ஞாயிறு, 26 ஜனவரி, 2014

அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், கணிசமாக அதிகரிக்கும்-கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை


'வரும் பொது தேர்வில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், கணிசமாக அதிகரிக்கும்' என,கல்வித்துறை அதிகாரிகள், நம்பிக்கை தெரிவித்தனர்.
மாநிலம் முழுவதும், 5,691 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இருந்து, 10ம் வகுப்பு பொது தேர்வையும், 2,595 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, பிளஸ் 2 தேர்வையும்,மாணவ, மாணவியர் எழுத உள்ளனர். கடந்த தேர்வில், அரசு பள்ளிகள், 10ம் வகுப்பில், 79 சதவீத தேர்ச்சியையும், பிளஸ் 2 தேர்வில், 80 சதவீத தேர்ச்சியையும் பெற்றன. பத்தாம் வகுப்பு தேர்வில், 453அரசு பள்ளிகளும், பிளஸ் 2 தேர்வில், 100 பள்ளிகளும், 100 சதவீத தேர்ச்சியை பெற்றன. வரும் தேர்வில், இந்தசதவீதத்தை அதிகரிக்கவும், 100 சதவீத தேர்ச்சியை பெறும் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்,அதிகாரிகள் குழு, தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக,பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். 
நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்கள், மாநில அளவில், "ரேங்க்' பெறும் வகையில்,மேலும் ஊக்கப்படுத்தி, சிறப்பு பயிற்சி அளித்து வருகிறோம். சுமாராக படிக்கக் கூடிய மாணவர்களுக்கு,விடுமுறை நாட்களிலும், சிறப்பு வகுப்புகள் நடத்துவதுடன், அதிக மதிப்பெண் பெறுவதற்காக, "வெற்றி உங்கள்கையில்' என்ற வழிகாட்டி கையேட்டை தயாரித்து வழங்கி உள்ளோம். அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழுவைக்கொண்டு, மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாதிரி தேர்வுகளும், தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அறிவியலில், ஒரு மதிப்பெண் கேள்விகள் எப்படி வரும், அவற்றுக்கான விடை அளிப்பது எப்படி என்பது குறித்தும், விளக்கி உள்ளோம். இதனால், வரும்தேர்வில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், கண்டிப்பாக உயரும். இவ்வாறு, இயக்குனர் கூறினார்.
 சமீபத்தில்,சென்னையில் நடந்த ஒரு விழாவில் பேசிய, பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா, "இரு தேர்வுகளிலும்,ஒட்டுமொத்த தேர்ச்சியை, 95 சதவீதமாக உயர்த்த, இலக்கு நிர்ணயித்துள்ளோம்' என, தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக