வெள்ளி, 24 ஜனவரி, 2014

 தேர்வு ஜுரம்; !பெற்றோர்களே,   மாணவர்களுக்கு வேண்டாம் மன அழுத்தம்


 

 "பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் மத்தியில்,பொதுத்தேர்வு நேரத்தில் மன அழுத்தம்ஏற்பட வாய்ப்புள்ளதால், பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்' என, உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில்,மாணவர்களை தயார்படுத்தவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், தனியார் மற்றும் அரசு பள்ளிகள் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டு வருகின்றன.
தொடர்ந்து மாதிரி தேர்வுகள், பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள், மாலை நேர வகுப்புகள், பின்தங்கிய மாணவர்களின் மீது சிறப்பு கவனம் என தேர்வுக்கு தயார்
பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.மார்ச் 3ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கும், மார்ச் 26ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் துவங்க உள்ளன. பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள், பிப்., முதல் வாரத்தில் நடக்க உள்ளன.

இந்நிலையில், பள்ளிப்படிப்பு, தேர்வு, டியூஷன், பயிற்சி என ஓடிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டிய பெற்றோர், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த 2004-08 வரை உலகளவில், தேர்வு பயத்தால் 16 ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிலும், 2006ம் ஆண்டு மட்டும் 5857 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்தியா முழுவதும் ஒரு லட்சம் பேரில் 10.5 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றால், தமிழகத்தில் 18.7 பேராக உள்ளனர். தினசரி, 16 இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் அதில், பெரும்பாலும் தேர்வு பயம், தோல்வி மற்றும் காதல்தோல்வி ஆகிய காரணங்களே முக்கிய இடங்களை பெற்றுள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில், தேர்வு காரணங்களால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது. இதற்கு, "மதிப்பெண் குறிவைத்து நடத்தப்படும் கல்விமுறையே காரணம்' என்கின்றனர் கல்வியாளர்கள். தேர்வுகள் நெருங்கும் சமயத்தில், மாணவர்கள் மத்தியில் பதட்டம் அதிகரிப்பது இயல்பானது. இந்த சூழலில்
பெற்றோர் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நடந்து கொள்வது அவசியம். மாணவர்களின் மனநிலை, உடல்நிலை, திறன், தூக்கம், உணவு பழக்கம் அனைத்தும் கண்காணித்து அதற்கு தகுந்தபடி, கனிவான முறையில் ஊக்கமளிக்க வேண்டும். மதிப்பெண் என்பது மட்டும், முழு திறமையின் வெளிப்பாடு கிடையாது என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

மனநல மருத்துவர் மோனி கூறியதாவது: பெற்றோரின் அதிகப்படியான எதிர்பார்ப்புகளே, மாணவர்கள் மத்தியில் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. மாணவர்களின் தனித்திறன், தகுதிக்கேற்ப பெற்றோரின்
எதிர்ப்பார்ப்புகள் அமையவேண்டும். தங்களது ஆசைகளை, குழந்தைகளின் மீது திணிப்பதால்,
எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.இன்றைய சூழலில், மாணவர்கள் மத்தியில் எதிர்மறை எண்ணங்கள் தேர்வு பயத்தால் தலை தூக்கி வருகின்றன.
பெற்றோர் மிகவும் கவனத்துடன் நடந்துகொள்வது அவசியம். மேலும், மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்துவதற்கு மாத்திரைகளை கொடுக்கவும், பெற்றோர் தயாராக உள்ளனர். இது உடல்நலத்தை பாதிக்கும் என்ற விழிப்புணர்வு இருப்பதில்லை. மாணவர்களுக்கு படிப்பதற்கு அமைதியான சூழலை ஏற்படுத்தி கொடுப்பது, பெற்றோர்களின் கடமை. கற்றலில் பின்தங்கிய குழந்தைகளை திட்டுதல், பிற குழந்தைகளுடன் ஒப்பிடுதல், அடித்தல் போன்ற செயல்பாடுகளை தவிர்த்து நட்பாக பேசி, ஊக்கமளிக்கவேண்டும். இவ்வாறு, செய்யும்பட்சத்தில், ஆர்வத்துடன் மாணவர்கள் படிப்பர்.
நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் மூன்று மாணவர்கள் இதுபோன்ற பிரச்னையால், பெற்றோர்களால் எங்களிடம் அழைத்து வரப்படுகின்றனர். அடிப்படையில், பெற்றோர்கள் சில விஷயங்களை புரிந்துகொண்டலே, இதை தவிர்த்துவிடலாம்.
இவ்வாறு, டாக்டர் மோனி கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக