வெள்ளி, 24 ஜனவரி, 2014

பலிக்குமா கிராமப்புற மாணவர்களின் ஐ.ஏ.எஸ். கனவு? தேர்வுக்குத் தயாராவதில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவிப்பு



போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி போட்டித் தேர்வுகளில் அதிக இடங்களைத் தக்க வைத்துக்கொள்ளும் கிராமப்புற மாணவர்கள் ஐ.ஏ.எஸ். கனவுகள் பலிக்க சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

கல்விக் கண் திறந்த காமராஜர், கணித மேதை ராமானுஜம் உள்ளிட்ட அறிஞர்கள், மேதைகள் பலர் கிராமப்புறங்களில் பிறந்து வளர்ந்தவர்களே. கிராமப்புற மாணவர்களுக்கு அறிவும், புத்திக் கூர்மையும் அதிகம் என ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. குடிமைப் பணிகள், போட்டித் தேர்வுகள் போன்றவை ஒரு காலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்தன. இன்று, போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களில் 70 சதவிகித்தினர் கிராமப்புற மாணவர்கள்.

தனது 21-வது வயதில் கல்லூரிப் படிப்பை முடித்து பட்டம் பெறும் ஒரு இளைஞன் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால் மேல்படிப்பைத் தொடர்வதிலும், தனது வாழ்க்கைக்கான அடித்தளத்தை அமைப்பதிலும் தடுமாற்றம் அடைகின்றான்.

ஆனாலும், இன்றைய கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகள் பற்றி நன்கு அறிந்துகொண்டுள்ளனர். ஆனால், யுபிஎஸ்சி போன்ற குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பதும், அதற்கான சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததாலும் தங்களது ஐ.ஏ.எஸ். கனவுகளைக் களைத்து விடுகின்றனர்.

முதல் போட்டித் தேர்வு

நம்நாட்டில் கடந்த 1957 முதல் இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2009ல் தேர்வு முறைகளில் மாற்றம் செய்யப்பட்டு நாடு முழுவதும் சுமார் 1,100 பணியிடங்களுக்கு முதல் போட்டித் தேர்வு நடத்தப்பட்டபோது 527 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 70 பேர் தமிழக மாணவர்கள். அதில் 40 பேர் பெண்கள் என்பதும் இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புற மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் பங்கேற்கும் தமிழக கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பதில் கிடைக்காமல் தவிப்பு

ஆனால், குடும்ப வருமானம், போதிய கட்டமைப்பு வசதிகள் இன்மை, எந்த நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது, எப்படி தேர்வுக்குத் தயாராவது போன்ற வினாக்களுக்கு கிராமப்புற மாணவர்கள் பலர் பதில் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். மேலும், டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்களுக்குச் சென்று போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் சேர்ந்து தங்கிப் படிக்கும் வாய்ப்பும் பலருக்குக் கிடைப்பதில்லை.

எனவே, கிளை நூலங்களிலும், மாவட்ட மைய நூலகங்களிலும் போட்டித் தேர்வுக்கான நூல்களை புரட்டிக்கொண்டிருக்கின்றனர். கிராமப்புற மாணவர்கள் பயன் பெறும் வகையில் மாவட்டத் தலைநகரங்களின் போட்டித் தேர்வுக்கான மையங்கள் தொடங்கப்படுமா? என்ற ஏக்கத்தில் மாணவர்கள் உள்ளிட்டோர் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து, பொது நூலகத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

விருதுநகரில் பொது நூலகத் துறை சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் தொடங்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், யு.பி.எஸ்.சி. தேர்வுகள் தவிர தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கும், ரயில்வே மற்றும் பொதுத் துறைக்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சியளிக்கும் வகையில் “போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி மையம் தனியாகத் தொடங்கப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கான உலகத் தரம் வாய்ந்த நூல்களைக் கொண்டு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களால் சிறப்புப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி மையத்துக்கென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகில் கிளை நூலகத்துக்கு அடுத்தபடியாக 40 செண்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி மையம் கட்டுவதற்கு தனியார் மூலம் ரூ.35 லட்சமும், அரசின் பங்களிப்பாக ரூ.70 லட்சமும் பெறப்பட்டு ரூ.1.05 கோடியில் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

மேலும், மாவட்டத்திலுள்ள தொழிலதிபர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு ஓர் அறக்கட்டளையைத் தொடங்கி ரூ.1.5 கோடி வரை நிதி உதவி பெற்று அதில் கிடைக்கும் வட்டித் தொகை மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சிக்கான செலவினங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதோடு, சுமார் 2 லட்சம் இ- புத்தகங்கள், 2 ஆயிரம் தொகுப்புகளும் மாணவர்களின் பயன்பாடுக்கு கொண்டுவரப்படவுள்ளன. ரூ.25 லட்சத்தில் இப்பயிற்சி மையத்தில் உள் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் கிராமப்புற மாணவர்கள் இந்த மையத்தை சிறப்பாகப் பயன்படுத்தி தங்களின் ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்க முடியும் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக