பிசியோதெரபி கிளினிக்கும் ஜிம்மும் நடத்தியவாறு தயாராகி ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்ச்சி அடைந்தவர் என். கொளஞ்சி. உத்தரப் பிரதேச மாநிலப் பிரிவின் 2008 பேட்ச்சைச் சேர்ந்த இவர் யூ.பி.எஸ்.சி. தேர்வைத் தமிழில் எழுதியவர். உ.பி.யின் வாரணாசி மற்றும் முசாபர் நகரில் ஏ.எஸ்.பி.யாகவும், காஸ்கஞ்ச், சித்தார்த்நகர், பிலிபித், ராய்பரேலி, ஜலோன் ஆகிய மாவட்டங்களின் எஸ்.பி.யாகவும் இருந்தவர். தற்போது, ஆக்ராவின் ரயில்வே பிராந்தியத்தைச் சேர்ந்த 15 மாவட்டங்களின் ஜி.ஆர்.பி. சரக எஸ்.பி.யாகப் பணியாற்றிவருகிறார்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கொளஞ்சி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுக்காவின் விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கிராமத்துப் பள்ளியில் பிளஸ் டூ வரை பயின்றவருக்கு கிரிக்கெட் என்றால் உயிர். ப்ளஸ் டூ இறுதித் தேர்வுக்கு முன்தினம்கூடப் பள்ளி கிரிக்கெட் டீமில் விளையாடியிருக்கிறார். கிரிக்கெட்டில் ஜொலிக்கும் கனவோடு பிசியோதெரபி மருத்துவத்தைப் படித்தார். பிசியோதெரபி கல்லூரிகளுக்கான மாநிலப் போட்டிகளில் 100, 200, 400 மற்றும் 800 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பல பரிசுகள் வென்றார். ஆனால், இதையெல்லாம் தாண்டியும் கிரிக்கெட் கனவு நிறைவேறவில்லை. அப்பல்லோ பிசியோதெரபி கிளினிக் தொடங்கினார். இதனுடன் நெருங்கிய தொடர்புடையது உடற்பயிற்சி என்பதால் உடற்பயிற்சி நிலையத்தையும் ஆரம்பித்தார். கிளினிக் மற்றும் ஜிம் நடத்தும்போது யூ.பி.எஸ்.சி. பக்கம் கவனம் திரும்பியது.

யூ.பி.எஸ்.சி. எழுதத் தூண்டிய விவசாயிகள்

யூ.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாராவது என்பதை அசாத்தியமானதாகப் பார்க்கும் சிற்றூரைச் சேர்ந்தவர் கொளஞ்சி. அப்போது, அவருடைய ஜிம்முக்கு வந்துகொண்டிருந்த நண்பர்களான ரகமத்துல்லாவும் ராஜாவும் அதற்காகப் படித்துக்கொண்டிருந்தார்கள். "அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தவர்களில் நானும் ஒருத்தன். ஆனாலும் யூ.பி.எஸ்.சி. தேர்வை எழுதும் ஆர்வம் அப்போது எனக்கு எழவில்லை. அதேசமயம் என்னைச் சுற்றி வாழ்ந்த விவசாயிகள் அரசாங்க அலுவலகங்களில் மதிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டதையும், முறையான பதில் அளிக்கப்படாமல் விரட்டி விடப்பட்டதையும் கேட்டு நான் யூ.பி.எஸ்.சி. தேர்வை எழுதத் தூண்டப்பட்டேன்'' என்கிறார்.

ஆர்வத்துக்கு உரமிட்டவர்

"எங்கள் ஊரில் உள்ள ஆர்.கே.எஸ். கலைக் கல்லூரியில் நடத்தப்பட்ட 'சிகரத்தை நோக்கி' நிகழ்ச்சியில் ஒரு முறை சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். பேசியதைக் கேட்டேன். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் என்னை யூ.பி.எஸ்.சி.யை நோக்கி உந்தித் தள்ளியது. எனினும், அப்போது கிளினிக் மற்றும் ஜிம் மூலமாக எனக்கு நல்ல வருமானம் கிடைத்துக்கொண்டிருந்தது. இதை விடக் குறைவான ஊதியம் கொண்ட யூ.பி.எஸ்.சி. பணிகளுக்கு முயற்சி செய்யத்தான் வேண்டுமா என்ற குழம்பினேன். அப்போது என்னுடைய நண்பர் மருத்துவர் மகுடமுடி, 'ஐ.ஏ.எஸ். ஆன முதல் பிசியோதெரபிஸ்டாக நீங்கள் வர வேண்டும்!' என உற்சாகப்படுத்தினார். 'இந்த முயற்சியில் தோற்றாலும் இருக்கவே இருக்கிறது பிசியோதெரபி, ஜிம்' என மற்றொரு நண்பர் செந்தில் கூறவே எடுத்த முடிவு வெற்றிக்கு அடித்தளமானது" என்கிறார் கொளஞ்சி.

மற்றவர்களைப் போல, தேர்வுக்காக நேரம் ஒதுக்கி படிக்கவில்லை. பிசியோதெரபி மருத்துவ சிகிச்சைக்காக வருபவர்களைக் கவனித்துக்கொண்டே இடையில் கிடைக்கும் நேரங்களில் படித்தார். ஜிம்மிலும் அதுபோலவே இடைவேளை நேரங்களில் படித்தார். முதல் இரு முயற்சிகளில் பிரிலிம்ஸில் தோற்றாலும் மூன்றாவதில் வெற்றி கண்டார். அப்போது கொளஞ்சிக்கு அறிவு பலம் தந்தவர் அவருடைய குடும்ப நண்பர் வசந்தி.

குறைகளை அறிந்து களைந்ததால் வெற்றி

மூன்றாவது முயற்சியில் மெயின்ஸிலும் தேர்ச்சி பெற, சென்னை அண்ணாநகரின் அரசுப் பயிற்சி நிலையத்தில் கிடைத்த 3 மாதப் பயிற்சி காரணமாக இருந்தது. சைலேந்திர பாபு, இறையன்பு ஆகியோரிடம் நேர்முகத் தேர்வுக்காக அதே இடத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டார். அதிலும் இறையன்பு எழுதிய 'நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்' புத்தகம் மிகப் பெரிய வழிகாட்டியாக இருந்தது. ஆனால், 40 மதிப்பெண் குறைந்ததால் அவருக்கு எந்தப் பணியும் கிடைக்கவில்லை. நான்காவதாக முயற்சியில் ஐ.பி.எஸ். கிடைத்தது.

திருமணம் ஒரு தடை இல்லை

சைதை துரைசாமியின் மனிதநேயம் அமைப்பின் முதல் மாணவர் குழுவில் பெற்ற பயிற்சி கொளஞ்சியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளால் ஆறாவது முறையில் ஐ.பி.எஸ். ஆனார் கொளஞ்சி. இந்த ஆறு முயற்சிகளிலும் விருப்பப் பாடமாக தமிழ் இலக்கியம் மற்றும் பொது நிர்வாகம் படித்து அவற்றைத் தமிழிலேயே எழுதினார். நேர்முகத் தேர்வை மட்டும் ஆங்கிலத்தில் எதிர்கொண்டார். ஆனால் யூ.பி.எஸ்.சி. தேர்வுக்குப் படிக்க போதுமான புத்தகங்கள் தமிழில் இல்லை எனவும் தெரிவிக்கிறார்.

"முக்கியப் பொறுப்புகளை வகிக்க திருமணத்தைத் தடையாக நினைப்பவர்கள் பலர். ஆனால் என்னைப் பொறுத்தவரை யூ.பி.எஸ்.சி. எழுத, திருமணம் ஒரு தடை அல்ல. என் மனைவியும் இரு குழந்தைகளும் எப்போதுமே என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாகவே இருந்துவருகிறார்கள்" என்கிறார் கொளஞ்சி.

கொளஞ்சியைத் தொடர்புகொள்ள: kolanchiips@gmail.com