சனி, 2 மே, 2015

TRB PG TAMIL:அன்புள்ள மான் விழியே, ஆசையில் ஓர் கடிதம்!

பாரதியார்  ஒரு காதலியைப் பாடுகிறார். அவள் கண்ணனைக் காதலனாகக் கருதி, அவனைத் தேடிக் காட்டில் அலைகிறாள். அதனால் இளைத்துவிடுகிறாள்:

திக்குத் தெரியாத காட்டில், உனைத்

தேடித்தேடி இளைத்தேனே!

அந்தக் காட்டில் நல்ல மரங்கள் இருக்கின்றன, விதவிதமான சுவையில் கனிகள் இருக்கின்றன, எங்கு பார்த்தாலும் மலைகள், நதிகள், மணக்கும் பூக்கள், ஒருபக்கம் கடல், இன்னொருபக்கம் நீர்ச்சுனை, முள் புதர்கள், அவற்றின் நடுவே மான்கள், புலிகள், பறவைகள், சிங்கம், யானை... இவற்றையெல்லாம் பார்த்தபடி அவள் நடக்கிறாள், கண்ணனைத் தேடுகிறாள் -

மிக்க நலமுடைய மரங்கள், பல

விந்தைச் சுவையுடைய கனிகள், எந்தப்

பக்கத்தையும் மறைக்கும் வரைகள், அங்கு

பாடி நகர்ந்து வரு நதிகள்!

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள், எங்கும்

நீளக் கிடக்கு மலைக் கடல்கள், மதி

வஞ்சித்திடும் அகழிச் சுனைகள், முட்கள்

மண்டித் துயர் கொடுக்கும் புதர்கள்!

ஆசை பெற விழிக்கும் மான்கள், உள்ளம்

அஞ்சக் குரல் பழகும் புலிகள், நல்ல

நேசக் கவிதை சொல்லும் பறவை, அங்கு

நீண்டே படுத்திருக்கும் பாம்பு!

தன்னிச்சை கொண்டலையும் சிங்கம், அதன்

சத்தத்தினில் கலங்கும் யானை, அதன்

முன்னின்று ஓடும் இளமான்கள், இவை

முட்டாது அயல்பதுங்கும் தவளை!


நடந்து நடந்து அவளுடைய கால்கள் துவள்கின்றன, மயங்கி விழப்போகிறாள்.

கால், கை சோர்ந்து விழலானேன், இரு

கண்ணும் துயில் படரலானேன், ஒரு

வேல் கைக்கொண்டு கொலை வேடன், உள்ளம்

வெட்கம் கொண்டொழிய விழித்தான்!

சட்டென்று அவள் முன்னே ஒரு வேடன் தோன்றுகிறான். அவள்மேல் காதல்வயப்பட்டு மயக்கத்தில் பிதற்றுகிறான், 'உன்மேல் எனக்கு ஆசை வந்துவிட்டது' என்கிறான், 'உன்னைக் கட்டித் தழுவ விரும்புகிறேன்' என்கிறான், 'பெண்ணே, உனக்கு நான் சாப்பாடு கொண்டுவருகிறேன், இனிமையான தேன், கள் எல்லாம் இருக்கிறது, சாப்பிட்டுக் குடித்து இன்பமாக இருப்போம்!'

'பெண்ணே, உனது அழகைக் கண்டு, மனம்

பித்தம் கொள்ளுது' என்று நகைத்தான், 'அடி

கண்ணே, எனது இருகண் மணியே, உனைக்

கட்டித் தழுவ மனம் கொண்டேன்!'

 

'சோர்ந்தே படுத்திருக்கலாமோ? நல்ல

துண்டக் கறி சமைத்துத் தின்போம், சுவை

தேர்ந்தே கனிகள் கொண்டுவருவேன், நல்ல

தேன்,கள் உண்டு இனிது களிப்போம்!'

அவன் பேச்சைக் கேட்டு அவள் நடுங்குகிறாள். தன்னுடைய காதலன் கண்ணன் இருக்கும்போது, இன்னொருவனை மனத்தாலும் அவள் எண்ண விரும்பவில்லை. 'உன் காலில் விழுகிறேன், என்னை விட்டுவிடு, நான் ஏற்கெனவே திருமணமான பெண்' என்கிறாள் -

என்றே கொடியவிழி வேடன், உயிர்

இற்றுப்போக விழித்து உரைத்தான், தனி

நின்றே இருகரமும் குவித்து அந்த

நீசன் முன்னர் இவை சொல்வேன்:

'அண்ணா, உனது அடியில் வீழ்வேன், எனை

அஞ்சக் கொடுமை சொல்லவேண்டா! பிறன்

கண்ணாலம் செய்துவிட்ட பெண்ணை, உன்தன்

கண்ணால் பார்த்திடவும் தகுமோ?'

அவள் சொல்வதை அவன் கவனிக்கவில்லை. 'எனக்கு அதெல்லாம் தெரியாது, நீதான் எனக்கு வேண்டும்' என்கிறான் -

'ஏடீ, சாத்திரங்கள் வேண்டேன், நினது

இன்பம் வேண்டுமடி கனியே, நின்தன்

மோடி கிறுக்குதடி தலையை, நல்ல

மொந்தைப் பழைய கள்ளைப்போல!'

இதைக் கேட்டு அவள் 'கண்ணா' என்று அலறுகிறாள், மயங்கி விழுகிறாள் -

காதால் இந்த உரை கேட்டேன், 'அட

கண்ணா' என்று அலறி வீழ்ந்தேன், மிகப்

போது ஆகவில்லை இதற்குள்ளே என்தன்

போதம் தெளிய நினைக் கண்டேன்!

அவள் மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்கிறாள், எதிரே கண்ணன் இருக்கிறான்.

அந்த வேடன் எங்கே? கண்ணனைக் கண்டு ஓடிவிட்டானா? 'என்னைக் காப்பாற்றிய தெய்வமே, உனக்கு நன்றி' என்கிறாள் அவள் -

'கண்ணா! வேடன் எங்கு போனான்? உனைக்

கண்டே அலறி விழுந்தானோ? மணி

வண்ணா! எனது அபயக் குரலில், எனை

வாழ்விக்க வந்த அருள் வாழி!

உண்மையில், அந்த வேடன் யாரோவா? அல்லது, கண்ணனே அவள் திக்குத் தெரியாமல் திணறியபோது அப்படி வேடம் போட்டு வந்தானா? அது நம் கற்பனைக்கு!

இந்தக் கதையை எங்கோ கேட்டதுபோல் உள்ளதல்லவா?

முருகன் - வள்ளி கதைதான். வேடன் வடிவில் வந்து மானாகிய வள்ளியை வசப்படுத்திக்கொண்டவன் கந்தன்.

சங்கரதாஸ் சுவாமிகள் அந்தக் கதையை மேடை நாடகமாக எழுதியபோது, ஒட்டுமொத்தத் தமிழகமும் அதைக் கேட்டு, பாடி ரசித்தது. பின்னர் பல திரைப்படங்களிலும் பல்வேறு வடிவங்களில் இந்தப் பாடல் புகழ் பெற்றது -

காயாத கானகத்தே, நின்றுலாவும் நற்காரிகையே!

மேயாத மான்,

புள்ளி மேவாத மான்!

 

மேவும் கானகம் அடைந்து

நறு சந்தனமும் புனுகும்

கமழும் களபங்கள் அணிந்து

சுகந்தம் மிகுந்து...

மேயாத மான்!

மானைப் பெண்ணுக்கு ஒப்பிடுவார்கள். குறிப்பாக, அவளுடைய கண்களுக்கு.

'மான் விழி, அவ

தேன் மொழி, நல்ல

மகிழம்பூவு அதரம்,

பூ நிறம், அவ

பொன்நிறம், அவ

சிரிக்க நெனப்பு சிதறும்'

என்று வர்ணிப்பார் கங்கை அமரன். அவள் சிரித்தால் சில்லறை சிதறும் என்று எல்லாப் பாடல்களிலும் கேட்டிருப்போம். அவள் சிரித்தால், பார்ப்பவர்களின் நினைப்பு சிதறும் என்றது கங்கை அமரனின் கற்பனை.

இன்னொரு காதலன் தன் காதலியை 'மான் விழியே' என்று அழைத்துக் கடிதம் எழுதத் தொடங்குகிறான்:

'அன்புள்ள மான் விழியே,

ஆசையில் ஓர் கடிதம், நான்

எழுதுவது என்ன என்றால், உயிர்க்

காதலில் ஓர் கவிதை!'

இதற்கு அவளுடைய பதில்:

'அன்புள்ள மன்னவனே,

ஆசையில் ஓர் கடிதம், அதைக்

கைகளில் எழுதவில்லை, இரு

கண்களில் எழுதிவந்தேன்!'

மான் விழி அழகு மட்டுமா? கவிதையும் எழுதும். காதலனின் கேள்விகளுக்கு அவள் சொல்லும் பதில்களைப் பாருங்கள்:

'நலம் நலம்தானா முல்லை மலரே?

சுகம் சுகம்தானா முத்துச் சுடரே?'

'நலம் நலம்தானே நீயிருந்தால்,

சுகம் சுகம்தானே நினைவிருந்தால்!'

அவன் இருந்தால் அவள் நலம், அவனுடைய நினைவுகள் இருந்தால் அவள் சுகம். வேறென்ன வேண்டும்?

காதலனின் அடுத்த கேள்வி -

'இளைய கன்னியின் இடை மெலிந்ததோ?

எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ?'

'இடை மெலிந்தது இயற்கையல்லவா,

நடை தளர்ந்தது நாணமல்லவா!'

'பெண்கள் என்றால் குண்டாகவா இருப்பார்கள்? விறுவிறுவென்று தெருவில் ஓடுவார்களா? கொடிபோல் மெலிந்துதான் இருப்பார்கள், நாணத்தால் தளர்ந்துதான் நடப்பார்கள்' என்று அவள் அன்றைய நிலைமையைப் பதிலாகச் சொல்ல, அவன் வேண்டுமென்றே, 'ஆனால் நீ வாடியிருக்கிறாயே' என்று கேட்கிறான்.

'வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ?

வாடைக் காற்றிலே வாடி நின்றதோ!'

அதற்கு அவள் முத்தாய்ப்பாகப் பதில் சொல்கிறாள், 'நான் வாடியிருப்பது உண்மைதான், ஆனால், என்னை வாடவைத்தவன் நீயல்லவா?' என்கிறாள், 'இந்தக் கொடி வாடாமல் என்றும் பசுமையாக இருக்கவேண்டுமென்றால், நாம் ஒன்றுகூடவேண்டும், பிரியாமல் வாழவேண்டும்!' என்று அழுத்தமாக அவனுக்கு உணர்த்திவிடுகிறாள்:

'வண்ணப் பூங்கொடி பெண்மையல்லவா,

வாடவைத்ததும் உண்மையல்லவா!'

இந்தப் பாடலை எழுதியவர் வாலி. இன்னொரு பாடலில் அவரே இப்படி எழுதுவார் -


எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்,

ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்!


இது கடிதத்துக்கு மட்டுமா? காதலுக்கும் பொருந்தும்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக