செவ்வாய், 12 மே, 2015

இலக்கணம் 8


'கண்ணே சங்கீதா!'

valluvar

சென்ற அத்தியாயத்தில் அளபெடைகளைப்பற்றிப் பேசும்போது, வேண்டுமென்றே ஒரு முக்கியமான சினிமாப் பாடலைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். 'இன்னிசை அளபெடையே' என்று ஒரு பாட்டில் வைரமுத்து எழுதியிருப்பார். அதன் அர்த்தம் என்ன?

அளபெடை எதற்காகச் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து அதில் பல வகைகள் உண்டு என்று ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அவை:

* செய்யுளிசை அளபெடை (அல்லது) இசை நிறை அளபெடை
* சொல்லிசை அளபெடை
* இன்னிசை அளபெடை

, செய்யுளிசை அளபெடை. இதைத் தெரிந்துகொள்வதற்கு, கொஞ்சம்போல் மரபுக் கவிதை இலக்கண அறிவு தேவை. ரொம்பப் படுத்தாமல் மேலோட்டமாகச் சொல்கிறேன். பல்லைக் கடித்துக்கொண்டு படித்துவிடுங்கள்.

புதுக் கவிதைகளை எழுதும்போது, அவற்றில் நம் இஷ்டப்படி எந்த வார்த்தையையும் பயன்படுத்தலாம். கருத்துமட்டும் ஒழுங்காக இருந்தால் போதுமானது.

ஆனால், மரபுக் கவிதைகள் அப்படியில்லை, ஓர் அடியில் இத்தனை சொற்கள்தான் இருக்கவேண்டும், அவை இந்தவிதமான சொற்களாக அமையவேண்டும், அவற்றினிடையே எதுகை, மோனை, இயைபு போன்ற ஒற்றுமைகள் அந்தந்த இடங்களில் வரவேண்டும், இந்த வகை வார்த்தைக்குப்பிறகு இந்த வகை வார்த்தைதான் வரவேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் உண்டு.

உதாரணமாக, 'வெண்பா' வகையைச் சேர்ந்த மரபுக் கவிதை ஒன்றில் 'அன்பே' என்று ஒரு வார்த்தை இருந்தால் அடுத்த வார்த்தை 'நல்லா இருக்கியா?' என்று வரக்கூடாது, 'நலமா?' என்று அதை மாற்றி எழுதவேண்டியிருக்கும்.

'அன்பே'க்குப்பிறகு 'நல்லா இருக்கியா' ஏன் வரக்கூடாது, 'நலமா' ஏன் வரலாம் என்பதைப்பற்றிப் பேசுவது நம் தொடரின் நோக்கம் அல்ல. ஒரு குறிப்பிட்ட வகைச் சொல்லுக்குப்பிறகு இந்த வகைச் சொற்கள்தான் வரலாம் என்கிற இலக்கணம் மரபுக் கவிதைகளில் உண்டு. இப்போதைக்கு நாம் அதைமட்டும் தெரிந்துவைத்துக்கொண்டால் போதும்.

இன்னொரு விஷயம், எந்தச் சொல்லுக்குப்பிறகு எந்தச் சொல் வரலாம் என்கிற கணக்கை மனப்பாடம் செய்துவைத்துக்கொண்டு எல்லா வகைக் கவிதைகளுக்கும் பயன்படுத்தமுடியாது. இந்தக் கட்டுப்பாடுகள் ஒவ்வொரு வகைக்கும் மாறுபடும்.

உதாரணமாக, 'கண்ணே சங்கீதா' என்பது வெண்பாவில் தப்பு, ஆனால் ஆசிரியப்பாவில் சரி!

ஏன் அப்படி? ஒவ்வொரு வகைக் கவிதைக்கும் வெவ்வேறு ரூல்ஸ் என்று படுத்தாமல், எல்லாவற்றுக்கும் ஒரே செட் கட்டுப்பாடுகளை விதித்துவிடுவது சுலபமல்லவா?

மரபுக் கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான ஓசை உண்டு. உதாரணமாக, வெண்பாவுக்குச் செப்பலோசை, ஆசிரியப்பாவுக்கு அகவலோசை, கலிப்பாவுக்குத் துள்ளலோசை, வஞ்சிப்பாவுக்குத் தூங்கலோசை என்று சொல்வார்கள்.

இந்த ஓசைகள் ஒவ்வொன்றும், மேலே நாம் பார்த்த அந்தச் சொல் கட்டுப்பாடுகளால்தான் வருகின்றன. 'கண்ணே சங்கீதா' என்ற ஓசை வெண்பாவுக்குப் பொருந்தாது, ஆனால் ஆசிரியப்பாவுக்குப் பொருந்தும். அதனால்தான் இதுபோன்ற கட்டுப்பாடுகளை அமைத்திருக்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு வகை மரபுக் கவிதையையும் எழுதுவதற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் உண்டு என்று தெரிந்துகொண்டு, அதற்குள் நின்று விளையாடுவதில் தனி சுவாரஸ்யம் இருக்கிறது. இதன் நடுவே ஒரு நல்ல கருத்தையும் கவிதையில் சொல்வதென்றால் இரட்டை சந்தோஷம்.

அது நிற்க, மறுபடி செய்யுளிசை அளபெடைக்கு வருவோம். அதற்கும் மரபுக் கவிதைக்கு என்ன சம்பந்தம்?

மரபுக் கவிதைக்கென்று ஓர் ஓசை உண்டு என்று பார்த்தோம். அதைதான் இங்கே 'செய்யுளிசை' என்று அழைக்கிறோம். அதாவது, செய்யுளுக்கான இசை.

சில சொற்களால் அந்த இசை கெடும்போது, அளபெடையைப் பயன்படுத்தி ஒட்டுப்போட்டுச் சரி செய்துவிடலாம். அதுவே 'செய்யுளிசை அளபெடை', இதனை 'இசை நிறை அளபெடை' என்றும் குறிப்பிடுவார்கள்.

உதாரணமாக, இந்தத் திருக்குறளைப் பாருங்கள்:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

(கடவுளுக்குப் பதிலாகக் கணவனைக் கும்பிடும் பெண் ஒருத்தி வானத்தைப் பார்த்துக் கட்டளை போட்டால், உடனே மழை பொழியும்).

இங்கே இரண்டாவது சொல் 'தொழாள்' (தொழாதவள்) என்றுதான் இருக்கவேண்டும். ஆனால், அது வெண்பா இலக்கணத்துக்குப் பொருந்தாது. அதாவது, அங்கே 'தொழாள்' என்று எழுதினால், இது வெண்பா ஆகாது.

ஆகவே, வள்ளுவர் அதனைத் 'தொழாஅள்' என்று நீட்டுகிறார். இந்த அளபெடையின்மூலம் வெண்பா இலக்கணம் பொருந்துகிறது, அதன் இசையும் நிறைகிறது.

இதுதான் செய்யுளிசை அளபெடை, செய்யுளின் தன்மைக்கு ஏற்ப ஓர் எழுத்தை நீட்டிச் சொல்வது. அதன்மூலம் மரபுக் கவிதை இலக்கணம் கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்வது.

இதற்குக் கொஞ்சம் காமெடியாக ஓர் உதாரணம் சொல்வதென்றால், ஒரு மேடையில் ஐந்து நிமிடம் பேசியாகவேண்டும் என்று ஒருவர் கட்டுப்பாடு விதிக்கிறார். ஆனால் நாம் நான்கு நிமிடத்துக்குதான் தயார் செய்துகொண்டு வந்திருக்கிறோம். என்ன செய்வது?

பிரச்னையில்லை. நான்கு நிமிடச் சரக்கைக் கொஞ்சம் நீட்டி, முழக்கி, மானே, தேனே, பொன்மானே எல்லாம் சேர்த்து 5 நிமிடங்களுக்குப் பேசிவிடுகிறோம், அவர்களுக்கும் திருப்தி, நமக்கும் சந்தோஷம். இதுதான் செய்யுளிசை அளபெடை!

அடுத்த வாரம், நாம் கவனமாக ஐந்து நிமிடத்துக்குப் பேச்சைத் தயார் செய்துகொண்டு செல்கிறோம். ஆனால் இப்போது அவர் 'ஐந்து நிமிடமோ, ஏழு நிமிடமோ பேசுங்கள்' என்கிறார்.

உடனே, நாம் என்ன செய்வோம்? ஐந்து நிமிடத்தில் பேசிவிட்டுக் கீழே இறங்குவோமா, அல்லது இன்னும் சில சுவாரஸ்யங்களைச் சேர்த்து ஏழு நிமிடத்துக்குப் பேசுவோமா?

இந்த இரண்டு சூழ்நிலைகளுக்கும் இடையே முக்கியமான வித்தியாசம், முதல் வாரத்தில் நம்மிடம் குறை இருந்தது (ஐந்து நிமிடப் பேச்சுக்குப் பதிலாக நான்கு நிமிடத்துக்கு உரிய பேச்சைதான் கைவசம் வைத்திருந்தோம்!), அதைச் சரி செய்வதற்காகக் கொஞ்சம் நீட்டி முழக்கினோம்.

ஆனால் இரண்டாவது வாரத்தில், நம்மிடம் குறை எதுவும் இல்லை, சரியாக ஐந்து நிமிடங்களுக்குப் பேச்சு இருந்தது. அதை இன்னும் இனிமையாக்குவதற்காகக் கூடுதல் விஷயங்களைச் சேர்த்தோம்.

அதுவும் 'சேர்த்தல்'தான், இதுவும் 'சேர்த்தல்'தான், ஆனால் சாம்பாருக்கு உப்புப் போடுவதற்கும் (அவசியத் தேவை) பாயசத்துக்கு முந்திரி போடுவதற்கும் (சுவை கூட்டுதல்) வித்தியாசம் இருக்கிறதல்லவா? அதே வித்தியாசம்தான் இந்த இரு அளபெடைகளுக்கும்.

இதைப் புரிந்துகொள்வதற்கு இன்னொரு திருக்குறள் உதாரணத்தைப் பார்க்கலாம்:

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்கண் வற்றாகும் கீழ்

(அடுத்தவர்கள் நல்ல ஆடைகளை அணிந்து, நன்றாக உண்டு வாழ்ந்தால் அதைப் பார்த்துப் பொறாமை கொள்கிற சிலர், அவர்கள்மீது ஏதாவது ஒரு குற்றத்தைக் கண்டுபிடித்துச் சொல்வார்கள்).

இந்தப் பாடலில் 'உடுப்பதூஉம்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'உடுப்பதும்' என்றுமட்டும் எழுதியிருந்தாலோ, 'உண்பதூஉம்' என்பதற்குப் பதிலாக 'உண்பதும்' என்று எழுதியிருந்தாலோ வெண்பா இலக்கணம் கெட்டுப்போகாது. அப்போதும் அது வெண்பாதான்.

ஆனால், வள்ளுவர் அதனை மேலும் இனிமையாக ஒலிக்கச் செய்வதற்காக, அளபெடையைப் பயன்படுத்துகிறார். நீங்களே சொல்லிப் பார்த்தால் தெரியும் 'உடுப்பதும் உண்பதும்' என்பதைவிட, 'உடுப்பதூஉம் உண்பதூஉம்' என்பது காதுக்கு அதிகக் குளிர்ச்சியாக ஒலிக்கிறது. பாயசத்துக்கு முந்திரிப்பருப்புபோல!

இப்படி இலக்கணத்துக்காக அன்றி, மரபுக் கவிதையின் இசைக் கட்டுப்பாடுகளுக்காக அன்றி, இன்னிசைக்காக அளபெடுப்பதால் இதன் பெயர் 'இன்னிசை அளபெடை'.

மூன்றாவது வகை, சொல்லிசை அளபெடை. இதன் அர்த்தம், ஒரு சொல்லை வேறுவிதமாகத் தொனிக்கச் செய்வதற்காக அதில் ஓர் எழுத்தை அளபெடுக்கவைப்பது.

இந்தமுறையும் திருக்குறள் உதாரணம்தான்:

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

(எவையெல்லாம் இனிய சொற்கள்?

1. அன்பு கலந்து பேசப்படுபவை
2. வஞ்சம் இல்லாமல் பேசப்படுபவை
3. மெய்ப்பொருளை உணர்ந்தவர்களுடைய பேச்சுகள்!)

இந்தப் பாடலில் 'அளைஇ' என்ற சொல்லைக் கவனியுங்கள். அது எந்த வகை அளபெடை?

'அளை' என்றால் துழாவுதல், கலத்தல் என்று பொருள். 'தண்ணியில அளையாதே' என்று குழந்தைகளை அதட்டுகிறோமில்லையா, அந்த வார்த்தைதான் இது.

இந்தப் பாடலில் அது 'ஈரம் அளை' என்று வருகிறது. அதன் அர்த்தம், ஈரம், அதாவது, அன்பைக் கலத்தல்.

ஆனால், இங்கே நமக்கு 'அன்பைக் கலத்தல்' என்கிற பொருள் அவசியமில்லை, 'அன்பைக் கலந்து' என்கிற பொருள்தான் வேண்டும்.

அதற்காக, திருவள்ளுவர் அளபெடையைப் பயன்படுத்துகிறார். 'அளைஇ' என்றால், அளைந்து, அதாவது கலந்து என்கிற பொருள் தானாக வருகிறது.

இப்படி இசையை நிறைப்பதற்காகவோ, இன்னிசையைக் கூட்டுவதற்காகவோ அல்லாமல், ஒரு சொல்லை வேறுவிதமாக மாற்றுவதற்காக வரும் அளபெடையைச் 'சொல்லிசை அளபெடை' என்கிறோம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால்:

* மரபுக் கவிதை இலக்கணம் மீறும் நேரத்தில் அதைச் சரி செய்ய வரும் Patch Up : செய்யுளிசை அல்லது இசை நிறை அளபெடை
* இலக்கணம் மீறாதபோதும், இனிய இசைக்காக நீண்டு வருவது : இன்னிசை அளபெடை
* ஒரு சொல்லை வேறுவிதமாக மாற்றுவது : சொல்லிசை அளபெடை
* இயல்பாகவே (எப்போதும்) அளபெடுத்து ஒலிப்பது : இயற்கை அளபெடை

அளபெடைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வரலாம். அல்லது, ஒரே வரியில் அடுத்தடுத்து வரலாம். இதை வைத்தும் அவற்றைப் பல வகைகளாகப் பிரிப்பார்கள்.

* இணை அளபெடை
* பொழிப்பு அளபெடை
* ஒரூஉ அளபெடை
* கூழை அளபெடை
* மேற்கதுவாய் அளபெடை
* கீழ்க்கதுவாய் அளபெடை
* முற்று அளபெடை

இந்தப் பெயர்கள் கொஞ்சம் குழப்புவதுபோல் தெரிந்தாலும், இவற்றை ஞாபகம் வைத்துக்கொள்வது மிகச் சுலபம். ஒரே ஒரு சின்னக் கற்பனையைச் செய்துகொண்டால் போதும்.

ஒரு வகுப்பில் இருபத்தெட்டு பையன்கள் இருக்கிறார்கள். அவர்களை வரிசைக்கு நான்கு பேராக மொத்தம் ஏழு வரிசைகளில் நிறுத்திவைத்திருக்கிறோம்.

ஒவ்வொரு வரிசையிலும் உள்ள பையன்களை A, B, C, D என்று அழைப்போம். முதல் வரிசையில் A, B இருவரும் ஒரேமாதிரி உடை அணிந்திருக்கிறார்கள். இதற்கு 'இணை' என்று பெயர்.

இரண்டாவது வரிசையில், A, C ஒரேமாதிரி உடை அணிந்துள்ளார்கள். இதற்குப் 'பொழிப்பு' என்று பெயர்.

மூன்றாவது வரிசையில், A, D ஒரேமாதிரி உடை அணிந்துள்ளார்கள். இதற்கு 'ஒரூஉ' என்று பெயர்.

நான்காவது வரிசையில் A, B, C மூவரும் ஒரேமாதிரி உடை அணிந்துள்ளார்கள். இதற்குக் 'கூழை' என்று பெயர்.

ஐந்தாவது வரிசையில் A, C, D ஒரேமாதிரி உடை அணிந்துள்ளார்கள். இதற்கு 'மேற்க்கதுவாய்' என்று பெயர்.

ஆறாவது வரிசையில் A, B, D ஒரேமாதிரி உடை அணிந்துள்ளார்கள். இதற்கு 'கீழ்க்கதுவாய்' என்று பெயர்.

நிறைவாக, ஏழாவது வரிசையில் A, B, C, D நால்வரும் அச்சடித்தாற்போல் ஒரேமாதிரி உடை அணிந்துள்ளார்கள். இதற்கு 'முற்று', அதாவது முழுமை!

இந்த உதாரணத்தில் பையன்களுக்குப் பதிலாக, செய்யுளின் சொற்கள், வரிசைக்குப் பதில் செய்யுளின் அடிகள், ஆடைகளுக்குப் பதில் அளபெடைகள் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அவ்வளவுதான் மேட்டர்.

உதாரணமாக, நாம் மேலே பார்த்த 'உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்' என்ற குறளில், முதல், இரண்டாவது சொற்கள் (A, B) அளபெடுத்துள்ளன. ஆகவே, இது 'இணை அளபெடை'.

வேறொரு பாடலில் 'பூஉக் குவளைப் போஒது அருந்தி' என்ற அடியில் முதல், மூன்றாவது சொற்கள் (A, C) அளபெடுத்துள்ளன. ஆகவே, இது 'பொழிப்பு அளபெடை'. இதைப்போலவே மற்ற அனைத்து அளபெடைகளுக்கும் உதாரணம் சொல்லமுடியும்.

அளபெடைப் புராணம் போதும், அடுத்து, தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பு இலக்கணத்தைப்பற்றிப் பேசுவோம். அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* செய்யுளிசை அளபெடை (அல்லது) இசை நிறை அளபெடை (சாம்பாருக்கு உப்பு)
* இன்னிசை அளபெடை (பாயசத்துக்கு முந்திரி)
* சொல்லிசை அளபெடை
* இயற்கை அளபெடை
* மரபுக் கவிதைகள், சொல் கட்டுப்பாடுகள், ஓசை
* இணை அளபெடை (A, B)
* பொழிப்பு அளபெடை (A, C)
* ஒரூஉ அளபெடை (A, D)
* கூழை அளபெடை (A, B, C)
* மேற்க்கதுவாய் அளபெடை (A, C, D)
* கீழ்க்கதுவாய் அளபெடை (A, B, D)
* முற்று அளபெடை (A, B, C, D)


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக