புதன், 23 ஜூலை, 2014

சி.சு. செல்லப்பா(1972-1998)


சி.சு. செல்லப்பா(1972-1998)

'அலசல்' விமர்சன அணுகு முறையைக் கைக்கொண்ட முன்னோடி விமர்சகர். பிற்காலக் கல்வியாளர்கள் அலசல் முறை விமர்சனத்தைப் 'பகுப்பாய்வு' என பெயரிட்டு அதிக முக்கியத்துவம் தந்துள்ளனர்.

சி.சு. செல்லப்பா 1934இல் மணிக்கொடி இதழில் சிறுகதை ஆசிரியராக அறிமுகம் ஆனார். மணிக்கொடி காலகட்டத்தில் எழுந்த விமர்சனம் குறித்ததான விவாதங்களில் அவர் பங்கேற்கவில்லை எனினும் இலக்கியத்தில் துலங்கும் வாழ்வின் புதிருக்கு அழுத்தம் தந்த புதுமைப்பித்தன் பார்வையை விட, படைப்பாளி தன் பார்வைக்கு ஏற்றதான வாழ்வை எழுத்தில் எழுப்புவதே இலக்கியம் என்ற கு.ப.ராஜகோபாலனின் பார்வை அவருக்கு உவப்பானதாக இருந்திருக்கக்கூடும். கு.ப. ராஜகோபாலனின் விமர்சனங்களைச் செல்லப்பா பிற்கால எழுத்துக்களில் வரவேற்றுள்ளார். மணிக்கொடி படைப்பாளிகள் கலாமோகினி, கிராம ஊழியன் இதழ்களில் மீண்டும் ஒருங்கிணைந்த போது செல்லப்பா பெரும் பங்காற்றவில்லை. இருபதாம் நூற்றாண்டில் நாற்பதுக்களின் இறுதியில் தேனீ இதழோடும் அவர் நெருக்கமான உறவினைக் கொண்டிருக்கவில்லை.

ஐம்பதுக்களில் தமிழ் இலக்கியச் சூழலில் மாறுதல்கள் நிகழ்ந்தன. மார்க்சிய விமர்சன அணுகுமுறை முன்னிலை படுத்தப்பட்டது. 'சமூக மாறுதலுக்கான இலக்கியம்' என்பது வற்புறுத்தப்பட்டது. படைப்பின் உள்ளடக்கத்தைக் கொண்டு அதைத் தரப்படுத்தும் போக்கு எழுந்தது. புதுமைப்பித்தன் ஆரம்பகால சிறுகதைகள் மட்டுமே ஏற்பினைப் பெற்றன. பிற மணிக்கொடி படைப்பாளிகளின் சிறுகதைகள் சமூக மாறுதலை இலக்காகக் கொண்டிராத காரணத்தால் புறக்கணிக்கப்பட்டன. 1955இல் சரஸ்வதி தோற்றம் கொண்டு, மார்க்சிய விமர்சன அணுகுமுறைக்குக் களம் அமைத்து தந்தது. ஆர்.கே. கண்ணன் போன்ற மார்க்சிய விமர்சகர்கள் இலக்கியத்தில் அழகியலின் இடத்தை ஏற்றுக்கொண்டாலும், பெரும்பான்மையான மார்க்சிய விமர்சகர்கள் உள்ளடக்கத்தின் சமூகச்சிக்கலுக்கே அழுத்தம் தந்தனர். போர்க்காலச் சூழலில் தமிழில் வணிக இதழ்கள் நிலைபேறு கண்டன. கல்கியினைத் தொடர்ந்த பொழுதுபோக்கு எழுத்துகளை உற்பத்தி செய்து கொண்டிருந்த அகிலன் போன்ற பொழுதுபோக்கு எழுத்தாளர்கள் பரபரப்பான வாழ்க்கை சிக்கல்களை உள்ளடக்கமாகத் தேர்ந்து கொண்டனர். தமிழ்க் கல்வியாளர்கள் இவர்களைப் படைப்பாளிகளாகக் கண்டனர் கதைகளின் உள்ளடக்கங்களைத் தொகுத்து வாழ்க்கை சிக்கல்களின் அடிப்படையில் வகைப்படுத்தும் போக்கை, 'சமூகப்பார்வை' என்னும் பெயரில் முன்னிலைப்படுத்தினர். இச்சூழலில் மணிக்கொடி படைப்பாளிகளின் படைப்புலகச் சாதனைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யவும், மீதமிருக்கும் மணிக்கொடி படைப்பாளிகளைத் தொடர்ந்து இயங்கச் செய்யவும் ஓர் இயக்கத்தைத் தோற்றுவிக்கும் கட்டாயம் எழுந்தது. சி.சு. செல்லப்பாவும், க.நா. சுப்ரமண்யமும் 'விமர்சன அங்கீகாரத்தை'த் தமிழில் எழுப்ப முயன்றனர்.

சி.சு. செல்லப்பாவின் விமர்சன இயக்கம் 1955இல் சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் நிகழ்ந்த சிறுகதை தொடர்பான விவாதத்தின் மூலம் துவங்கியது. க.நா. சுப்ரமண்யமும் இவ்விவாதத்தில் பங்கெடுத்துக்கொண்டார். தொடர்ந்து 'நல்ல சிறுகதை எப்படி இருக்கும்' என எழுதத் துவங்கினார். பொழுதுபோக்கு எழுத்துகளுடன் முரண்பட்டு இலக்கியப் படைப்புகளை அறிமுகம் செய்வதை நோக்கமாகக் கொண்டது. இவ்விமர்சனம் சி.சு. செல்லப்பாவும் க.நா. சுப்ரமணியமும் இதை ஒரு வாழ்நாள் பணியாகவே தொடர்ந்துள்ளனர். 1958இல் சரஸ்வதி இதழில் 'தமிழ் நாவலும் பண்பாடும்' என்னும் விமர்சனக் கட்டுரையை முன்வைத்துள்ளார். உள்ளடக்கம் சார்ந்த விமர்சனமாக இருந்தாலும் 'கலைத் தன்மை' என்பதற்கு அழுத்தம் தந்துள்ளார். "நாம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் சிலாக்யமான நாவல்கள் சிருஷ்டிக்கப்பட்டுள்ள ஒரு மொழியினர். நாம் ரொம்பவும் சோதனைகள் நடத்திச் சாதிக்க வேண்டி இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு பார்க்க வேண்டும் என்பதுதான் என் கருத்து". செல்லப்பாவின் பார்வை இலக்கியத்தரம் என்பதில்தான் படிந்துள்ளது. இதே கால அளவில் வெளியான கட்டுரைகளில் க.நா. சுப்ரமணியமும் இலக்கியத்தரம் என்பதற்கு அழுத்தம் தந்துள்ளார்.

சரஸ்வதி இதழில் மார்க்சிய சார்பு நிலை கொண்ட விமர்சகர்களுள் ஆர்.கே. கண்ணன் நீங்கலாக ஏனைய விமர்சகர்கள் இலக்கியப் படைப்பின் அழகியல் கூறுகளைக் கவனத்தில் கொள்வதில்லை. "புதுமைப்பித்தனுடைய 'கலை கலைக்காகவே' என்னும் கருத்தோட்டம், காலத்திற்கு ஒவ்வாத கருத்தோட்டம். பழமைவாதக் கருத்தோட்டம் - பித்துப்பிடித்த கருத்தோட்டம், இதன் விளைவாக 'விபரீத ஆசை', 'கயிற்றரவு' ஆகிய பிற்போக்குக் கதைகளை அவர் எழுதியிருக்கிறார்". (சரஸ்வதி 1957) தி.க.சி.யின் இவ்விமர்சன மதிப்பீட்டினையே அக்கால மார்க்சிய விமர்சனப் போக்கின் பொதுபோக்காகக் கொள்ளவேண்டும். இச்சூழலில் தான் 1959இல் விமர்சனத்தையே முதல் நோக்கமாகக் கொண்ட எழுத்து இதழ் சி.சு. செல்லப்பாவால் தோற்றுவிக்கப்பட்டது. இலக்கியப் படைப்பின் அழகியல் கூறுகளை முதன்மை படுத்தும் விமர்சனப் போக்கினை சி.சு. செல்லப்பா மேற்கொள்ளத் துவங்கினார்.

எழுத்து இதழ் துவக்கத்தில் க.நா. சுப்ரமணியத்தையே விமர்சகராக முன்னிலைப்படுத்தியது. க.நா. சுப்ரமணியம் அனுபவ பதிவுமுறை விமர்சன நெறியைச் சார்ந்தவர். தன் இலக்கிய அனுபவத்தைச் சார்ந்து தனக்கு இலக்கியத் தரமானதாகப்பட்ட இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டினார். தன் முடிவிற்கானக் காரணங்களை அவர் விளக்குவதில்லை. இலக்கியத்தில் முரண்பட்ட முடிவுகளுக்கு இடமுண்டு என்பதிலும் நம்பிக்கை கொண்டிருந்தார். க.நா. சுப்ரமணியத்தின் தேர்வில் சி.சு. செல்லப்பா முரண்பாடு கொள்ளவில்லை. என்றாலும் இலக்கியத்தரத்தைப் படைப்பின் உருவத்தைத் துவக்கி பொதுவான தளத்தில் பிறர் ஏற்கும்படிச் செய்வது விமர்சன இயக்கத்தில் காலத்தின் தேவை என்றார். ஐரோப்பிய விமர்சன முறையை உள்வாங்கிக் கொண்டு, இலக்கியப் படைப்பின் வடிவக் கூறுகளை விரிவாக ஆராய்ந்து படைப்பின் இலக்கியத்தரத்தை மதிப்பிடும் விமர்சன நெறியை மேற்கொள்ளத் துவங்கினார். சி.சு. செல்லப்பா இதனை 'அலசல் முறை விமர்சனம்' என்றார்.

அலசல் முறை விமர்சனத்தில் உருவமே முதன்மைப்படுத்தப்படும். மார்க்சிய விமர்சகர்கள் முன்வைத்த உள்ளடக்கம் சார்ந்த விமர்சன நெறிக்கு எதிரிடையானது இது. எனினும் சி.சு. செல்லப்பா படைப்பில் துவங்கும் படைப்பாளியின் தர்சனம் குறித்த அக்கறையும் கொண்டிருந்தார். க.நா. சுப்ரமணியமும் இதே நிலைபாட்டினையே கொண்டிருந்தார். படைப்பின் உருவத்தை முதன்மைப்படுத்துவது காலத்தின் கட்டாயமாக அமைந்தது. பிச்சமூர்த்தி கவிதைகளை மதிப்பிடும்போது செல்லப்பா கவிதையில் ஒளிரும் கவியின் தர்சனத்திற்கு முக்கியத்துவம் தந்துள்ளார்.

சி.சு. செல்லப்பாவின் தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது, தமிழில் இலக்கிய விமர்சனம் என்னும் இரு நூல்களையும் தமிழ் விமர்சன வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பாகக் குறிப்பிட வேண்டும். தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது சிறுகதை குறித்ததான கட்டுரைகளின் தொகுப்பாக அமைகிறது. 18 சிறுகதை ஆசிரியர்களை இந்நூலில் சி.சு. செல்லப்பா விமர்சித்துள்ளார். 'மௌனியின் மனக்கோலம்' கட்டுரையைக் குறிப்பாகச் சுட்டவேண்டும். மௌனி மார்க்சியர்களால் எதிரிடையாகவே தொடர்ந்து எதிர்கொள்ளப்பட்டார். மௌனியைச் சமகாலப்பார்வைக்குக் கொண்டுவர எழுத்து தொடர்ந்து முனைப்பு காட்டியது.

தமிழில் இலக்கிய விமர்சனம் நூலும் எழுத்தில் வெளியான விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பே. 'தமிழில் இலக்கிய விமர்சனம்' என்னும் தலைப்புக்கட்டுரையில் எழுத்து இதழ் வரையிலான தமிழ் இலக்கிய விமர்சன வளர்ச்சியைத் துவக்கியுள்ளார். துவக்கப்புள்ளியாக வ.வே.சு. ஐயரை மதிப்பிடுகிறார். 'ஆய்வுமுறை விமர்சனம்' என்னும் கட்டுரையில் தான்மேற்கொண்ட விமர்சன நெறியை விளக்குகிறார். பொய்த்தேவு, கமலாம்பாள் சரித்திரம் நாவல்களின் பாத்திரப்படைப்பின் சிறப்பினையும் மதிப்பிட்டுள்ளார்.

ந. பிச்சமூர்த்தியைப் பாரதிக்குப் பின்னரான தமிழின் முதன்மைக் கவிஞராக நிறுவ முயன்றார். அதுபோல் மார்க்சிய விமர்சகர்களால் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்ட மௌனியைச் சமகாலத்தின் பார்வைக்கு கொண்டுவர மிகையான தளத்தில் எதிர்கொண்டார்.

சி.சு. செல்லப்பாவின் அலசல் முறை விமர்சனம் எதிர்ப்பையும் வரவேற்பையும் நேரிட்டது. தமிழ்க்கல்வி வட்டத்தில் பெரும் தாக்கத்தை நிகழ்த்தியது. சி. கனகசபாபதி போன்ற கல்வியாளர்கள் எழுத்து இதழில் விமர்சகர்களாக இயங்க அதுவே காரணமாக அமைந்தது. தமிழில் புதுக்கவிதை ஓர் இலக்கிய வடிவமாக நிலைபேறு கண்டதற்கும், தமிழ்க்கல்வி வட்டத்தின் ஏற்பினைப் பெற்றதற்கும் செல்லப்பாவின் அலசல் முறை விமர்சனம் ஒரு காரணமாக அமைந்தது.

சி.சு. செல்லப்பா எண்பதுக்களில் தேசீய இலக்கியம் குறித்ததான மதிப்பீடுகளை மீண்டும் முன்வைத்தார். தேசீயச் சூழலில் இயங்கியவர்கள் என்னும் காரணத்தினால் பி.எஸ். இராமையா போன்றவர்களைத் தலைசிறந்த படைப்பாளிகளாக நிறுவமுயன்றார். அலசல் முறை விமர்சனத்தில் யாரையும் உயர்ந்த படைப்பாளியாக முன்னிலைப்படுத்த இயலும் என்பதற்கு அவருடைய பிற்கால எழுத்துக்கள் சான்றுகளாகின்றன. நவீனத்துவ காலகட்டத்தில் சி.சு. செல்லப்பா பழமைவாதியாக மதிப்பிடப்பட்டார்.

தமிழில் இலக்கிய விமர்சனத்தை ஒரு துறையாக வளர்ச்சியடையச் செய்ததில் சி.சு. செல்லப்பாவிற்குப் பெரும் பங்கு உண்டு.

1. பூரணச் சந்திரன், 'சி.சு. செல்லப்பா', இருபதாம் நூற்றாண்டுத் தினாய்வாளர்கள் (2005).
2. செ. ரவீந்திரன், எழுத்தும் விமர்சனமும், யாத்ரா 54.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக