலைவன் அழைத்துப் போகிறான்.

தலைவன் தலைவியை நோக்கிக் கூறுகிறான்: 'தலைவி ! தம்செயல் சிதைவில்லாமல் முடிய வேண்டும் என்பதற்காகத் தெய்வத்தை வழிபடுவோர், அத்தெய்வத்தைக் கண்ணெதிரே கண்டாற்போல, உனக்காக ஏங்கியிருந்த வருத்தமெலாம் தீர உன்னை அடைந்துவிட்டேன். இப்போது நாம் சென்று கொண்டிருக்கிற வழியில் மாமரத்தின் அரும்புகளைக் கோதி மகிழ்ந்து குயில்கள் கூவுகின்ற குளிர்ந்த சோலைகள் நிறைந்துள்ளன; அடுத்தடுத்த சிறு சிறு ஊர்களும் உள்ளன. இனி நீ வருத்தமின்றி மகிழ்ந்து செல்லலாம். புன்க மரத்தின் தளிரைச் சுணங்கு நிறைந்த மார்பில் அப்பிக் கொண்டு, நிழல் காணும்போதெல்லாம் நெடுநேரம் தங்கி, மணல் காணும்போதெல்லாம் சிற்றில் செய்து விளையாடி மகிழ்ச்சியாகச் செல்லலாம்.!'

இவர்களுக்கு இரண்டு மகிழ்ச்சிகள் இருப்பது தெரிகிறதல்லவா! காதலுக்கு இருந்த இடையூறுகளைத் தாண்டி உடன்போக்கில் வந்துவிட்ட மகிழ்ச்சி ஒன்று: வழிநடைப் பயணத்தின் கொடுமைகளைத் தாண்டிப் பாதுகாப்பான பகுதிக்கு வந்துவிட்ட மகிழ்ச்சி இரண்டாவது. இயற்கையின் அரவணைப்பு தலைவிக்கும் தலைவியின் அரவணைப்பு தனக்கும் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியைத் தலைவனின் வருணனைகளில் காண்கிறோம்.

"அண்ணாந் தேந்திய"

எனத் தொடங்கும் பாடல் (நற்றிணை-10) (ஆசிரியர் பெயர் காணப்படவில்லை).

 திணை : பாலை

 கூற்று : உடன்போக்கும் தோழி கையடுத்தது.

அதாவது தலைவியின் விருப்பப்படி அவளைத் தலைவனிடம் கைபிடித்துக் கொடுத்த தோழி 'உன் சொல்லை நம்பி உன்னுடன் வரும் இவளை முதுமை எய்திய பிறகும் கைவிடாது பாதுகாப்பாயாக' என்று சொல்லி இரவில் வழியனுப்பியது. (உடன்போக்கு: மணந்து கொள்வதற்காக யாருமறியாமல் தலைவன் தலைவியை அழைத்துச் சென்று விடல்: கையடுத்தல்: கைபிடித்துக் கொடுத்தல்)

தோழி தலைவனை நோக்கிச் சொல்கிறாள். 'தலைவ! இனிய, கடுப்பு மிகுந்த கள்ளையும் அணிமணிகள் பூண்ட பெரிய தேர்களையும் உடைய சோழ மன்னர்கள் கொங்கரை வென்று அடக்குவதற்காக ஒரு மாவீரனைப் பணியமர்த்தினர். அவன் யானைகள் நிறைந்த பேஎர் எனும் ஊரின் தலைவனான பழையன் ஆவான். அவனது தனிச்சிறப்பு அவனிடமிருந்த குறிதப்பாத வேற்படை. அந்த வேல்போல என்றும் தவறாதது உன் வாக்குறுதி எனத் தலைவி நம்பி ஏற்றுக் கொண்டிருக்கிறாள். இப்போது நான் உன்னிடம் ஒப்படைக்கும் இத்தலைவியின் அண்ணாந்து உயர்ந்த மார்புகள் தளர்ந்தாலும், பொன்மேனியில் நீலமணிபோலப் படர்ந்து கிடக்கும் நீண்ட அழகிய கூந்தல் நரைத்தாலும் இவளைப் பிரியாமல் பாதுகாப்பாயாக !'

அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்....
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்

என்ற அடிகளில் தோழி வெளிப்படுத்தும் உணர்வு உண்மைக் காதலின் உயர்வைப் புலப்படுத்துகிறது. வரலாற்றுத் தலைவனான பழையனின் குறிதப்பாத வேலை உவமையாக்கியதன் மூலம் தலைவன் தலைவிக்குத் தந்த வாக்குறுதியின் தீவிரத் தன்மை புலப்படுத்தப்படுகிறது.

"எழாஅயாகலின்"

எனத் தொடங்கும் கபிலர் பாடல் (நற்றிணை - 13).

 திணை : குறிஞ்சி

 கூற்று : இயற்கைப் புணர்ச்சியின் பின் தலைவியின் வேறுபாடு கண்ட தோழி, தலைவி மறைத்துப் பேசுவது கண்டு சொல்லியது. அதாவது தலைவனுடன் தலைவிக்கு இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்திருக்கிறது. தலைவியின் கண்சிவப்பு முதலிய உடல் வேறுபாடுகள் கண்டு இதை ஊகித்த தோழி தலைவியிடம் காரணம் கேட்கிறாள்; தலைவி உண்மையை மறைத்துப் பேசுகிறாள். எனினும் அவளது களவு ஒழுக்கத்தைத் தான் அறிந்து கொண்டிருப்பதைத் தோழி மறைமுகமாக உணர்த்துகிறாள். (இயற்கைப் புணர்ச்சி : தலைவனும் தலைவியும் முதன்முதலாகத் தாமே கண்டு புணர்தல்)

தோழி தலைவியை நோக்கிப் பேசுகிறாள் : 'தினைப்புனம் காப்போர், புனத்தைத் தின்றழிக்க வந்த பன்றி முதலிய விலங்குகளை எய்துகொன்று, அவற்றினின்றும் பறித்தெடுத்த அம்புபோலச் சிவந்த குளிர்ந்த கண்களையும் அழகிய தோள்களையும் உடைய தலைவியே ! ஓங்கிய மலையில் மயில்களின் கூடுகள் உள்ளன; அவற்றின் மீது வேங்கைப் பூக்கள் உதிர்வது கொல்லன் உலையில் பொறிகள் சிதறுவது போல் உள்ளது. தினைக்கதிர்களைக் கிளிகள் கவர்ந்து போவதை அம்மயில்கள் அறியும். கிளிகளோ தம் செயலை யாரும் அறியவில்லை என நினைத்துக் கொள்கின்றன. சரி. அக்கிளிகளை ஓட்டுவதற்காக இவ்விடத்தைவிட்டு நீ எழுந்து வராவிட்டாலும், அயலாரிருக்கும் இவ்விடத்தில் உன் அழகு கெடுமாறு அழாமலாவது இரு'.

கிளிகளின் களவை மயில்கள் அறிந்திருப்பது கிளிகளுக்குத் தெரியாது என்னும் வருணனை தலைவியின் களவைத் தோழி அறிந்திருப்பது தலைவிக்குத் தெரியாது என்னும் குறிப்புப் பொருளை உணர்த்துகிறது. விலங்கின் மீது பாய்ந்து மீண்டும் பறித்தெடுக்கப்பட்ட சிவந்த அம்பு, ஒரு தலைவன் மீது பாய்ந்து மீண்ட தலைவியின் சிவந்த கண்ணுக்கு உள்ளுறை. 'அழாதே' என்பது அயலார் புரிந்து கொண்டு அலர்தூற்றக் கூடும் என்ற எச்சரிக்கை ஆகும்.

"புணரிற் புணராது பொருளே"

எனத் தொடங்கும் சிறைக்குடியாந்தையார் பாடல் (நற்றிணை - 16).

 சிறைக்குடி யாந்தையார்

சிறைக்குடி எனும் ஊரைச் சார்ந்தவர் ஆந்தையார் எனும் இப்புலவர். இவர் பாடல்கள் தலைவன்-தலைவியருக்கிடையேயுள்ள, பிரியவே முடியாத குன்றாத காதல் பெருக்கைத் திரும்பத் திரும்பச் சொல்கின்றன. ஒரு பூவிதழ் இடையே வந்தாலும் பல ஆண்டுகள் பிரிந்திருந்தாற் போலத் துடிக்கும் மகன்றிற் பறவைகளின் உணர்ச்சியைத் தலைவன் - தலைவியிடையே கண்டு பாடியவர் இப்புலவர்.

 திணை : பாலை

 கூற்று : பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவழுங்கியது.

அதாவது, தலைவியைப் பிரிந்து சென்று பொருளீட்டத் தூண்டும் நெஞ்சை நோக்கிப் 'பொருளைவிடத் தலைவியின் இன்பமே சிறப்பானது' என்று கூறிப் பயணத்தை நிறுத்திவிடுதல். (பொருள் கடைக்கூட்டல் = பொருளைத் தேடுமாறு தூண்டல்; செலவு அழுங்குதல் = பயணத்தை தள்ளிவைத்தல்)

தலைவன் பேசுகிறான்: 'என் நெஞ்சே ! தலைவியோடு சேர்ந்து மகிழ்ந்திருந்தால் பொருள் கிட்டாது என்பது உண்மையே ! ஆனால் பொருளுக்காக அவளைப் பிரிந்து சென்றால், அவளது புணர்ச்சி என்றுமே கிட்டாமல் போய்விடும்.

புணரிற் புணராது பொருளே பொருள்வயிற்
பிரியிற் புணராது புணர்வே

link to movie

ஆகவே இவ்விரண்டையும் சீர்தூக்கிப்பார். நல்லது எதுவோ அதனைத் தேர்ந்தெடு. பொய்கை நீரில் மீன்செல்லும் பாதை இருந்த இடம் தெரியாது உடனே மறைவது போலப் பொருள் உடனே மறைந்து போகும். இந்த உலகையே மரக்காலாகக் கொண்டு ஏழு மரக்கால் அளவுக்குப் பெரும் நிதியைப் பெறுவதானாலும் அதனை நான் விரும்பேன். தலைவியின் செவ்வரி பரந்த குளிர்ந்த கண்கள் என்னை விரும்பி இனிமையாகப் பார்க்கும் பார்வையால் நான் பிணைக்கப்பட்டேன். பொருள் எப்படியோ போகட்டும்!'

பிரிந்தால் தலைவி இறந்து போவாள் என்பதைக் குறிக்கவே தலைவன் "பிரியின் புணராது புணர்வே" என்று சொல்கிறான். அவள் கண்களின் ஈர்ப்பு எவ்வளவு பெருநிதியையும் துச்சமாகக் கருதச் செய்யும் என்பதைச் "சேயரி மழைக்கண் அமர்ந்தினிது நோக்கமொடு செகுத்தனன்" என அவன் கூறுவதால் உணரலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக