நீங்களும் ஜெயிக்கலாம்.....
ஐ.எப்.எஸ். தேர்வு முடிவு புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில், தமிழக மாணவர்கள் 15 பேர் உள்பட மொத்தம் 85 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அகில இந்திய அளவில் திண்டுக்கல் இன்ஜினீயர் வி.பி.கவுதம் 3-வது இடம் பிடித்தார்.
இந்திய வனப்பணி தேர்வு
வனத்துறையில் உயர் அதிகாரிகளை நேரடியாக தேர்வுசெய்வதற்காக ஐ.எப்.எஸ். எனப்படும் இந்திய வனப்பணி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்துகிறது. 2013-ம் ஆண்டுக்கான 85 ஐ.எப்.எஸ். பணியிடங்களை நிரப்ப கடந்த மே மாதம் முதல்நிலைத்தேர்வு நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு முதல்முறையாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வோடு ஐ.எப்.எஸ். முதல்நிலைத் தேர்வு சேர்த்து ஒருங் கிணைந்த தேர்வாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தக் கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு அகில இந்திய அளவில் ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர். மெயின் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டு டிசம்பரில் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடந்தது.
தமிழக மாணவர்கள் சாதனை
இந்த நிலையில், ஐ.எப்.எஸ். தேர்வு முடிவை யு.பி.எஸ்.சி. புதன்கிழமை மாலை வெளியிட்டது. வட இந்தியாவைச் சேர்ந்த சந்தீப் குமார் ஜா முதலிடத்தையும், குணால் அங்கிரீஸ் 2-ம் இடத்தையும், தமிழகத்தைச் சேர்ந்த வி.பி.கவுதம் 3-ம் இடத்தையும் பிடித்தனர். கவுதம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் ஆவார். 22 வயது நிரம்பிய கவுதம் 2012-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. பட்டம் பெற்றார். தந்தை பழனிச்சாமி வழக்கறிஞர், தாயார் கஸ்தூர் ஆசிரியை.
ஐ.எப்.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 85 பேரில் 15 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிபெற்ற தமிழக மாணவ-மாணவிகளில் 14 பேர் சென்னையைச் சேர்ந்த சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த விகாஷ்குமார் உஜ்வால் என்ற மாணவரும் இதே பயிற்சி மையத்தில் படித்து வெற்றிபெற்றுள்ளார். ஐ.எப்.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற தமிழக மாணவ-மாணவிகள் விவரம். (அடைப்புக்குறிக்குள் ரேங்க்) வருமாறு:
வி.பி.கவுதம் (3-வது ரேங்க்), கே.கல்பனா (9), டி.சாருஸ்ரீ (14), ஆர்.மலர்கொடி (24), எஸ்.சுந்தர் (33), பி.பூர்ணிமா (41), எஸ்.சூர்ய நாராயணன் (43), எஸ்.ராஜ்திலக் (44), வித்யாசாகரி (52), வி.செந்தில் பிரபு (56), எம்.சிவராம் பாபு (61), பி.எம்.அரவிந்த் (63), கே.கிருஷ்ணமூர்த்தி (68), எம்.ராஜ்குமார் (69), டி.தினேஷ் (77).
எம்.எல்.ஏ. மகன் வெற்றி
இவர்களில் பி.பூர்ணிமா, தமிழக சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.எஸ்.பி.) கண்காணிப்பாளர் பாண்டியனின் மகள் ஆவார். டி.தினேஷ், திருச்சி துறையூர் எம்.எல்.ஏ. இந்திரா காந்தியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக