தமிழகத்தில் 15 மாவட்ட மருத்துவமனைகளை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக தரம் உயர்த்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இல்லாத மாவட்டங்களில் தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உயர் சிகிச்சை மருத்துவமனைகளாக செயல்பட்டு வருகின்றன.
சில நேரங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இல்லாத மாவட்டங்களில் உள்ள நோயாளிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ள மாவட்டங்களுக்கு மேல் சிகிச்சைக்காக செல்ல வேண்டியுள்ளது.
எனவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இல்லாத கடலூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், கரூர், பெரம்பலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 15 மாவட்ட மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதனை செயல்படுத்தும் பொருட்டு, 15 மாவட்ட மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 105 சிறப்பு மேல் சிகிச்சை மருத்துவர்கள், 183 சிறப்பு மருத்துவர்கள், 60 மருத்துவர்கள், 3 பல் மருத்துவர்கள் மற்றும் 443 செவிலியர்கள், 14 ஆய்வக நுட்பனர்கள் மற்றும் 18 நுண்கதிர்வீச்சாளர் பணியிடங்களை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்."இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக