வெள்ளி, 24 ஜனவரி, 2014

புதிய ஓய்வூதிய திட்ட நிதியில் (சி.பி.எஸ்.) உறுப்பினர்கள் 25. சதவீத தொகையை திரும்பப் பெற பரிந்துரை


புதிய ஓய்வூதிய திட்ட நிதியில் (சி.பி.எஸ்.) உறுப்பினர்கள் 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 1.1.2004 முதல் மத்திய அரசு பணியில் சேரும் ஊழியர்களுக்கு சி.பி.எஸ். எனப்படும் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. முப்படையினருக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டம் 1.4.2003 முதல் நடைமுறைப் படுத்தப்பட்டது. புதிய ஓய்வூதிய திட்டத்தில், அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் தர ஊதியத்தில் மாதாமாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதற்கு இணையான தொகையை அரசு தனது பங்காக செலுத்தும்.

இவ்வாறு சேரும் மொத்த தொகையில் 60 சதவீதம், ஊழியர்கள் ஓய்வுபெறும்போது வழங்கப்படும். எஞ்சிய 40 சதவீதத் தொகை ஓய்வூதியம் வழங்குவதற்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். பழைய ஓய்வூதிய திட்டத்தைப் போல் புதிய திட்டத்தில் ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பங்குச் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஓய்வூதியத் தொகை மாறும்.

குறைந்தபட்ச ஓய்வூதியம்

ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்தில் 30 ஆண்டு அரசு பணியாற்றிய அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதியம் பெறத் தகுதி உடையவர் ஆவர். முழு ஓய்வூதியம் என்பது ஊழியர் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதத் தொகை ஆகும்.

தற்போதுள்ள குறைந்தபட்ச ஓய்வூதியத்துக்கு உத்தரவாதமின்மை, ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து பங்குச் சந்தையில் முதலீடு செய்வது போன்ற பல்வேறு காரணங்களினால் புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர் சங்கங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதிய நிதியில் (சி.பி.எப்.) பணத்தை திரும்ப பெற முடியாது. ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதியில் (ஜி.பி.எப்.) தங்கள் தேவைக்காக 6 மாதங்களுக்கு ஒரு முறை 50 சதவீத தொகையை திரும்பப் பெறலாம். மருத்துவ செலவினம் என்றால் 75 சதவீத தொகை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், புதிய ஓய்வூதிய திட்ட நிதியில் உறுப்பினர்கள் 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.) பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, உறுப்பினர்கள் வீடு, மனை வாங்கவும், மருத்துவ செலவு,பிள்ளைகளின் மேற்படிப்பு ,திருமண செலவுகளுக்கு 25 சதவீத தொகையை திரும்ப பெறலாம்.

லட்சக்கணக்கானோர் பயன்

இந்த வசதியைப் பெறுவதற்கு புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து 10 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஓர் ஊழியர் தனது பணிக்காலத்தில் 3 முறை இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு முறைக்கும் இடையே குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். மருத்துவச் செலவினம் என்றால் மட்டும் இந்த கால இடைவெளி கிடையாது. விரைவில் நடைமுறைக்கு வரும் இந்த புதிய வசதியால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக