தமிழில் ஒரு வார்த்தை இருக்கிறது, குறுக்கம்.
நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான 'குறுகுதல்', 'குறுகி' என்ற வார்த்தையிலிருந்து வந்ததுதான் இது. 'கூனிக் குறுகி நின்றான்' என்று சர்வ சாதாரணமாகச் சொல்வோமே!
ஆக, குறுகுதல் என்றால், தன்னுடைய இயல்பான அளவிலிருந்து குறைதல் என்று அர்த்தம். கொஞ்சம் வெகுஜன மொழியில் சொல்வதென்றால், 'அமுக்கி வாசித்தல்'!
தமிழ் இலக்கணத்தில் நான்குவகையான 'குறுக்கம்' உண்டு. அவை:
* ஐகாரக் குறுக்கம்
* ஔகாரக் குறுக்கம்
* மகரக் குறுக்கம்
* ஆய்தக் குறுக்கம்
அதாவது, ஐ, ஔ, ம், ஃ என்ற நான்கு எழுத்துகளும், சில நேரங்களில் தங்களுடைய இயல்பான மாத்திரை அளவிலிருந்து சற்றே குறைந்து ஒலிக்கும். அதைதான் இந்த நான்கு வகைக் குறுக்கங்களாகக் குறிப்பிடுகிறோம்.
உதாரணமாக, ஐகாரக் குறுக்கத்தை முதலில் எடுத்துக்கொள்வோம், கீழே உள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து சிலமுறை சத்தமாகச் சொல்லிப் பாருங்கள், நீங்கள் சொல்லும் விதத்தை நீங்களே கவனியுங்கள், ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?
* ஐ!
* ஐந்து
* பையன்
* இனிமை
* சக்கை
* இசை
* உதைப்பேன்
* தையல்
இந்தச் சொற்கள் அனைத்திலும் 'ஐ' அல்லது, அதன் குடும்ப எழுத்துகள் உள்ளன. மாத்திரைக் கணக்குப்படி பார்த்தால், இவை அனைத்தும் நெடில்கள், அதாவது, இரண்டு மாத்திரை அளவில் ஒலிக்கப்படவேண்டியவை.
ஆனால், நாம் உண்மையில் அப்படியா உச்சரிக்கிறோம்? 'ஐ!' என்று தனியே சொல்லும்போது உள்ள மாத்திரை அளவும் 'ஐந்து' என்ற சொல்லில் உள்ள 'ஐ' என்ற எழுத்தை உச்சரிக்கும் மாத்திரை அளவும் ஒன்றாகவா உள்ளது?
மேலே நாம் பார்த்த சொற்கள் ஒவ்வொன்றிலும், 'ஐ' என்ற எழுத்து (அல்லது, அதன் குடும்ப எழுத்து) உச்சரிக்கப்படும் நேரம் மாறுபடுகிறது. அதாவது, ஐ குறுகி ஒலிக்கிறது.
இதை நன்னூல் இப்படிக் குறிப்பிடுகிறது:
தற்சுட்டு, அளபு ஒழி ஐ மூவழியும் நையும்
'நையும்' என்றால், நைந்து போகும், ஒரு கயிற்றை நெடுநாள் தொடர்ந்து பயன்படுத்தினால், 'நஞ்சுபோச்சு', அதாவது 'நைந்துபோய்விட்டது' என்று சொல்கிறோமல்லவா? அதுபோல, இங்கே எழுத்து நைந்துபோகிறது!
'ஐ' என்ற எழுத்து, எப்போது நையும்? (அதாவது, எப்போது குறுகும்?)
'மூவழியும்' என்கிறது நன்னூல். அதாவது, சொல்லின் முதலில், நடுவில், நிறைவில் என மூன்று இடங்களில் ஐ எங்கே வந்தாலும் குறுகும்.
உதாரணமாக, மேலே நாம் பார்த்த 'பையன்' என்ற சொல்லில், ஐ குடும்ப எழுத்து (பை) முதலில் வருகிறது, 'உதைப்பேன்' என்ற சொல்லில், ஐ குடும்ப எழுத்து (தை) நடுவில் வருகிறது, 'இனிமை' என்ற சொல்லில், ஐ குடும்ப எழுத்து (மை) நிறைவாக வருகிறது.
இந்த மூன்று இடங்களிலும் ஐ குடும்பத்தைச் சேர்ந்த எழுத்து தன்னுடைய இயல்பான இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒரு மாத்திரையாகவோ, ஒன்றரை மாத்திரையாகவோ ஒலிக்கும்.
கொஞ்சம் பொறுங்கள், எங்கேயோ இடிக்கிறது!
ஐ குடும்ப எழுத்துகள் சொல்லின் முதலில், நடுவில், நிறைவில் என்று மூன்றே இடங்களில்தான் வரமுடியும். அந்த மூன்று இடங்களிலுமே அதற்கு மாத்திரை குறைந்துவிடும் என்றால் என்ன அர்த்தம்? 'உங்க பையன் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாறுன்னு அஞ்சு பாடத்துலமட்டும் ஃபெயில் ஆகிட்டான்' என்று சொல்வதுபோலல்லவா இருக்கிறது இது?
அதாவது, 'ஐ' என்ற எழுத்துக்கு நாம் வேலை மெனக்கெட்டு இரண்டு மாத்திரை அளவு நிர்ணயித்தோமே, அதற்கு மரியாதையே கிடையாதா? எந்த இடத்திலும் அது குறுகாமல் முழுமையாக ஒலிக்காதா?
பதற்றம் வேண்டாம், இதே நன்னூல் சூத்திரத்தில் அதுவும் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது, 'தற்சுட்டு, அளபு ஒழி' என்கிற பகுதியைக் கவனியுங்கள்.
அதாவது, இரண்டே இரண்டு சூழ்நிலைகளில்மட்டும் ஐகாரம் குறுகாது, அதாவது, தனக்குரிய இரண்டு மாத்திரைகளில் முழுமையாக ஒலிக்கும். எப்போது?
* தற்சுட்டு, அதாவது 'ஐ' என்ற எழுத்து வேறு எந்த எழுத்துடனும் கலக்காமல் தனியாக வந்து, தன்னைத்தானே சுட்டிக்காட்டும்போது அதற்கு இரண்டு மாத்திரை உண்டு
* அளபெடுக்கும்போது (இதைப்பற்றிப் பின்னர் விரிவாகப் பார்க்கவிருக்கிறோம், ஆகவே, இப்போது இதற்குத் தனியே விளக்கம் வேண்டாம்)
இந்த இரண்டு சூழ்நிலைகளைத் தவிர்த்துப் பார்த்தால், மற்ற எல்லா இடங்களிலும் ஐகாரம் குறுகிதான் ஒலிக்கும். இதை நாம் சத்தமாகச் சொல்லிப் பார்த்தே உறுதி செய்யலாம்.
அடுத்து, ஔகாரக் குறுக்கம். அதாவது, ஔ மற்றும் அதன் குடும்பத்தைச் சேர்ந்த எழுத்துகள் தங்களது வழக்கமான மாத்திரை அளவிலிருந்து குறுகி ஒலிப்பது.
ஔகாரத்துக்கும் ஐகாரத்துக்கும் ஒரே ஃபார்முலாதான். தன்னைச் சுட்டும்போதும் அளபெடுக்கும்போதும் இரண்டு மாத்திரை, மற்றபடி வேறு எல்லா இடங்களிலும் அதைவிடக் குறைவு.
ஒரு வித்தியாசம், ஐகார எழுத்துகள் சொல்லின் முதலில், நடுவில், நிறைவில் என மூன்று இடங்களில் வரும் என்று பார்த்தோம், ஆனால் ஔகார எழுத்துகள் சொல்லின் தொடக்கத்தில்மட்டுமே வரும், நடுவிலோ, நிறைவிலோ வராது.
உதாரணமாக, முன்புபோலவே இந்தச் சொற்களைச் சத்தமாகச் சொல்லி மனத்தளவில் மாத்திரைக் கணக்கு போட்டுப் பாருங்கள். எங்கே இயல்பான எழுத்து, எங்கே குறுக்கம் என்று தெளிவாகப் புரியும்:
* ஔ
* ஔவை
* பௌர்ணமி
* கௌரவம்
* மௌனம்
* வௌவால்
ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம் இரண்டும் உயிரெழுத்துகளோடு சேர்ந்தவை. மூன்றாவதாக வரும் மகரக் குறுக்கம், மெய்யெழுத்தோடு சேர்ந்தது, அதாவது, 'ம்' என்ற எழுத்து குறுகி ஒலிப்பது.
மெய்யெழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை அளவு என்று உங்களுக்கு நினைவிருக்கும், அரை மாத்திரை.
அடடா, 'ஐ', 'ஔ' ஆகியவற்றுக்காவது இரண்டு மாத்திரை இருந்தது, அதில் கொஞ்சம் குறைந்தாலும் மிச்சத்தை வைத்து ஒருமாதிரி அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம், இந்த 'ம்'க்கு இருப்பதே அரை மாத்திரைதான், அது இன்னும் குறுகுவது என்றால், கால் மாத்திரை ஆகிவிடுமா?
ஆமாம். சில நேரங்களில் 'ம்' என்ற எழுத்து தனது இயல்பான அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும். எப்போது?
'ணன முன்னும் வஃகான் மிசையும் ம குறுகும்' என்கிறது நன்னூல்.
அதாவது, கீழ்க்காணும் மூன்று சூழ்நிலைகளில் 'ம'கர எழுத்து குறுகி ஒலிக்கும்:
* ண் (அல்லது) ன் ஆகிய எழுத்துகளுக்கு அடுத்து 'ம்' வரவேண்டும் (அல்லது)
* முதல் சொல்லின் நிறைவில் 'ம்' இருந்து, அடுத்த சொல்லின் தொடக்கத்தில் 'வ' எழுத்து இருக்கவேண்டும்
இதில் முதல் வகைக்கு உதாரணம், 'மருண்ம்', இரண்டாவது வகைக்கு உதாரணம் 'போன்ம்'.
கொஞ்சம் பொறுங்கள், இவையெல்லாம் தமிழ் வார்த்தைகளா என்ன?!
உங்கள் குழப்பத்தில் நியாயம் உண்டு. மருண்ம், போன்ம் என்றெல்லாம் நான் சாதாரணமாக எழுதுவதில்லை, பேசுவதில்லை, அவை செய்யுளுக்கே உரிய சொற்கள்.
ஆகவே, இந்த முதல், இரண்டாவது வகை மகரக் குறுக்கங்களை நாம் அவ்வளவாகக் கண்டுகொள்ளவேண்டியதில்லை. நேரடியாக மூன்றாவது வகைக்குச் சென்றுவிடலாம்.
'பெரும் வளையல்' என்று சத்தமாகச் சொல்லிப் பாருங்கள். முதல் சொல்லின் நிறைவில் உள்ள 'ம்' என்ற எழுத்து ஒலிப்பதே தெரியாது, 'வாம்மா மின்னல்' என்பதுபோல் சட்டென்று காணாமல் போய்விடும்!
அதுதால் கால் மாத்திரை, மகரக் குறுக்கம். மேலே உள்ள நன்னூல் சூத்திரத்தைக் கவனியுங்கள், முதல் சொல்லின் நிறைவில் 'ம்' இருந்து, அடுத்த சொல்லின் தொடக்கத்தில் 'வ' என்ற எழுத்து இருந்தால், மகரம் குறுகி ஒலிக்கும்!
இப்போது, ஆய்தக் குறுக்கம். அதாவது, 'ஃ' குறுகுவது!
'ம்'போலவே, 'ஃ' என்ற ஆய்த எழுத்தும் அரை மாத்திரை கொண்டதுதான். சில நேரங்களில் அது இன்னும் குறுகி, கால் மாத்திரையாக ஒலிக்கும்!
எப்போது? அதற்கான நன்னூல் சூத்திரம் இது:
லள ஈற்று இயைபினாம் ஆய்தம் அஃகும்
அதாவது,
ஒரு குறில் எழுத்தின் அடுத்து லகர மெய்யோ ளகர மெய்யோ வந்து, அடுத்த சொல்லின் தொடக்கத்தில் தகரக் குடும்ப எழுத்து வந்து, அவை புணரும்போது மெய் மறைந்து அங்கே ஆய்தம் தோன்றும், அது தன் அரை மாத்திரையிலிருந்து குறுகி ஒலிக்கும்.
தலை சுற்றுகிறதா? ஒரு சின்ன உதாரணத்துடன் பார்த்தால் புரிந்திவிடும்.
உயர்திணை, அஃறிணை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். 'உயர்திணை' புரிகிறது, உயர்ந்த திணை, அதென்ன 'அஃறிணை'? அதற்கு என்ன அர்த்தம்?
அஃறிணை என்பது, அல் + திணை என்ற இரு சொற்கள் சேர்ந்து உருவானது. அதாவது உயர்வு அல்லாத திணை.
இங்கே 'அல்' என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம், தனியே ஒரு குறில் (அ) வருகிறது, அடுத்து லகர மெய் (ல்) வருகிறது. இல்லையா?
அடுத்து, 'திணை' என்ற சொல், இதன் தொடக்கத்தில், தகரக் குடும்பத்தைச் சேர்ந்த 'தி' என்ற எழுத்து வருகிறது.
மேலே சொன்ன சூத்திரப்படி, அல் + திணை சேரும்போது, லகர மெய் (ல்) மறைந்து, ஆய்த எழுத்து (ஃ) தோன்றும். இப்படிதான் அது 'அஃறிணை' என்று மாறுகிறது.
'ஃ' புரிகிறது, 'றி' எப்படி வந்தது என்று கேட்காதீர்கள், புணர்ச்சி விதிகளைப்பற்றி இதே தொடரில் பின்னர் விரிவாகப் பார்க்கவிருக்கிறோம், இப்போதைக்கு, அந்த ஆய்த எழுத்தைமட்டும் கவனியுங்கள். அது அரை மாத்திரை அளவில் ஒலிக்காமல், கொஞ்சம் குறுகி ஒலிக்கிறது, அதைதான் ஆய்தக் குறுக்கம் என்கிறோம்.
இதேபோல் இன்னும் சில உதாரணங்கள் சொல்லலாம், ஆனால் அவையெல்லாம் நாம் அன்றாடம் பயன்படுத்துகிற சொற்களாக இருக்காது, ஆகவே, இப்போது இந்த விளக்கம் போதும்.
மேலே உள்ள சூத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சில இடங்களைத்தவிர, மற்ற இடங்களிலெல்லாம் ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் முழுமையாக ஒலிக்கும். ஆகவே, அதை 'முற்றாய்தம்' என்று அழைப்பார்கள். அதற்கு எதிர்ப்பதம், குறுகி ஒலிக்கும் 'ஆய்தக் குறுக்கம்'.
நான்கு வகைக் குறுக்கங்களைப்பற்றித் தெரிந்துகொண்டோம், அடுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரத்தைப் பார்க்கலாம்!
அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.
* குறுக்கம்
* ஐகாரக் குறுக்கம் (சொல்லின் முதலில், நடுவில், நிறைவில்)
* தற்சுட்டு
* ஔகாரக் குறுக்கம் (சொல்லின் முதலில்மட்டும்)
* மகரக் குறுக்கம் (ண்ம், ன்ம், ம் வ)
* ஆய்தக் குறுக்கம் (தனிக்குறில் + ல் + தகரக் குடும்ப எழுத்து)
* முற்றாய்தம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக