பண்டைத்தமிழரின் வாழ்க்கையினை அறிந்து கொள்ளப் பின்புலமாக விளங்கும் சங்க இலக்கியம் என்பது கி.மு.300 முதல் கி.பி.200 வரையிலான கால கட்டம் என்பது பொதுவான கருத்து. 'வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்' என்று மொழி அடிப்படையில் பனம்பரனார் வரையறுத்துள்ள நிலப்பரப்பு அரசியல் நோக்கமுடையது. தமிழ் மொழி யானது பரந்துபட்ட நிலப்பரப்புடன் அடையாளப் படுத்தப்பட்டதன் மூலம் சங்ககாலத் தமிழரின் புழங்கு வெளியானது வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழரின் அன்றாட வாழ்க்கை சார்ந்த நிலமானது ஐந்திணையாகப் பாகுபடுத்தப்பட்டதன் வழியாக நிலம் மொழியின் மூலம் தமிழ்ச் சமுதாயத்தின் பொது நினைவினுக்குள் தகவமைக்கும் முயற்சி நடந்தேறியது.
பரந்துபட்ட நிலப்பரப்பினில் பல்வேறு இனக்குழுக்களாகவும், குடிகளாகவும் வேறுபட்டிருந்த மக்களைத் தமிழ் என்ற மொழி அடையாளம் ஒருங்கிணைத்தது. இயற்கையான நிலப்பரப்பானது, மொழியின் வழியே நினைவுகளாக உருமாறி, காலப்போக்கில் நாடாக மாற்றம் பெறும் அரசியல் நடைபெற்றது. இனக்குழுவாக வாழ்ந்து வந்த மக்களின் பாரம்பரியமான, சடங்குகள், நம்பிக்கைகள், பலிகள், விலக்குகள் போன்றவற்றைச் சிதைத்துவிட்டு புதியதோர் வாழ்க்கைமுறையை வாழவேண்டிய தேவையை புதிய அரசியல் நிலைமைகள் வலியுறுத்தின. இனக்குழுத்தலைவன் குறுநில மன்னராக மாறிப் பின்னர் வேந்தனாக வளர்ச்சியடைந்தது அரசியல் மேலாதிக்கம் சார்ந்தது.
போரினால் வெல்லப்பட்ட நிலப்பரப்பானது, இன்னொரு நாட்டுடன் இணைக்கப்படும்போது புதிய பிரச்சினைகள் ஏற்பட்டன. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பூங்குன்றனின் புறநானூற்றுப் பாடல், போரினால் தோற்றுப்போன குழுவினருக்குத் தேறுதல் சொல்வதற்காகப் பாடப்பெற்றது எனக் கருத இடமுண்டு.
அகம், புறம் என இரு எதிரிணைகள் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ள சங்க இலக்கியப் பிரதியானது, ஏற்கனவே தமிழகத்தில் நிலவிய தாய்வழிச் சமூக அமைப்பின் சிதைவினுக்குப் பின்னர் வடிவமைக்கப் பட்டுள்ளது. எனினும் தாய்வழிச் சமூக அமைப்பின் எச்சங்கள் ஏற்றத்தாழ்வான தமிழ்ச் சமூகத்தில் வழக்கில் இருந்தன. குடி, கணம், மன்பதை என்று அடையாளப் படுத்தப்படும் ஒரு குழுவில், ஆண் மட்டும் முதன்மைப் படுத்தப்பட்டான்.
அகவாழ்வில் காதல் மூலம் பெண்ணை அடைவதும், புற வாழ்வில் போர்மூலம் நிலத்தை வெல்வதும், ஆணின் இலக்கணமாகப் புனையப் பட்டன. வன்முறைமூலம் பிற இனக்குழுக்களின் நிலப் பரப்பைக் கைப்பற்றுவதும், ஆணின் மேலாதிக்கமும் சமூக வளர்ச்சியைத் துரிதப்படுத்தின. புறநிலையில் நிலமானது போரின் மூலம் ஆணுக்கான துய்ப்பு நிலமாக மாறுகின்றது. அகநிலையில் பெண்ணுடல் ஆணுக்கான துய்ப்பு மையமாகின்றது. நிலமும் பெண்ணும் ஆணின் கட்டுப்பாட்டிற்குட்பட்டவை என்ற கருத்தியலைச் சங்க இலக்கியப் பிரதிகள் நுட்பமாகப் பதிவு செய்துள்ளன.
சங்ககாலத்தில் நிலவுடைமைச் சமுதாயம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. உணவுக்காகச் சேர்ந்து வேட்டையாடுதல் என்ற நிலையிலிருந்து சில இனக் குழுவினர் மாற்றமடைந்திருந்தனர். காட்டை எரித்து வேளாண்மை செய்தல், கால்நடை வளர்த்தல் காரணமாக வாழ்க்கை முறை மாற்றம் அடைந்தது. நிலத்திலும் அதன் உபரி வருவாயிலும் தனியுடைமை யைப் பேணும் புதிய அரசியல் நிலைமை ஏற்பட்டது. இனக்குழுச் சமூக உறவுமுறைகள் சிதைவடைந்து, வர்க்கச் சமூக உறவுகளாக மாற்றம் பெற்ற நிலையில், பிறப்பு வழியாக வந்த அதிகார ஆட்சிக்கு உரிமை பெற்ற மன்னராட்சி முறை வலுவடைந்தது. இன்னொருபுறம் பல்வேறு இனக் குழுக்களின் தனித்தன்மைகள் போரின் மூலம் அழிக்கப்பட்டு பேரரசு தோன்றுவதற்கான சாத்தியப்பாடுகள் நிலவின. இனக்குழுத்தலைவன், குறுநில மன்னன், வேந்தன் போன்றோரைப் பரிசில் பெறுவதற்காகப் பாணர்களும் புலவர்களும் பாடிய பாடல்கள் சமூக மாற்றத்தினைத் துரிதப்படுத்தின. புறப்பாடல்கள் உருவாயின. சங்கப்பெண் புலவர்கள் பதிவாக்கியுள்ள மக்களின் வாழ்க்கை முறை பெரிதும் பாணர் மரபு சார்ந்து பதிவாகியுள்ளன.
சங்க இலக்கியப் பிரதிகள் முன்னிறுத்த அல்லது கட்டமைக்க விரும்பும் பெண் பற்றிய பிம்பம் ஆய்விற் குரியது. சங்ககாலப் பெண், தான் விரும்பிய ஆணைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் பாலுறவு கொள்ளும் தனித்த இயல்புடையவள். திருமணத்திற்கு முந்தைய கால கட்டத்தில் காதலர் பாலுறவு கொள்வதை இயல்பாகக் கருதிச் சமூகம் அங்கீகரித்தது. பாலியல் மிக இயற்கை யானதாகக் கருதப்பட்ட சூழலில், சிற்றின்பம், புலன்களை மறுத்தல் போன்ற பேச்சுகளுக்கு அறவே இடமில்லை. எனினும் புறவாழ்க்கையில் பெண் பற்றிய பல்வேறு புனைவுகளையும் வரையறைகளையும் முன்வைப்பதன் மூலம் சங்க இலக்கியப்பிரதிகள் வலியுறுத்தும் கருத்தியல்கள், நுண் அரசியல் சார்ந்தவை.
குடும்பம் என்ற சமூக நிறுவனத்தின் உருவாக்கத்தில் பெண்ணின் இடம் முதன்மையானது. சமுதாயத்தில் குடும்பம் என்பது பெண்ணை மையமிட்ட சிறிய அலகு எனினும், அது கருத்தியல் ரீதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆணின் சமூக உடைமைக்கு வாரிசு உருவாக்கிடவும், இனக்குழுச் சமூக அமைப்பைக் கட்டிக் காப்பாற்றவும் பெண்ணின் தூய உடல் பற்றிய கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. குடிப்பெருமையைக் கொண்டாடும் சமூக அமைப்பில், உறவினர் தொடர்பைவிட, தான் சார்ந்து வாழும் குடியினரு டனான வாழ்க்கையை முதன்மையாகக் கருதும் சூழ்நிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்ணைக் குடும்ப நிறுவனத்திற்குள் இணைத்து அவளுடைய ஒவ்வொரு செயற்பாட்டையும் வரையறுத்திட அன்றைய சமூகச் சூழல் அழுத்தமாக முயன்றது. கற்பு பற்றிய புனைவும், பிரிந்து போன கணவனுக்காகப் பொறுமையுடன் வீட்டில் பெண் காத்திருத்தல் போன்றவை புதிய வகைப்பட்ட போக்கினை வலியுறுத்துகின்றன. பெண்ணின் தனிப்பட்ட மனவுணர்வு, விருப்புவெறுப்பு, பாலியல் வேட்கை போன்றவற்றைச் சிதைத்து அவளை வெறும் உடலாகக் குறுக்கி, ஆணின் மேலாதிக்கத்தினுக்கேற்ப மாற்றும் முயற்சியை சங்க இலக்கியப் பிரதிகள் நுட்பமாக நிறைவேற்றியுள்ளன.
சங்கப் பெண்கவிஞர்கள் காதல் உணர்வுகளையும் காமவேட்கையையும் மனத்தடைகளற்றுக் கவிதை களாக்கியுள்ளனர். ஆண் மேலாதிக்கச் சமூகத்தில் அதிகாரத்தின் ஆளுகைக்கேற்ப எல்லா நிலைகளிலும் பெண் ஒடுக்கப்பட்டாலும், அவளுடைய எதிர்க்குரலும் தனித்துவமும் கவிதைகளில் பதிவாகியுள்ளன.
வெள்ளி வீதியாரின் காமம் பற்றிய மனப்பதிவுகள் வாசிப்பில் உருக்கத்தை ஏற்படுத்துகின்றன. "வானத்தில் திங்கள் ஒளிர்கின்றது; கடல் அலை கரையில் மோதுகிறது; அன்றில் பறவை பனைமர உச்சியிலிருந்து கத்துகிறது; யாமத்திலும் யாழ் மீட்டப்படுகிறது; இவை எல்லாவற்றையும் விட காமத்தைக் களையும் தலைவன் அருகில் இல்லையே, (நற்றிணை 385). இம்மனநிலை தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகும்.
காதல் வயப்பட்ட அகப்பாடல்களில் வெளிப்படும் பெண் பற்றிய பிம்பம் நாடகியத்தன்மையுடையது. எனினும் 'உன்னுடன் நான் ஊடல் கொள்வதற்கு நீ எனக்கு என்ன உறவு? எனக் கேட்கும் அள்ளுர் நன் முல்லையார் 'நீ அவளிடம் செல்க, உன்னைத் தடுப்பவர் யார்? என வெறுப்புடன் சொல்வது குறிப்பிடத்தக்கது. காதலன் அல்லது கணவன் வேறு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டாலும் தடுக்கவியலாத சூழலைப் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.
பண்டைத் தமிழர் வீரத்தின் அடையாளம் புறநானூறு என உருவாக்கப்பட்டுள்ள கருத்து, நுண் அரசியல் சார்ந்தது. புரவலர்-புலவர் என்ற உறவினில், வேந்தரின் வீரத்தைப் புகழ்ந்து பாடப்பட்ட சங்கப் புறப் பாடல்கள் வீரயுகக் காலத்தைச் சார்ந்தவை என்ற க.கைலாசபதியின் கருத்து ஏற்புடையது. போர், போருக்குப் பின்னர் கள், உணவு எனக் கொண் டாட்டத்தை முன்னிறுத்தும் புறப்பாடல்கள் பெரிதும் ஆணின் வீரத்தை மையமிட்டுப் புனையப்பட்டுள்ளன. இந்நிலையில் வீட்டில் இருத்தலே பெண்ணின் இருப்பு என்ற நெறி வகுக்கப்பட்ட சூழலில், பெண்களின் நிலையைக் கண்டறிய வேண்டியுள்ளது.
பெண்ணுடல் ஒப்பீட்டளவில் பெரிதும் இயற்கை யுடன் தொடர்புடையது. பாலூட்டி என்ற நிலையில், தனது குழந்தைகளுடன் அன்பு செலுத்தும் பெண், காலப்போக்கில் தன்னைச் சுற்றி ஒரு குழுவை உருவாக்கும் ஆற்றல் மிக்கவள். வன்முறை என்பது ஒரு போதும் பெண்ணுக்குத் தேவையற்றது. வளர்ச்சியடைந்த ஆண், தனது தாயைவிட்டுப் பிரிந்து, போரின் மூலம் எதிர்க்குழுவினரை அழித்தொழித்து அதிகாரம் செலுத்த முயலுகிறான். ஆணின் இயல்பு வீரம், மறம் என உருவாக்கப்படும் புதிய சொல்லாடலில், பெண்ணின் சமூக இருப்பு, வெறுமனே பதிலியாக மாறுகின்றது. சமூகச் செயற்பாட்டில், பெண்ணுடலை இரண்டாம் தரப்படுத்த முயலுவது தொடர்ந்து நடைபெற்றது. பெண் என்பவள் மெல்லியராக, மடமகளாகச் சித்திரிக்கப்படுவது இன்று வரை தொடர்வது விநோதம்தான்.
பெண் பூப்படைவதிலிருந்து முழுமையானவள் என்ற கருத்து சங்க இலக்கியப் பிரதிகளில் காணப் படுகிறது. பெண் குழந்தை பற்றிய சிறுகுறிப்புக்கூட சங்க இலக்கியத்தில் இடம் பெறவில்லை. கன்னிப்பெண், குடும்பத்தலைவி, பரத்தை, விதவை என் உடல்ரீதியாகப் பெண்ணை அணுகிடும் போக்கு சங்க காலத்தில் நிலவியது. பெண்ணின் தனித்தியங்கும் ஆற்றலைக் கட்டுப்படுத்தி அவளை முழுக்க ஆணைச் சார்ந்து இயங்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டது. ஆணின் உடமையானது, பரம்பரையாக மகனுக்குச் சேரவேண்டும் என்ற ஆண் மையப்போக்கின் விளைவு, பெண்ணின் நிலையைத் தீர்மானித்தது.
போர் என்பது ஆணுக்குரியதாக முழுக்க மாறி விட்ட சூழலில், தாங்கள் வாழும் சமூகத்தினரைக் காத்திடவும், குறுநில மன்னர்களின் நலனுக்காகப் போரில் ஈடுபடுவதற்காக ஆண் குழந்தைகளைப் பெற்றுத் தருவது பெண்களின் கடமையாகப் புறநானூறு சித்திரித்துள்ளது. போர்க்களத்தில் மகன் இறந்தாலும் அதைக் குறித்துப் பெருமிதம் அடைவதுதான் வீரத்தாயின் சிறப்பெனக் கருதப்பட்டது.
"மீன் உண் கொக்கின் தூவி அன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன்" என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே! கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே!
(புறநானூறு:பா.277).
பூங்கண் உத்திரையார் வீரம் குறித்த புனைவைத் தனது பாடலில் கட்டமைத்துள்ளார். கொக்கின் மெல்லிய இறகு போன்ற நரைத்த கூந்தலுடைய வயதான தாயின் இளைய மகன், போரில் எதிர்த்து வந்த யானையைக் கொன்றுவிட்டு, அவனும் இறந்து விட்டான். இச்செய்தியைக் கேட்டவுடன், அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சிக்கும் மேலாகத் தாய் மகிழ்ந்தாள்; கண்ணீர் உகுத்தாள். இப்பாடலில், தாய்க்கும் மகனுக்குமான குருதித் தொடர்பினை விட, அரசியல் உறவு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. மகனின் இறப்பு தரும் வலியை விட, வீரமான மரணம் குறித்துத் தாய் மகிழ வேண்டும் என்ற போதனை பாடலின் வழியே வெளிப்பட்டுள்ளது.
'கெடுக சிந்தை கடிது இவள் துணிவே' எனத் தொடங்கும் ஒக்கூர் மாசாத்தியார் பாடல் (புறம்:279) 'தாய்' பற்றிய புதிய பிம்பத்தைக் கட்டமைத்துள்ளது. பெண் என்ற நிலையில் இழப்பின் வேதனையைப் பொருட்படுத்தாமல், சமூதாயத்திற்காக வாழ்கின்றவள் 'மூதின் மகளிராதல்' நிலையை அடைகின்றாள். இதுவரை நடைபெற்ற போர்களில் அவளுடைய தந்தை, கணவன் வீரத்துடன் போரிட்டு மடிந்துவிட்டனர். இன்று போர் முரசு ஒலிப்பதைக் கேட்டவுடன், தனது ஒரே மகனான சிறுவனைப் போருக்கு ஆயத்தமாக்கிக் கையில் வேலைக் கொடுத்து 'செருமுகம் நோக்கிச் செல்க' என ஆணையிடுகிறாள்.
போரில் தன்னை எதிர்த்து வந்த யானையைக் கொன்று இறந்தவரின் தாய் அவனைப் பெற்ற காலத்திலும், பெரிதும் மகிழ்ந்தவளாய்க் கண்ணீர் பெருக்கினாள். மகனின் இழப்பைவிட அவனது வீரச்செயல் தந்த பெருமிதம் காரணமாக மகிழ்ச்சி அடைவதுதான் தாய்க்கு மகிழ்ச்சி தரும் என்பது நுண்ணரசியல் சார்ந்தது.
நரம்பு எழுந்து உலறிய நிரம்ப மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படை அழிந்து மாறினன் என்று பலர்கூற
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலை அறுத்திடுவென், யான்எனச் சினைஇக்
கொண்ட வாளடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே!
(புறநானூறு: 278)
போர்க்களத்திலிருந்து தனது மகன் ஓடிப்போனான் என்பதைக் கேள்விப்பட்ட தாய் மனவருத்தம் அடைந்தாள். கையில் வாளை ஏந்தி போர்க்களமடைந்த அவள், தனது மகன் புறமுதுகிட்டுச் சென்றிருந்தால் அவனுக்குப் பால் கொடுத்த முலைகளை அறுத்தெறி வேன், எனச் சூளுரைத்தாள். மார்பில் விழுப்புண்ணுடன் செங்குருதிப் படிந்து சிதைந்து கிடந்த மகனின் பிணத்தைக் கண்டவுடன் அவளடைந்த மகிழ்ச்சி, அவனைப் பெற்றெடுத்த காலத்திலும் பெரிதாக விளங்கியது.
இனக்குழுவின் நலன் அல்லது குறுநில மன்னரின் நில விரிவாக்கம் அல்லது வேந்தனின் அரசியல் மேலாதிக்கம் காரணமாக நடைபெற்ற போரில் தாய்-மகன் உறவு பற்றிய மதிப்பீட்டினை காக்கைப் பாடினியார் பதிவாக்கியுள்ளார். போருக்காக ஆணைப் பெற்றுத் தந்துவிட்டு, ஒதுங்கியிருப்பது பெண்ணின் இயல்பல்ல எனப் போதிக்கும் பாடல், மகனின் வீரச் செயலுக்காக மகிழ்வதுதான் தாயின் இயல்பு எனப் புதிய நெறி வகுத்துள்ளது.
போர்க்களத்தில் போராடிய வீரனைப் பகைவர்கள் தாக்கிக் கொன்றனர். வீரமரணம் அடைந்தவனுடைய தாய் அவனுடைய வீரச்செயல் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அப்போது அவளுடைய வற்றிய முலைகளில் பால் ஊறிச் சுரந்தன என (புறநானூறு.295) வீரத்தைப் போற்றியுள்ளார் ஒளவையார்.
'போர்க்களத்தில் வீர மரணம்' என்ற வீரப்புனைவு மூலம் பெண் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்பது புறம் சித்திரிக்க விழையும் குடும்ப உறவில் முக்கியமான செய்தி. மேலாதிக்கம் அல்லது நிலம் காரணமாக நடைபெறும் குருதி சிந்தும் அரசியலில் ஆணுடல்கள் தேவைப்படுகின்றன. பெற்ற குழந்தையின் மீது பாசம் வைத்திருக்கும் பெண்ணின் இயல்பைச் சிதைத்து விட்டுப் புதிய வகைப்பட்ட பேச்சுகளைப் புறப் பாடல்கள் உருவாக்கிட விழைந்துள்ளன. இறந்த மகனுக்காக அழுது புலம்புவதைவிட, அவனின் வீரத்துக்காக மகிழ்வது மேலானது என்ற கருத்தியல் பெண் கவிஞர்களின் கவிதைகளிலும் வெளிப் பட்டுள்ளன. போர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள ஆண் மேலாதிக்கச் சமூக அரசியலில் பெண்கள் வெறுமனே பார்வையாளர்களாக மாறிவிட்ட நிலையைப் பாடல்கள் சித்திரித்துள்ளன.
"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்நடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!
(புறநானூறு:312)
புதல்வனைப் பெறுதல் மட்டும் தாயாகிய பெண்ணின் கடன் எனத் தொடங்கும் பொன்முடியாரின் பாடல், தந்தை, கொல்லன், வேந்தன் போன்றோர் வீரனாக உருமாறுகின்ற இளைஞனின் வாழ்க்கையில் வகிக்கும் பங்கு பற்றி விவரித்துள்ளது. யானையை எதிர்க்கும் ஆற்றலுடன் போரிடுவது இளைஞனின் கடன் என்ற பாடல் வரி, வீரம் பற்றிய புனைவைக் கட்டமைக்க முயலுகிறது. குடும்பத்தைவிட வேந்தனுக்காகச் செய்கின்ற போர் முதன்மையானது என்ற கருத்து பொன்முடியாரின் பாடலில் வெளிப் பட்டுள்ளது.
சிற்றில் நல்தூண்பற்றி நின்மகன்
யாண்டு உளனோ என வினவுதி என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன், ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்அளை போல்
ஈன்ற வயிறோ இதுவே!
தோன்றுவன் மாதோ! போர்க்களத் தானே!
(புறநானூறு: 86)
தனது மகனைப் பற்றிக் கேட்பவனிடம், "அவன் எங்கே இருப்பான் என்பதை நானறியேன். மலைக் குகையில் பதுங்கிக் கிடந்து பின்னர், வெளியே செல்லும் புலியைப் போன்று அவளைப் பெற்ற வயிறு இதுவே. அவன் தோன்றுவது போர்க்களமே" என்று பெருமித உணர்வுடன் தாய் சொல்கிறாள். மகன் புலி போன்றவன் என்பதும் அவன் போர்க்களத்தில்தான் இருப்பான் எனச் சொல்வதும் வீரத்தைப் போற்றுவது மட்டுமல்ல அன்றைய காலகட்டத்தில் தாய்க்கும் மகனுக்குமான உறவின் வெளிப்பாடு.
ஈன்று புறந்தருதல் என்னுடைய முதல் கடமை (புறநானூறு 312) என்ற பொன்முடியாரின் வரியானது சமூகத்தில் பெண்ணின் நிலையை அடையாளப் படுத்துகிறது.
பெண்கள், தாங்கள் வாழுகின்ற சமுதாயத்தின் நலனுக்காகவும் குறுநில மன்னர்களின் ஆதிக்க அரசியலான போர்களில் வீரத்துடன் செயல்படுவதற்காக ஆண் குழந்தைகளைப் பெற்றுத் தருவதுடன், அவர்கள் கொல்லப்படும்போது, பெருமிதம் அடைவதுதான் சிறப்பு என சங்க இலக்கியப் பிரதிகள் புனைந்துரைக் கின்றன. தாய்க்கும் மகனுக்கும் இடையிலான நெருக்கமான உறவினை அரசியலின் பெயரால் சிதைத்துப் போர்க்களத்தில் மகன் இறந்தாலும் அதனை வீரமெனப் போற்றிடும் பொதுப்புத்தியை உருவாக்கிட பெண் புலவர்களின் பாடல்கள் முயன்றுள்ளன. இனக் குழுக்களிடையே நடைபெற்ற சண்டையில் மாண்ட அல்லது குறுநிலமன்னர்களுக்கு இடையே போரில் கொல்லப்பட்ட நிலையினைத் தமிழர் வீரமெனப் போற்றுவது சரிதானா என யோசிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் போரில் மோதுகின்ற இருவருமே தமிழர்கள் தாம்.
குடி, கணம், மன்பதை என்று அடையாளப் படுத்தப்படும் இனக்குழுவில் பெண்ணுக்கான இடம் தனித்துவமானது. ஒத்த கருத்துடைய இளம்பெண்ணும், இளைஞனும் காதல் கொள்வது இயற்கை எனக் கருதப்பட்டது. மகட்பாற்காஞ்சி பாடல்கள் புதிய போக்கினை வலியுறுத்துகின்றன. போர்களின்மூலம் நிலப்பரப்பைக் கையகப்படுத்திய குறுநில மன்னர்கள் அதிகாரத்துடன் விளங்கினாலும் ஏற்கனவே பாரம்பரிய மாக வாழும் இனக்குழுவினருடன் முரண்படும் நிலையை மகட்பாற்காஞ்சி பாடல்கள் புலப்படுத்து கின்றன.
ஒரு பெண், போருக்குச் சென்ற கணவன் வெற்றியுடன் திரும்பி வரவேண்டும் என நடுகல்லைத் தொழுது வணங்கினாள்.
களிறு பொரக் கலங்கு கழல்முள் வேலி
அரிதுஉண் கூவல் அங்குடிச் சீறுர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது :
... ... .................................
(புறநானூறு: 306)
போரின் காரணமாக மறக்குல மகளிர்க்கு ஏற்படும் மனநிலையை மூதின்முல்லைத் துறைப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. அன்றைய சமூகவாழ்வில் போர் தவிர்க்க முடியாதது என்ற நிலையில், தன்னுடைய கணவன் போர்க்களத்தில் வெல்ல வேண்டும் என வேண்டுவதைத் தவிர பெண்ணுக்கு வேறு வழி எதுவுமில்லை என அள்ளூர் நன்முல்லையார் பாடல் புலப்படுத்துகிறது.
போர்க்களத்தில் காயமடைந்த வீரனைக் காப்பாற்றும் வகையில் புண்களுக்கு மருந்திட்டுக் காப்பாற்ற பெண்கள் முயன்றது பாடலில் பதிவாகி யுள்ளது (புறம்:283)
போரில் மாண்ட மன்னன், இனக்குழுவினுக்காக உயிரைத் துறந்த வீரனுக்காக நடப்பட்ட நடுகல்களுக்கு வழிபாடு எனப் பெண் கவிஞர்கள் கையறுநிலையில் பாடியுள்ளனர். எனினும் சொந்த உறவினர் மாண்டதற்கு வருந்திப் பாடல்கள் எதுவும் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போரின் போது ஆண் அடையும் மரணம் வீரம் மிக்கதாகக் கருதப்பட்ட சங்ககாலத்தில் பெண் இழப்பின் காரணமாக ஆண் அடையும் மனவேதனை துயரமான மொழியில் வெளிப்பட்டுள்ளது. தனிமனித இழப்பு ஏற்படுத்தும் வலிகள் ஆழமானவை.
யாங்குப் பெரிது ஆயினும் நோய் அளவு எனைத்தே
உயிர் செருக் கல்லா மதுகைத்து அன்மையின்
கள்ளி போகிய களியம் பறந்தலை
வெளளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் இதன்பண்பே!
(புறநானூறு:245)
"கள்ளிச்செடி நிறைந்த சுடுகாட்டில், எரியும் நெருப்பில், விறகுப் படுக்கையில் அன்பிற்குரியவளைக் கிடத்திவிட்டு இன்னும் என் உயிரைப் போக்கிக் கொள்ளாது உயிர் வாழ்கின்றேன்" எனப் புலம்பும் ஆணின் குரல் பெண் பற்றிய சமூக மதிப்பீடாகும். ஆண் துயரத்தால் அழமாட்டான் என்ற புனைவைத் தகர்த்துப் புனையப்பட்டுள்ள சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் பாடல் வரிகள், பெண்ணைப் போற்றுவதாக அமைந்துள்ளன.
சங்கப்பாடல்களில் கணவனை இழந்த பெண்ணின் அவலநிலை பற்றிய பதிவுகள் முக்கியமானவை. குடும்ப நிறுவனத்தில் கணவனான ஆணின் இழப்பு, பெண்ணின் இருப்பினைச் சிதைவுக்குள்ளாக்குகிறது.
... ... ... ...
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளைவெந்தை வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாய்இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ
... ... .........................................
(புறநானூறு:246)
நீர்ச்சோற்றுத் திரட்சியோடு எள்ளும் புளியும் சேர்த்துச் சமைக்கப்பட்டு வேளையிலையும் வேக வைத்து உணவாகக்கொண்டு, படுக்கப் பாய் இல்லாமல் கைம்மை நோன்பு நோற்று வருந்தும் நிலையைவிட இறத்தல் மேலானது என ஒரு பெண் வருந்துகிறாள். கணவன் இறந்தவுடன் பெண்ணின் சமூக இருப்பு புறக்கணிக்கப் பட்ட நிலையில், அவள் எதிர்கொள்ளும் சமூக அவலம் குறித்த பெருங்கோப்பெண்டுவின் கவிதை வரிகள் அழுத்தமான சமூகப் பதிவுகள். தலைமயிரைக் களைந்து, அல்லி அரிசியை உண்டு, அணிகலன்களை இழந்து, கைம்மை நோன்புகொண்டு வாழ்தல் இயலாது
எனக் கணவன் மரணப்படுக்கையில் உயிர் துறக்கும் நிலையினைக் கூறுகின்ற மாறோக்கத்து நப்பசலையாரின் பெண் பற்றிய பதிவுகள், அன்றைய காலகட்டத்தில் பெண்ணின் நிலையைச் சித்திரிக்கின்றது (புறம்:280)
பாரி மன்னனை இழந்த அவளது புதல்வியர் பாடியுள்ள பாடலில் துயரம் ததும்புகின்றது. அரசியல் காரணமாக ஆண்களுக்கிடையில் நடைபெறும் போர்களில், பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். வெற்றிபெற்ற மன்னர், எதிரி நாட்டுப் பெண்களைக் கவர்ந்து வந்து, கொண்டி மகளிராக்கித் துன்புறுத்துவது நடைபெற்றுள்ளது. இன்னொருபுறம் நெருங்கிய உறவினர்கள் இறந்தபின்னர், இதுவரை வாழ்ந்த வந்த வளமான வாழ்க்கையும் சிதைவடைந்த நிலையில், உணவுக்குக் கூட சிரமப்படும் சூழல் ஏற்பட வாய்ப்புண்டு. பொருளும் அதிகாரமும் மிக்க நெருங்கிய ஆண் உறவினரின் மரணத்திற்குப் பின் பெண் அடையும் மன வேதனையானது இன்றளவும் தொடர்கின்றது.
அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே.
(புறநானூறு:112)
வளமான வாழ்க்கைக்குக் குறியீடான பறம்பு மலையானது மூவேந்தரால் கைப்பற்றப்பட்ட நிலையில், பாரிமன்னரின் இழப்பு ஏற்படுத்தும் வலியைக் கண்ணீருடன் பாடியுள்ள பாடல் வரிகளில் துயரம் கசிகின்றது. சமூக மதீப்பீட்டில் ஆண்களின் நிலை குறித்த ஒளவையாரின் பாடல் குறிப்பிடத்தக்கது.
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!
(புறநானூறு:187)
ஆடவர் நல்லவராக விளங்குமிடத்தில் நிலமும் நன்முறையில் விளங்கும் என்ற ஒளவையாரின் கருத்து ஆண் பற்றிய மதிப்பீட்டை உருவாக்குகிறது. வன் முறையும் ஆதிக்கமும் மிக்க அரசியலை முன்னெடுத்துச் செல்லும் ஆண்களின் உலகம் பற்றிய ஒளவையாரின் மதிப்பீடு, இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமாக உள்ளது.
பண்டைத் தமிழரின் பண்பாடு, நாகரிகம் குறித்துப் பெண் கவிஞர்கள் சித்திரித்துள்ள பதிவுகளில் முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு:
* நிலமும் பெண்ணும் ஆணின் கட்டுப் பாட்டிற்குட்பட்டவை
* வீரம், மறம் போன்றவை ஆணுக்கானதாக முன்னிறுத்தப்பட்ட நிலையில், வீட்டிலிருத்தல் பெண்ணுக்கானது என வரையறுக்கப்பட்டிருந்தது.
* பெண்ணின் சமூக இருப்பைப் பதிலியாக்கும் நிலையில் இரண்டாம் தரப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* போருக்காக ஆண்குழந்தைகளைப் பெற்றுத் தருவதன் மூலம் பெண் பெருமிதம் அடைய வேண்டும்
* போர்க்களத்தில் தனது ஆண்குழந்தை புறமுதுகிடாமல் போரிட்டு மடிந்தது குறித்து மகிழ்ச்சியடைந்து பெண் கண்ணீர் உகுக்கின்றாள்
* தாய்க்கும் மகனுக்கும் இடையிலான நெருக்கமான உறவினைச் சிதைத்து, மகனைப் பறிகொடுத்தல் பெருமிதம் என்ற அரசியல் உருவாக்கப் பட்டுள்ளது.
* பெண்ணின் சுயவிருப்பு வெறுப்பு புறக்கணிக்கப்பட்ட நிலையை மகட்பாற்காஞ்சிப் பாடல்கள் புலப்படுத்துகின்றன.
* போருக்குச் சென்ற கணவன் வெற்றியுடன் திரும்ப வேண்டும் என வழிபடுவதைத் தவிர பெண்ணுக்கு வேறு வழியில்லை.
* இறந்த மனைவி குறித்து வருந்தும் கணவன் மனநிலை ஒரு பாடலில் பதிவாகியுள்ளது.
* கணவனை இழந்த பெண்ணின் சமூக வாழ்க்கை அவலமானதாக உள்ளது.
* கைம்பெண் வாழ்க்கையை விட இறந்த கணவனுடன் சேர்ந்து மடிவது மேல் எனப் பெண்கள் கருதுமளவு அன்றைய சூழல் நிலவியது.
* போரின் காரணமாகப் பெற்றோர், கணவன் என நெருங்கிய உறவினர் இழப்பு ஒருபுறம் எனில், பொருளாதார வாழ்க்கையும் சீரழிகின்றது.
அக இலக்கியம் காட்டும் பெண்ணிலிருந்து புறப்பாடல்கள் சித்திரிக்கும் பெண் முழுக்க மாறுபட்டு விளங்குகிறாள். பெண்ணின் தனித்து இயங்கும் ஆற்றல் மறுக்கப்பட்டு, ஆணை மையமிட்டதாக மாறும் நிலையில் பெண்ணுக்கெனத் தனித்த அடையாளம் எதுவுமில்லை எனப் பெண் கவிஞர்களின் பாடல்கள் பதிவாகியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக