ஞாயிறு, 10 மே, 2015

இலக்கணம் - 7


வரும்ம்ம்ம்ம், ஆனா வராது



சில சினிமா வசனங்களைச் சொல்கிறேன், இவற்றிடையே என்ன ஒற்றுமை என்று கொஞ்சம் யோசியுங்கள்:

* அவ்வ்வ்வ்
* கெளம்பிட்டான்ய்யா… கெளம்பிட்டான்
* வரும்ம்ம்ம்ம், ஆனா வராது
* அவனாஆ நீஈ?
* அய்யோக்யப் பயலுகளா

இவை எல்லாம் காமெடி வசனங்கள், திரையில் வடிவேலு (அல்லது அவரது குழுவில் ஒருவர்) பேசிப் பெரும் புகழ் பெற்றவை, எந்த அளவுக்குப் புகழ் என்றால், இன்றைக்கும் குத்துமதிப்பாக ஏதாவது ஒரு சானலைத் தேர்ந்தெடுத்துப் போட்டால் அதில் இந்த வசனங்களில் ஏதாவது ஒன்று ஒலித்துக்கொண்டிருக்கும்.

ஆனால், மேலோட்டமாகப் பார்த்தால், இந்த வசனங்களில் நகைச்சுவை என்று பெரிதாக எதுவும் இல்லை. அவற்றைச் சொல்லும் விதத்தில்தான் புன்னகையோ பெருஞ்சிரிப்போ வருகிறது.

உதாரணமாக, 'வரும், ஆனா வராது' என்றால் கடுப்புதான் வரும், 'வரும்ம்ம்ம், ஆனா வராது' என்று சொன்னால் எப்படியோ சிரிப்பு வருகிறது. மற்ற வசனங்களும் இதேபோல்தான்.

இங்கே 'வரும்' என்ற சொல்லை வேண்டுமென்றே 'வரும்ம்ம்' என்று சற்றே அளவு நீட்டியிருக்கிறார் வசனம் பேசியவர். அதன்மூலம், தான் நினைத்த உணர்ச்சியை அங்கே கொண்டுவந்திருக்கிறார்.

வசனங்களில்மட்டுமல்ல, பாடல்களிலும் இந்த வழக்கம் உண்டு.

'காதல் கவிதைகள் படித்திடும் நேரம்' என்று ஒரு பிரபலமான பாட்டைக் கேட்டிருப்பீர்கள். அதன் தொடக்கத்திலேயே, 'காஆதல் கவிதைகள் படித்திடும் நேஏரம்' என்று ஒலிப்பதைக் கேட்கலாம்.

அதே பாடலின் சரணத்தில், 'பூ மாலைகள் கொஞ்சும், பாமாலைகள் கெஞ்சும்' என்ற வரிகள் 'கொஞ்சும்ம்', 'கெஞ்சும்ம்' என்றுதான் ஒலிக்கின்றன. கேட்டுப்பாருங்கள்.

சினிமாவில்மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் இதைச் சாதாரணமாகப் பார்க்கலாம். ஒருவரைப்பற்றி இன்னொருவரிடம் கிண்டலாகப் பேசியும்போது, 'அவன் பெரிய்ய இவன்' என்கிறோமே, அங்கே 'பெரிய' என்பது எப்படிப் 'பெரிய்ய' என்று மாறியது? ஏன் மாறியது?

சென்ற சில அத்தியாயங்களில் குறுக்கம், குற்றியலுகரம், குற்றியலிகரம் என்று சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட அளவில் ஒலிக்கும் சொல் ஒன்று, அதிலிருந்து குறைந்து ஒலிப்பதைப் பார்த்தோம். இப்போது அதற்கு நேர் எதிராக, 'வரும்' என்பது 'வரும்ம்ம்ம்' என்று நீள்வதுபோல, 'பெரிய' என்பது 'பெரிய்ய' என்று மாறுவதுபோல, சில எழுத்துகள் வெவ்வேறு காரணங்களுக்காக அளவில் மிகுந்து ஒலிப்பதைப் பார்க்கவிருக்கிறோம்.

இதற்கான இலக்கணப் பெயர், அளபெடை!

குறுக்கம், குற்றியலுகரம், குற்றியலிகரம் போன்றவற்றுக்கும் அளபெடைக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம், அங்கே எழுத்துகள் தானாகக் குறுகும், அவை குறுகாமல் இயல்பாக ஒலிக்கும் வாய்ப்பே கிடையாது.

ஆனால் அளபெடை என்பது அப்படியல்ல, பெரும்பாலான நேரங்களில் எழுதுகிறவர் (அல்லது பேசுகிறவர்) வேண்டுமென்றே அதனை நீட்டுவார், அவர் விரும்பினால் அதனை நீட்டாமல் அப்படியே விடலாம். அப்போதும் அதற்குப் பொருள் இருக்கும்.

உதாரணமாக, 'வரும்' என்பது பொருளுள்ள ஒரு வார்த்தை, அதனை 'வரும்ம்' என்று இழுத்தால் அது அளபெடை. ஒருவர் தன் விருப்பப்படி இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

'அளபு' என்பதன் பொருள், 'அளவு', ஆங்கிலத்தில் Measurement. அளபெடுத்தல் என்றால், இந்த அளவுதான் இருக்கவேண்டும் என்று வரையறுத்த ஓர் எழுத்து, அதிலிருந்து மிகுந்து ஒலிப்பது.

உதாரணமாக, 'வரும்ம்ம்ம்' என்பதில் அரை மாத்திரை ஒலிக்கவேண்டிய 'ம்', நிறைய நீண்டு ஒரு மாத்திரைக்குமேல் ஒலிக்கிறது. 'காஆதல்' என்பதில் இரண்டு மாத்திரைகள்மட்டுமே ஒலிக்கவேண்டிய 'கா', அதைவிட இன்னும் அதிகமாக நீண்டு ஒலிக்கிறது.

அளபெடையைப் பல கோணங்களில் வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். அவற்றுள் அடிப்படையாக இரண்டு வகைகள், உயிரளபெடை, ஒற்றளபெடை.

பெயரைக் கேட்டாலே விளக்கம் தேவைப்படாது, உயிரெழுத்து (அல்லது அதன் குடும்பமான உயிர்மெய்யெழுத்து) அளவு மிகுந்து ஒலித்தால், உயிரளபெடை. மெய்யெழுத்து அளவு மிகுந்து ஒலித்தால், ஒற்றளபெடை.

உயிரெழுத்தில் ஏழு நெடில்களும் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ), அவற்றைச் சார்ந்த உயிர்மெய் எழுத்துகளும் தங்களுக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து நீண்டு ஒலிப்பதைதான் உயிரளபெடை (உயிர் + அளபெடை) என்கிறோம். உதாரணமாக, மேலே நாம் பார்த்த 'காதல் கவிதைகள்' என்பதில் முதல் எழுத்து 'கா' நீண்டு ஒலிக்கிறது.

ஆனால், எப்போது இப்படி நீட்டி உச்சரிக்கவேண்டும், எப்போது இயல்பாக உச்சரிக்கவேண்டும் என்கிற வித்தியாசம் வாசிப்பவர்களுக்குத் தெரியவேண்டுமல்லவா? அப்படி அளபெடையைக் குறிப்பிடுவதற்காக, உயிர் அல்லது உயிர்மெய் நெடிலைத் தொடர்ந்து அதன் இன எழுத்தை ஒருமுறை எழுதுவார்கள். இதற்கான தொல்காப்பியச் சூத்திரம்:

இன எழுத்துகளைப்பற்றி நாம் ஏற்கெனவே விரிவாகப் பார்த்திருக்கிறோம். நினைவில் இல்லாவிட்டால் அந்த அத்தியாயத்தைத் தேடிப் பிடித்துப் படித்துவிடுங்கள்.

இங்கே, 'காதல்' என்பதைக் 'காஅதல்' என்று எழுதுவார்கள். ஏனெனில், 'கா' என்பதில் உள்ள 'ஆ' என்பது நெடில், அதன் இன எழுத்து 'அ', ஆகவே, 'காஅதல்' என்று அளபெடையைக் குறிப்பிடுகிறோம்.

இன்னொரு பாட்டு, 'கீதம் சங்கீதம்' என்று வரும், அங்கே 'கீ' என்பது நீண்டு ஒலிக்கும், அதனைக் 'கீஇதம்' என்று எழுதவேண்டும். 'ஈ' நெடிலின் இன எழுத்து 'இ' குறில்.

ஆனால், ஐ, ஔ என்ற நெடில்களுக்குக் குறில் கிடையாதே. அவற்றை எப்படி அளபெடையில் குறிப்பிடுவது?

இதற்குத் தொல்காப்பியம் தரும் சூத்திரம்:

ஐ, ஔ என்னும் ஆ ஈர் எழுத்திற்கு
இகரம் உகரம் இசை நிறைவு ஆகும்

அதாவது, ஐ, ஔ என்ற எழுத்துகளின் இசையை நிறைக்க (அளவு நீளுதலைக் குறிப்பிட), முறையே இ மற்றும் உ என்ற எழுத்துகளைப் பயன்படுத்தலாம்.

ஆக, உயிரளபெடையில் மொத்தம் ஏழு வகை:

* ஆஅ
* ஈஇ
* ஊஉ
* ஏஎ
* ஐஇ
* ஓஒ
* ஔஉ

அது சரி, உண்மையில் இந்த அளபெடையின் நோக்கம்தான் என்ன? 'காஅதல்', 'கீஇதம்' என்று இல்லாமல் அதைக் 'காதல்', 'கீதம்' என்று உச்சரித்தால் என்ன கெட்டுப்போய்விடும்?

நீங்களே பாடிப் பாருங்கள், இசை கெட்டுப்போய்விடும் என்பது புரியும். பாடலின் தன்மைக்கு ஏற்ப ஒரு நெடிலைச் சற்றே நீண்டு ஒலிக்கச் செய்கிறார்கள். அது காதுக்கு இனிமையாக இருக்கிறது. தொல்காப்பியம் இதனை 'இசை நிறைத்தல்' என்று அழகாகக் குறிப்பிடும்.

ஏற்கெனவே, உணர்ச்சிகளைச் சரியான விகிதத்தில் தெரியப்படுத்துவதற்காக அளபெடையைப் பயன்படுத்தலாம் என்று பார்த்தோம், வடிவேலு காமெடி உதாரணங்களுடன்.

இந்த இரண்டு தவிர, இன்னும் சில காரணங்களும் உண்டு.

நிறைய சினிமா உதாரணங்களைப் பார்த்துவிட்டோம், இப்போது ஓர் இலக்கிய உதாரணம், திருக்குறளில் அளபெடையை நிறைய பார்க்கலாம். உயிரளபெடைக்கு உதாரணமாக இந்தக் குறள், இதுவும் 'காஅதல் கவிதை'தான்:

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்

காதலன் லாப்டாப்பைத் தோளில் மாட்டிக்கொண்டு கம்பெனி பஸ்ஸில் புறப்பட்டுச் சென்றுவிடுகிறான். அவனைப் பிரிந்து வாடும் காதலி சொல்கிறாள், 'அவனுக்கு வேலை முக்கியம், கிளம்பிப் போய்ட்டான், அவன் வருவான்னு ஆசைப்பட்டுகிட்டு நான் இன்னும் இருக்கேன்.'

அந்த 'இன்னும் உளேன்' என்பதில் உள்ள 'உம்'முக்குள் பொங்கும் உணர்ச்சிகளை வியக்க இப்போது நேரம் இல்லை, நம் பாடத்துக்கு ஏற்ப 'நசைஇ' என்ற சொல்லைமட்டும் கவனிப்போம்.

'நசை' என்றால் விருப்பம். அதில் வரும் 'சை' என்ற எழுத்தை, அதில் வரும் 'ஐ' என்ற நெடிலைக் கொஞ்சம் நீட்டி, அதன் இன எழுத்தாகிய 'இ'யைச் சேர்த்து 'நசைஇ' என்கிறார் வள்ளுவர்.

இங்கே அளபெடையின் நோக்கம் இசையை ஒழுங்கு செய்வது அல்ல, இந்த அளபெடுத்தலினால், பெயர்ச்சொல்(Noun)லாக இருந்த 'நசை', இப்போது வினைச்சொல்(Verb)லாகிவிட்டது. (இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வினையெச்சமாகிவிட்டது, அதைப் பற்றிப் பின்னால் விரிவாகப் பார்க்கலாம்) அதாவது, 'விருப்பம்' என்பது மாறி, அது 'விரும்பி' என்ற பொருளைத் தரத் தொடங்கிவிட்டது.

இப்படி அளபெடை என்பது எதற்காகச் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து அதில் பல வகைகள் உண்டு. அந்த பட்டியலைப் பார்ப்பதற்குமுன்னால், உயிரளபெடை எங்கெல்லாம் வரும் என்று தெரிந்துகொள்வோம்:

* ஒரு சொல்லின் தொடக்கத்தில்
* சொல்லின் நடுவே
* சொல்லின் நிறைவாக

உதாரணமாக, நாம் ஏற்கெனவே பார்த்த 'காஅதல்' என்பதில், சொல்லின் தொடக்கத்தில் உயிரளபெடை வருகிறது, 'நசைஇ' என்பதில், சொல்லின் நிறைவாக உயிரளபெடை வருகிறது. 'வருவதூஉம்', 'எடுப்பதூஉம்', 'செறீஇய' போன்ற உதாரணங்களில் சொல்லின் நடுவே உயிரளபெடை வருகிறது.

'நசைஇ', 'செறீஇய' என்றெல்லாம் நாம் பேசுவதில்லையே, வேறு எளிய உதாரணங்களைத் தரக்கூடாதா?

தாராளமாக, சினிமாப் பாட்டிலேயே உதாரணம் சொல்லலாம், 'ஆத்தாடி இள மனசொண்ணு றெக்கை கட்டிப் பறக்குது சரிதானா' என்ற பாடலின் முதல் வரியைக் கேளுங்கள்.

'ஆத்தாடி' என்ற சொல்லில் 'ஆ' இயல்பாகதான் ஒலிக்கிறது, ஆனால் 'தா' என்பது நீண்டு ஒலிக்கிறது, 'டி' என்ற குறில்கூட, 'டீ' என்று நீட்டப்பட்டு, பின்னர் இன்னும் நீண்டு ஒலிக்கிறது. இதேபோல் 'சரிதானா' என்பதிலும் 'தா' என்ற நெடில் இயல்பாக ஒலிக்க, 'னா' என்ற நெடில் நீண்டு ஒலிக்கிறது.

ஆக, இதனைச் செய்யுளில் எழுதினால் 'ஆத்தாஅடீஇ', 'சரிதானாஅ' என்று எழுதுவோம். அவற்றைப் படிக்கும்போது அந்தந்த இடத்தில் நீட்டிப் படிப்போம்.

இன்னும் சொல்லப்போனால், நாம் அதனைச் 'சரிதானாஅ' என்று எழுதுவதும் தவறு, 'சரிதானாஅஅ' என்று எழுதினால்தான் சரி!

எதற்கு இரட்டைக் குறில்?

இதனை 'ஈரளபெடை' என்பார்கள். அதாவது, இரட்டை அளபெடை.

'சரிதானா' என்பதில், 'னா' என்ற நெடில் சாதாரணமான அளபெடையைவிட இருமடங்காக (அல்லது அதைவிடவும் அதிகமாக) நீண்டு ஒலிக்கிறது. அதனால்தான் 'னாஅ' என்று எழுதுவதற்குப் பதில் 'னாஅஅ' என்று இரட்டைக் குறில்களால் அதனைக் குறிப்பிடுகிறோம்.

நெடில் சரி, குறில் அளபெடுக்குமா?

சரியான பதில், 'இல்லை', ஆனால் கொஞ்சம் சுற்றி வளைத்து 'ஆமாம்' என்றும் சொல்லலாம். காரணம், குறில் அளபெடுத்தால், தன்னுடைய இயல்பான அளவாகிய ஒரு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலித்தால், உடனே அது நெடிலாகிவிடுகிறது, அதன்பிறகு, அந்த நெடில் அளபெடுக்கமுடியும்.

உதாரணமாக, நாம் மேலே பார்த்த 'ஆத்தாடி' என்பதில் வரும் 'டி' என்ற குறில் 'டீ' என்ற நெடிலாக மாறி, அதன்பிறகு அளபெடுக்கிறது. வெறுமனே 'டி' என்ற குறில் தானாக அளபெடுக்கமுடியாது, வேண்டுமானால் சொல்லிப்பாருங்கள், கேட்பதற்கு நன்றாக இருக்காது.

ஆக, இரண்டு மாத்திரை நெடில் அளபெடுக்கும், ஒரு மாத்திரைக் குறில் அளபெடுக்காது. அப்படியானால், அரை மாத்திரை உள்ள மெய் எழுத்துகள்?

அவை தாராளமாக அளபெடுக்கும். 'வரும்ம்ம்ம்' என்று ஏற்கெனவே உதாரணம் பார்த்திருக்கிறோம்.

மெய்யெழுத்துகள் அளபெடுப்பதை 'ஒற்றளபெடை' என்று அழைக்கிறோம். ஒற்று + அளபெடை.

மொத்தம் பதினெட்டு மெய்யெழுத்துகள் உண்டு. ஆனால் அவை எல்லாம் அளபெடுக்காது. அவற்றுள் பத்து எழுத்துகளும், ஆய்த எழுத்து ஒன்றுமாக, ஒற்றளபெடையில் மொத்தம் 11 வகை:

அந்தப் பதினொரு எழுத்துகள்: ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள், ஃ. இவை அளபெடுக்கும்போது (இயல்பிலிருந்து நீண்டு ஒலிக்கும்போது) அதே உயிரெழுத்தைப் பக்கத்தில் இன்னொருமுறை எழுதுவார்கள்.

உதாரணமாக, 'வரும்' என்றால் அது அளபெடை இல்லை. அதையே 'வரும்ம்' என்று எழுதினால், அங்கே மெய்யெழுத்து (ம்) நீண்டு ஒலிக்கிறது என்று பொருள்.

உயிரளபெடை சொல்லின் முதலில், நடுவே, நிறைவில் என மூன்று இடங்களில் வரும் என்று பார்த்தோம். ஒற்றளபெடை சொல்லின் நடுவிலும் நிறைவிலும்தான் வரும். காரணம், மெய்யெழுத்துகள் சொல்லின் தொடக்கத்தில் இடம்பெறாது.

உதாரணங்கள்:

* சொல்லின் நடுவே: அங்ங்கே பார்த்தேன், கெஞ்ஞ்சிக் கேட்டேன்!
* சொல்லின் நிறைவில்: தங்கம்ம், என்மேல் இரக்கம்ம் காட்டக்கூடாதா?

உயிரளபெடையும் சரி, ஒற்றளபெடையும் சரி, செய்யுள்கள், இசைப்பாடல்களில் குறியீடுகளாகக் காண்பிக்கப்படும், இயல்பாக நம் பேச்சிலும் பயன்படும், ஆனால் உரைநடையாக எழுதும்போது அவற்றை நாம் பயன்படுத்துவதில்லை. அப்படிப் பயன்படுத்தினாலும் தவறில்லை. வாசிப்பவர்களுக்குப் புரிந்தால் சரி.

உண்மையில், அளபெடை என்பது வெறும் இலக்கண உத்திமட்டுமல்ல, அதை இன்னும் Creativeஆகப் பயன்படுத்திப் பல நுட்பமான விஷயங்களைச் செய்யமுடியும், செய்திருக்கிறார்கள், உதாரணமாக, இந்தப் பாடல்:

'மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம்' என்ப; யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்
பசைஇப் பசந்தன்று, நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே!

குறுந்தொகையில் கபிலர் எழுதிய பாடல் இது. மிகச் சுவாரஸ்யமான காஅதல் பாட்டு.

விஷயம் இதுதான், காதலியைப் பிரிந்து சென்றான் ஒரு காதலன், அப்போது 'கடவுள் மேல் ஆணையாக இந்தத் தேதிக்குள் திரும்பி வருவேன்' என்று அவளிடம் ஒரு சத்தியம் செய்தான்.

இந்த ஆம்பளைப் பயல்கள் எப்போ வாக்குப்படி நடந்திருக்கிறார்கள்? சொன்ன தேதியில் அவன் திரும்பி வரவில்லை. எப்போது வருவேன் என்று ஈமெயில்கூட அனுப்பவில்லை.

இப்போது, காதலிக்கு இரண்டு பிரச்னைகள், ஒருபக்கம், அவனைப் பிரிந்த துயரம், 'அவன் எப்ப வருவானோ!' என்கிற ஏக்கம், இன்னொருபக்கம், சத்தியத்தை மீறியதற்காக அவனைக் கடவுள் தண்டித்துவிடுமோ என்கிற கவலை. அவள் கடவுளிடம் சென்று அவனுக்காகப் பரிந்து பேசுகிறாள்:

'இந்த மன்றத்தின் மரங்களில் குடிகொண்டிருக்கும் முதிர்ந்த தெய்வங்களே, உங்களை வணங்குகிறேன்,

சொன்ன சொல் தவறுகிற கொடியவர்களை நீங்கள் தண்டித்துவிடுவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபற்றி உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும்.

என் காதலன் கொடியவன் அல்லன். என்னிடம் அவன் திரும்பி வருவதாகச் சத்தியம் செய்தது உண்மைதான். உரிய காலத்தில் திரும்பாததும் உண்மைதான்.

ஆனால், அவனால் என்னுடைய நெற்றியில் பசலை படர்ந்தது, தோளெல்லாம் நெகிழ்ந்துவிட்டது என்று ஊர் பேசுகிறது. இது உண்மை அல்ல, பொய்.

என்னுடைய மனத்தில் அவன்மீது காதல் தோன்றியது. அது பெருகிய வேகத்தால்தான் எனது நெற்றிமீது பசலை படர்ந்தது, எனது தோள்கள் நெகிழ்ந்தன, இதற்கும் அவனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, எனக்காகக் கோபப்பட்டு அவனைத் தண்டித்துவிடாதீர்கள்.'

என்னதான் காதலன் சொன்ன சொல்லைக் காப்பாற்றாவிட்டாலும், அவன்மீது இவளுக்குக் கோபம் இல்லை, அக்கறைதான், அவனைக் கடவுள் தண்டித்துவிடுமோ என்கிற பயம்தான். அதைப் பாட்டில் எழுத வரும் கபிலர், ஊரார் பேச்சை அவள் சொல்லும்போது வரிசையாக மூன்று அளபெடைகளைப் பயன்படுத்துகிறார்: 'மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள் கொடியோர்த் தெரூஉம்'.

இந்த வரியை இன்னொருமுறை படித்துப் பாருங்கள், அவளுடைய குரல் பயத்தில் நடுங்குவதுபோல் கேட்கிறதல்லவா?

கபிலர் இதற்காகதான் அந்தப் பாடலை அளபெடைகளால் நிறைத்திருப்பதாக அ. வெ. சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார். மிகவும் சுவாரஸ்யமான பார்வை!

அளபெடைகளைப்பற்றிச் சொல்வதற்கு இன்னும் கொஞ்சம் மீதமிருக்கிறது. அவற்றை அடுத்த வாரம் பார்க்கலாம்.

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* அளபு, அளபெடுத்தல், அளபெடை
* உயிரளபெடை (7)
* ஒற்றளபெடை (11)
* சொல்லின் முதலில், நடுவே, நிறைவில் வரும் அளபெடைகள்
* ஈரளபெடை


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக