வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

தமிழில் பின்நவீனத்துவ நாவல்கள்பின்நவீனத்துவம் என்பதை ஆங்கிலத்தில் Post Modernism என்று கூறுவர். நவீனத்துவ நாவல் என்பது கதையை வரிசைமுறைப்படி கூறுவதாக இருந்தது. நவீனத்துவத்தின் கதை கூறும் வகைமையினைத் தகர்த்து, பிறழ்வு வரிசையில் கதை கூறுவதே பின்நவீனத்துவ நாவல்.

அண்மைக் காலங்களில் தமிழில் ஓரளவிற்குப் பின்நவீனத்துவ நாவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சாரு நிவேதிதா, '0' டிகிரி, பேன்சி பனியன் போன்ற நாவல்களை எழுதியுள்ளார்.

பிரேம் குமார் எழுதிய சொல் என்றொரு சொல் என்ற பின்நவீனத்துவ நாவல் புராண மரபுகளையும், இதிகாசங்களையும், பழங்கதைகளையும் எடுத்துக் கொண்டு புதுப்புது முறைகளில் கதை கூறுகிறது.

யுவன் சந்திரசேகரின், பகடை ஆட்டம் என்ற நாவல் பின்நவீனத்துவ நாவல்களில் புகழ் பெற்றது. சீனா, திபெத், இந்தியா, இமயமலை ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட ஜோமிட்ஸியா என்ற கற்பனை தேசத்தின் கற்பனைச் சரித்திரமே இந்நாவலாகும். கடந்த நூற்றாண்டில் மனித குலம் அடைந்த பெருந்தீமைகளின் கொடுங்கனவுகளின் அவலங்களும், அழிவுகளும் இந்த நாவலில் நிகழ்வுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நாவலில் நேரடியாக, காலவரிசையில் அமைந்த கதை சொல்லும் முறை இல்லை.

எம்.ஜி.சுரேஷ் எழுதிய 37c என்ற நாவல் தலைப்பிலேயே பின்நவீனத்துவ நாவல் என்பதைப் புலப்படுத்துகிறது. சராசரி மனிதனின் உடல் வெப்பம் 98.6 டிகிரி பாரன்ஹீட். இதைச்செல்சியசாக மாற்றினால் 37 டிகிரி c என்று சொல்லலாம். 37 காலிபர் என்றும் சொல்லலாம். காலிபர் என்பது துப்பாக்கி வகை. இது வன்முறையின் குறியீடு. மனிதன், வன்முறை ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் உருவகமாக 37 C என்று குறிப்பிடலாம். எனவே இதற்கு 37 C எனப் பெயர் வைத்திருக்கிறார். இந்நாவல் 37 அத்தியாயங்களைக் கொண்டது. தொடக்கமும் முடிவும் ஒன்றுபோல அமைந்து உள்ளது.

  • பின்நவீனத்துவ நாவல்கள் உணர்த்தும் செய்திகள்
  • பின்நவீனத்துவ நாவல்களில் இதுவரையில் கற்பிக்கப்பட்டு வந்த மதிப்பீடுகள் தகர்கின்றன. புனிதம், உன்னதம் என்றெல்லாம் சொல்லப்பட்டவை உடைபடுகின்றன.பகுத்தறிவுக்கு உட்படுகின்ற இவற்றின் மூலம் மதம், சாதி, பண்பாடு, விழுமியங்கள் தகர்க்கப்படுகின்றன. உலகளாவிய நோக்கில் மனித இருத்தலையும், ஒட்டு மொத்த அடிமைத்தனத்தையும் பற்றிச் சிந்திக்கப் பின்நவீனத்துவ நாவல்கள் பயன்படுகின்றன.