அரசுப் பள்ளி மாணவ - மாணவியர் என்றாலே, இளக்காரமாகப் பார்க்கும் கலாச்சாரத்துக்கு ஓங்கி ஒரு அடி கொடுத்திருக்கிறார்கள் பாரதிராஜா, வைஷ்ணவி, ஜெயநந்தனா. அரசுப் பள்ளி மாணவ - மாணவியரான இவர்கள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், 499/500 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றவர்கள்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள சின்னக் கிராமம் பரணம். இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவரான எஸ். பாரதிராஜா, விவசாயக் குடும் பத்தைச் சேர்ந்தவர். அப்பா சேகர், அம்மா கவிதா இருவருமே விவசாயிகள்.
"அம்மா அப்பா ரெண்டு பேருமே காலையில வேலைக்குப் போனா ராத்திரிதான் திரும்பி வருவாங்க. கஷ்டப்படுற குடும்பம் எங்களுது. 'படிப்புதான் நம்ம குடும்ப சூழ்நிலையை மாத்தும்டா'னு எங்க தாத்தா, பாட்டி அடிக்கடி சொல்வாங்க. வைராக்கியத்தோடத்தான் படிச்சேன். எங்க பள்ளிக்கூடம் ஒண்ணும் பெரிய வசதியான பள்ளிக்கூடம் இல்ல.
ஆனா, எங்க டீச்சர்லாம் ரொம்ப ஈடுபாட்டோட பாடம் நடத்துறவங்க. குறிப்பா, ஹெச்எம் ராஜம் நிறைய உற்சாகப்படுத்துவாங்க, உதவிசெய்வாங்க. நல்லா படிச்சு கலெக்டர் ஆகணும்; எங்களை மாதிரி ஏழை மக்களுக்கு உதவணும். நம்ம பள்ளிக்கூடம் மாதிரியான அரசுப் பள்ளிக்கூடங்கள் எல்லாத்தையும் எல்லா வசதிகளும் கொண்டதா மாத்தணும்கிறது என் கனவு. இன்னைக்கு என்னாலேயே எங்க பள்ளிக்கூடம் மேல எல்லார் கவனமும் திரும்பியிருக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா" என்கிறார் பாரதிராஜா.
ரொம்பலாம் மெனக்கெடலை!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். வைஷ்ணவி. வீடியோகிராஃபராக இருந்த தந்தை வி. ரவிச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பால் மரணமடைய தாய் காந்திமதிதான் இவருக்கு எல்லாமும். வைஷ்ணவி கதையில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. தனியார் பள்ளி வேண்டாம் என்று அடம்பிடித்து அரசுப் பள்ளிக்கு வந்தவர் இவர். "அஞ்சாவது வரைக்கும் ஒரு தனியார் பள்ளியிலதான் படிச்சேன். எதுக்கெடுத்தாலும் கண்டிப்பு. பிடிக்கலை.
அம்மாகிட்ட சொல்லி அடம்பிடிச்சு அரசுப் பள்ளியில சேர்ந்தேன். இங்கே நல்ல டீச்சர்ஸ். நல்லாவும் சொல்லிக்கொடுத்தாங்க, ஜாலியாவும் இருக்க விட்டாங்க. அன்னைஅன்னைய பாடத்தை அன்னைஅன்னைக்கே படிச்சுடுவேன். அவ்வளவுதான். ரொம்பலாம் மெனக்கெடலை. இப்படி முதலிடம் பிடிப்பேன்லாம் எதிர் பார்க்கலை. எனக்கே ஆச்சரியமா இருக்கு" என்று சொல்லும் வைஷ்ணவிக்கு மருத்து வராவது ஆசை. "கிராமங்கள்ல போய் நிறைய பேருக்கு உதவணும்ணா" என்கிறார்.
படிப்பு, விளையாட்டுனு ஒரே ஜாலிதான்
சேலம் மாவட்டம், வாழப்பாடி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவி ஜெயநந்தனா. அப்பா இளங்கோ - அம்மா தமிழ்ச்செல்வி. ஜெயநந்தனாவின் கதையும் கிட்டத்தட்ட வைஷ்ணவி கதைபோலத்தான். ஐந்தாவது வரை தனியார் பள்ளியில் படித்த ஜெயநந்தனாவை அரசுப் பள்ளியில் சேர்த்தவர் அவருடைய அப்பா. "எங்கப்பா ஒரு அரசு ஊழியர் (உணவுப் பாதுகாப்பு அலுவலர்).
ஒரு அரசு ஊழியர் பொண்ணு அரசுப் பள்ளியிலதான் படிக்கணும்னு சொல்லி திடீர்னு இங்க கொண்டுவந்து சேர்த்துவிட்டுட்டாங்க. எனக்கும் இது சந்தோஷம்தான். ஏன்னா, நான் நிறைய விளையாடுவேன். அதனால, படிக்குற நேரத்துல படிப்பு; மத்த நேரத்துல விளையாட்டுன்னு ஜாலியாதான் படிச்சேன். எங்க டீச்சர்ஸ் கொடுத்த உற்சாகம் இப்போ முதலிடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துடுச்சு" என்று சொல்லும் ஜெயநந்தனாவின் கனவு விஞ்ஞானியாவது. "நாட்டுக்கு எதாவது பெரிசா செய்யணும்" என்கிறார்.
மதிப்பெண்களைவிடவும் உண்மையில் இவர்களைக் கொண்டாடவைப்பவை இந்த வார்த்தைகள்தான்: "ஏழை மக்களுக்கு உதவணும்"; "கிராமங்களுக்குப் போய் நிறையப் பேருக்கு உதவணும்"; "நாட்டுக்கு எதாவது பெரிசா செய்யணும்"...
கனவுகள் நனவாகட்டும் செல்லங்களே!
- சி.கதிரவன், வி. சீனிவாசன், எஸ்.எஸ். லெனின்
எனக்குத் தெரிந்து ஓர் உதாரணம்: ஜோ. செந்தில்நாதன்
ஒரு பயணத்தின்போது, அந்த அற்புதமான பள்ளியை நான் கண்டேன். அப்படி ஒரு பிரம்மாண்டமான கட்டடம் ஓர் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கானது என்றால், பலர் நம்ப மறுப்பார்கள். உள்ளே ஒரு குடில். 'சுனாமியின்போது உயிரிழந்த எங்கள் குழந்தைகள் 80 பேர் நினைவாக அமைக்கப்பட்ட குடில் இது' என்றார் தலைமையசிரியர் பாலு. நினைவுத் தூணில் உள்ள பெயர்ப் பட்டியலைப் படித்தபோது, சுனாமியின் கோர முகம் கண் முன் வந்து சென்றது.
தமிழ்நாட்டிலேயே அதிகமாக உயிரிழப்புகளைச் சந்தித்த இடங்களில் ஒன்று கீச்சாங்குப்பம். சுனாமி அவ்வூர் பள்ளியையும் நிர்மூலமாக்கியது. மீண்டும் அங்கு இன்னொரு பள்ளிக்கூடம் கட்டும் சூழலில்தான், பாலு அங்கு தலைமையாசிரியராக வந்திருக்கிறார். தனித்துவமிக்க பள்ளியாக அது உருவெடுக்க வெறும் கட்டிடம் மட்டுமே போதாது என்பதை உணர்ந்தவர் பள்ளியை அனைத்து வகையிலும் தன்னிறைவு பெறவைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.
அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர்களுக்கு நாற்காலி மேஜைகளில் தொடங்கி கழிப்பறை வசதி, கணினி கல்வி வரை கொண்டுவந்திருக்கிறார். சுனாமி மறுவாழ்வுக் குடியிருப்பிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு வர அரசுப் பேருந்தையும், சொந்த செலவில் வேன் வசதியையும் செய்துகொடுத்திருக்கிறார். கற்பித்தலிலும் சிறப்புக் கவனத்தை அவர் கொடுக்க அனைத்து வகுப்புகளும் 'ஸ்மார்ட் கிளாஸ்'களாக மாறி இன்றைக்குத் தலைநிமிர்ந்து நிற்கிறது இந்த அரசுப் பள்ளி.
எவ்வளவோ ஆசிரியர்கள் பாலுவைப் போல இருக்கிறார்கள். எவ்வளவோ பள்ளிகள் இந்தப் பள்ளியைப் போல இருக்கின்றன. இதையெல்லாம் பேச யாரும் இல்லை என்பதுதான் நம் சாபக்கேடு. 'தி இந்து' அந்தக் குறையைப் போக்கிவிட்டது. ஒவ்வொரு ஆசிரியரும் இப்படித் தன் பள்ளியை மாற்ற முனைந்தால் அரசுப் பள்ளிகளில் உள்ள சகலப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடும். அரசுப் பள்ளி நம் பள்ளி. நம் கல்வி நம் உரிமை!
அஜிதனும் நியாஸும் கொடுத்துவைத்தவர்கள்! - மு. சையது அபுதாஹிர்
இன்று நான் தமிழகத்தின் பெரிய பல்கலைக் கழகம் ஒன்றின் ஆராய்ச்சி மாணவன். எனது தந்தை பீடி வேலை செய்பவர். அவர் மிகவும் கஷ்டப்பட்டுதான் படிக்கவைக்கிறார். என் தந்தைக்கு என்னைப் பற்றி ஏராளமான கனவுகள் உண்டு. ஆனால், அவர் எனது ஆர்வத்தையும் திறமையையும் உணர்ந்தவர் இல்லை. எனது தந்தையைப் போல், பெரும்பாலான தந்தையர்கள் பெரும் கனவுகளுடன், பெரும் எதிர்பார்ப்புகளுடன் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
என்னைப் போல் பெரும்பான்மை மாணவர்கள் அவர்களுக்கு விருப்பமான பாடத்தைப் படிக்காமல் வேறு ஒரு துறையில் பயணம் செய்துகொண்டிருக்கின்றார்கள். இந்தப் பயணம் எத்தகைய வெற்றியைக் கொடுக்கும், மனதுக்கு எத்தகைய சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று தெரியவில்லை.
என் பள்ளிக்கூட வாழ்க்கை சந்தோஷமாக அமைந்ததில்லை. எனது பள்ளி வாழ்க்கை என்னிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை எனக்குச் சொல்லிக்கொடுக்கவும் இல்லை. நான் பேசும்போது தெரிகிறது, எனக்கு மட்டுமல்ல; பல மாணவர்கள் இதே நிலையில் இருக்கிறார்கள் என்று.
நாம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 12 வருடங்களைப் பள்ளியில் செலவழிக்கிறோம். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? எனக்குத் தெரியவில்லை. அந்த வகையில் அஜிதனும், நியாஸ் அஹமதுவும் கொடுத்து வைத்தவர்கள்.
பெற்றோர்களுக்கு ஒரு மடல்! - வெண்மணி மாணிக்கம்
கல்வி என்பது ஒருவரை நல்ல மனிதராக உருவாக்கப் பயன்பட வேண்டும். ஆனால், இன்றைய கல்விச் சூழல் மாணவர்களை சுயநலவாதிகளாகவும் ஏற்றத்தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களாகவும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அரசுப் பள்ளிகள் மீதான நம்முடைய வெறுப்புக்குப் பின் நிறையவே கற்பிதங்கள் இருக்கின்றன.
'அரசுப் பள்ளி மாணவர்களே மோசம்' என்ற சித்தரிப்பு யாரால் எப்படி உருவாக்கப்பட்டது என்று தெரியாது, ஆனால் பலரது மனங்களில் வேரூன்றி நிற்கிறது. இவர்களுடைய அவதூறுகளுக்கெல்லாம் மாறாக அரசுப் பள்ளி மாணவர்கள் சாதித்து நிற்கும்போதுகூட, அரசுப் பள்ளிகளையோ அரசுப் பள்ளி மாணவர்களையோ இவர்கள் அங்கீகரிப்பதில்லை. கள்ள மவுனம் சாதிப்பார்கள்.
தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் படிப்பதைப் பெருமையாகக் கருதும் பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுங்கள் என யாரும் கட்டளையிடவில்லை. ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் பள்ளிகள்தான் உயர்வானவை என்கிற போலி பெருமிதத்தை நிஜமாக்க அரசுப் பள்ளிகள் மீதும் அங்கு படிக்கும் மாணவர்கள் மீது காழ்ப்பைக் கொட்டி, பிள்ளைகளை வளர்க்காதீர்கள். ஏனென்றால், ஏற்றத்தாழ்வைப் போற்றி வளர்ப்பதல்ல; ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டுவருவதே நல்ல கல்வியின் முதன்மைப் பணி. நீங்கள் ஏனைய பிள்ளைகளை மட்டப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, உங்கள் பிள்ளைகளுக்கே தீங்கிழைப்பவர்களாக மாறிவிடுகிறீர்கள்!
உண்மையைக் கண் கொண்டு பார்ப்போம்! - ஜே. ஆர். வி. எட்வர்ட்
இந்திய தொழில்நுட்பக் கழக நுழைவுத் தேர்வில் சென்னை மண்டலத்தில் இரண்டாம் நிலைத் தேர்வுக்குத் தகுதியானவர்களாகத் தேறியவர்களில் சுமார் 10% மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இது அதிர்ச்சி தரும் செய்தியாக இருக்கலாம்; ஆனால், வழக்கமான செய்திதான்.
பல ஆண்டுகளாகவே ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் தமிழக மாணவர்களின் நிலை இதுதான். ஐ.ஐ.டி. தேர்வில் தேறுவோர் விழுக்காட்டை வைத்து மட்டும் கல்வியின் தரத்தை எடை போட முடியாது என்றாலும், இன்றைய கல்வியின் யதார்த்த நிலை குறித்து கவலைப்பட வேண்டியதின் அவசியத்தை உணர்த்தும் செய்தியாக இதைக் கருத வேண்டியிருக்கிறது.
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகளிலும்கூட இதுதான் இன்றைய யதார்த்தம். நம்முடைய மெட்ரிக் பள்ளிகளுக்கே இந்தப் பெருமைகளுக்கான அங்கீகாரமெல்லாம் போய்ச்சேர வேண்டும்.
மதிப்பெண்களுக்காக மாணவர்களின் படைப்புத் திறனையும் சிந்தனைத் திறனையும் நசுக்கியடித்து, உருப்போடும் இயந்திரக் கலாச்சாரத்தைத் தோற்றுவித்தவர்கள் அவர்கள்தானே? உலகிலேயே நல்ல கல்வியைக் கொடுக்கிறோம் பேர்வழி என்று மெட்ரிக் பள்ளிகளைத் தேடித் தேர்ந்தெடுக்கும் பெற்றோர் உண்மையில் நம் பிள்ளைகளுக்கு என்ன மாதிரியான கல்விமுறையைக் கொடுக்கிறோம் என்பதைக் கண்கொண்டு பார்க்க வேண்டும். நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை நாமே நசுக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!
கைகோப்போம், துணைநிற்போம்! - சீ.நா. ராம்கோபால், புதுச்சேரி
தொடர்ந்து அரசுப் பள்ளிகள் குறித்து எதிர்மறையான கருத்துகள் வந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில், அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் 'தி இந்து'வுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மிகப் பெரிய பணி இது. என்னால் முடிந்த பணியாக 'நம் கல்வி நம் உரிமை' தொடரில் வெளிவந்த எல்லாக் கட்டுரைகளையும் பிரதியெடுத்து நான் பணிபுரியும் அலுவலகத்தில் நண்பர்களுக்குக் கொடுத்துள்ளேன். உங்களின் மகத்தான பணிக்கு நாங்கள் எப்போதும் துணைநிற்போம்!
எழுச்சி வரட்டும்! - ஹரிகரன், தோகா-கத்தார்
மிகப் பெரிய பணியைச் செய்கிறது 'தி இந்து'. 'நம் கல்வி… நம் உரிமை' தொடர் கட்டுரைகள் மிகவும் முக்கிய மானவை. அரசுப் பள்ளிகளை நோக்கி நம் மக்களின் பார்வையைத் திருப்ப இந்தக் கட்டுரைகள் பெரும் ஊக்கமாக அமையும். அதுவே அரசுப் பள்ளிகளின் மறுஎழுச்சிக்கும் வழியாக அமையட்டும்!
உரக்கச் சொல்வோம் மீண்டும்! - வே. தேன்மொழி, கோவை
நம் ஊரில், நம் வீட்டருகே, நம் கண் பார்வையில் நடைபெறும் நமக்கான அரசுப் பள்ளிகளை, நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்? அரசுப் பள்ளிகளின் மூலம் கல்வி பெற்ற தலைமுறையைச் சார்ந்தவர்கள்தான் நாம் - இன்றைய பெற்றோர். அப்போது நம்மை அறிவின் வெளிச்சத்துக்கு அழைத்துச் சென்ற அரசுப் பள்ளிகளை, இன்று அழியும் நிலை நோக்கி நகர்த்திக்கொண்டிருப்பது சரிதானா?
ஆங்கிலத்தின் வழியே தனியார் பள்ளிகளில் பயின்றால்தான் , நம் பிள்ளைகள் முன்னேற முடியும் என்பதற்கு உண்மையில் என்ன ஆதாரம், அல்லது அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதற்குதான் என்ன ஆதாரம்? இதையெல்லாம் உரக்கப் பேச வேண்டிய காலம் உருவாகிவிட்டது. அதற்கான களத்தை 'தி இந்து' அமைத்துவிட்டது. அரசுப் பள்ளி நம் பள்ளி. இதை உரக்கச் சொல்வோம் மீண்டும் மீண்டும்!
- சி.கதிரவன், வி. சீனிவாசன்,
எஸ்.எஸ். லெனின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக