புதன், 12 ஆகஸ்ட், 2015

50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் பள்ளிக்கல்வி பணியாளர்களுக்கு, ஓராண்டுக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது!


தமிழக பள்ளிக் கல்வியில், மத்திய அரசு திட்டம் கீழ் பணியாற்றும், 50 ஆயிரம் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கான, சம்பள பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில் தரம் உயர்த்தப்பட்ட, 1,000 உயர்நிலை, 8,000 நடுநிலை பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட, 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் பள்ளிக்கல்வி பணியாளர்களுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டமான ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககமான எஸ்.எஸ்.ஏ., ஆகிய திட்டங்களின் கீழ், மாத சம்பளம் தரப்படுகிறது.


இந்த திட்டங்களுக்கு, மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் மாறுபடும். எனவே, ஒவ்வொரு ஆசிரியருக்கும், மாதந்தோறும் சம்பளம் வழங்க, தனித்தனி அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதனால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் மாதக்கணக்கில் தாமதம் ஏற்படுகிறது.


தற்போதைய நிலவரப்படி, பள்ளிக்கல்வி பணியாளரில், 1,764 பேர்; இளநிலை உதவியாளரில், 4,393 பேர்; ஆய்வக உதவியாளர்களுக்கு, மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் கடந்த மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை என, புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து, நமது நாளிதழில் கடந்த, 9ம் தேதி செய்தி வெளியானது.


இந்நிலையில், பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசின் திட்டத்திலுள்ள பணி இடங்களை, ஓராண்டுக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை, நேற்று, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் வந்துள்ளது. இதனால், இனி, ஓர் ஆண்டுக்கு ஆசிரியர்களுக்கு சம்பள பிரச்னை இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக