இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகள், தங்கள் ஆசிரியர்களை மற்ற கல்லூரிகளுடன் பகிர்ந்து கொள்வது எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாகவே இருந்து வருகிறது. அதை நிரூபிக்க இப்போது புள்ளிவிவரங்களே உள்ளன. ஒரு கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியரின் பெயர், இன்னொரு பொறியியல் கல்லூரியின் ஆசிரியர் பணிப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. எட்டு மாநிலங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள தகவல்களில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இதுபோல் ஒரே ஆசிரியர் 2 கல்லூரிகளில் பணிபுரிவது தெரியவந்துள்ளது. இதுபோல் 8 மாநிலங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'போலி' ஆசிரியர்கள் இருப்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்கள் மூலமே தெரிகிறது.

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளும், தங்கள் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களை, வேறு கல்லூரியில் பணிபுரிய அனுப்பக் கூடாது. ஆனால், இந்த விதிமுறைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரே ஆசிரியரின் பெயர் பல கல்லூரிகளின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ராகேஷ் ரெட்டி டபுடு மற்றும் அவரது குழுவினர் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் வெப்சைட்டில் இருந்து, 'பேஃக்கல்டி' என்ற பொது வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்துள்ளனர். எட்டு மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் ஆசிரியர்கள் விவரங்களை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த முடிவுகளை 'தி இந்து' ஆங்கிலம் நாளிதழுடன் பகிர்ந்து கொண்டனர். ராகேஷ் குழுவினரின் ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள் வருமாறு:

* ஆந்திரா, தெலங்கானாவில் மட்டும் ஏறக்குறைய 8,000 ஆசிரியர் பெயர்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் ஆசிரியர் பெயர் பட்டியலில் மீண்டும் இடம்பெற்றுள்ளன. அதாவது மொத்தம் உள்ள பொறியியல் கல்லூரி ஆசிரியர்களில், நான்கில் ஒரு பங்கினர் போலி ஆசிரியர்கள். மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 1,500-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில், 90 சதவீத கல்லூரிகளில் குறைந்தபட்சம் ஒரு ஆசிரியர் பெயராவது போலியாக இடம்பெற்றுள்ளது.

* தமிழ்நாட்டில் 8,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பல கல்லூரிகளில் பணிபுரிவதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த பொறியியல் கல்லூரி ஆசிரியர்களில் ஐந்தில் ஒருவரின் பெயர் மீண்டும் இடம்பெறுகிறது. அதேபோல் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள ஆசிரியர்களில், நான்கில் ஒருவரின் பெயர் மீண்டும் இடம்பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள பொறியியல் கல்லூரிகளில் 95 சதவீதம் குறைந்தபட்சம் ஒருவர் பெயராவது போலியாக உள்ளது. மொத்தமாக பார்க்கையில் மகாராஷ்டிராவிலும் 8,000 ஆசிரியர்களின் பெயர்கள், பல கல்லூரிகளின் ஆசிரியர் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

* உத்தரப் பிரதேசத்தில் பாதிக்குப் பாதி ஆசிரியர்களின் பெயர்கள் திரும்ப இடம்பெறுகின்றன. ஒடிஸாவில்இந்த எண்ணிக்கை 40 சதவீதமாக உள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் உள்ள ஒவ்வொரு பொறியியல் கல்லூரியிலும் ஒருவரின் பெயராவது திரும்ப இடம்பெறுகிறது. ஒடிஸாவில் 2,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பெயர்களும் உ.பி.யில் 8,000-க்கும் மேற்பட்ட பெயர்களும் பல கல்லூரிகளின் ஆசிரியர் பட்டியலில் உள்ளன.

* குஜராத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரியில் 2,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பெயர்கள் இடம்பெறுகின்றன. இங்கு 97 சதவீத கல்லூரிகளில் ஒருவர் பெயராவது போலியாக இருக்கிறது. கர்நாடகாவில் 3,000-க்கும் மேற்பட்ட போலி பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு 92 சதவீதமாக உள்ளது.

இப்படி ஒரு ஆசிரியரின் பெயரே பல கல்லூரிகளில் இடம்பெறுவது குறித்து, சம்பந்தப்பட்ட கல்லூரிகளோ, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலோ விளக்கம் அளிக்க முன்வரவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டாலோ மற்றும் இ மெயிலில் கேள்விகள் அனுப்பி விளக்கம் கேட்டாலோ பதில் அளிக்கவில்லை.

இதுகுறித்து ராகேஷ் ரெட்டி கூறும்போது, ''அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் விதிமுறைகள் பகிரங்கமாக மீறப்பட்டுள்ளன. கவுன்சில் வெளியிட்ட தகவல்களை வைத்து, ஒரு ஆசிரியரின் பெயர் பல கல்லூரிகளில் இடம்பெறுவதை நம்மை போன்றவர்களாலேயே கண்டுபிடிக்க முடியும்போது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அதிகாரிகளுக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை'' என்கிறார்.

(ஐதராபாத்தை சேர்ந்த ஆர்.ரவிகாந்த் ரெட்டி, விஜயவாடாவைச் சேர்ந்த எஸ்.சந்தீப் குமார், நாகர்கோவிலைச் சேர்ந்த அறிவானந்தம் ஆகியோரும் இந்தச் செய்திக்கு தகவல்கள் அளித்து உதவி உள்ளனர்.)