புதன், 21 ஜனவரி, 2015

சென்னையில் பள்ளிக் கல்வி தொடர்பான ஒரு நாள் மாநாடு

இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சார்பில், பள்ளிக்
கல்வி தொடர்பான ஒரு நாள் மாநாடு சென்னையில் வருகிற 31ஆம்
தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், புதுமையான கற்பித்தல் முறைகள், தொழில்நுட்ப
உதவியுடன் கற்றல், நெறிசார்ந்தக் கல்வி, விளையாட்டுக் கல்வி, ஆசிரியர்கள்
மேம்பாடு, மதிப்பீட்டு முறை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும்,
ஃபிக்கியின் கல்விக் குழு அமைப்பாளருமான டி.விஸ்வநாதன், சென்னையில்
நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: ஃபிக்கி அமைப்பின் சார்பில் முதல்முறையாக பள்ளிக் கல்விக்காகமாநாடு நடத்தப்படுகிறது. பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு பொறியியல்
உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேரும் மாணவர்களில் பெரும்பாலானோர்
முதல் ஆண்டில் தேர்ச்சி பெறுவதில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் கூட 40
சதவீத மாணவர்கள் முதல் ஆண்டில் தேர்ச்சி பெறுவதில்லை. இதற்குப்
பள்ளிகளில் இப்போதிருக்கும் மனப்பாடக் கல்வி முறையே காரணம். மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் புதுமையான முறைகளில்பாடங்களைக் கற்பிக்க வேண்டும். கற்பித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள்இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன என்றார்.
தமிழ்நாடு தனியார் பள்ளிச் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர்
இளங்கோவன்: 10-ஆம் வகுப்பு மாணவர்கள், பிளஸ் 2 வகுப்புக்குச்
செல்லும்போது இடைவெளி ஏற்படுகிறது. அதேபோல், பிளஸ் 2 மாணவர்கள்
கல்லூரிக்குச் செல்லும்போது இந்த இடைவெளி அதிகரிக்கிறது.
இப்போது அமலில் உள்ள பாடத்திட்டம் 7 ஆண்டுகளுக்கு முந்தைய
பாடத்திட்டம். அதை இப்போதுள்ள சவால்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க
வேண்டும். பாடத்திட்டம், கற்பித்தல் உள்ளிட்ட விஷயங்களும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன, என்றார்.
குடியரசுத் தலைவரின் முன்னாள் செயலாளரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.
அதிகாரியுமான முராரி பேசும்போது, இப்போதுள்ள மாணவர்களிடம்
பகுப்பாய்வு திறனும், தொழில் திறனும் குறைவாக உள்ளன. இதை வளர்க்க
வேண்டும். இதை எவ்வாறு வளர்ப்பது என்பது தொடர்பாக மாநாட்டில்
விவாதிக்கப்படும் என்றார்.
ஃபிக்கி அமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சிலின் தலைவர் ரூபன்
ஹாப்டே பேசும்போது, இந்த மாநாட்டில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,
தனியார் பள்ளி நிர்வாகிகள் என 600 பேர் பங்கேற்பார்கள் என
எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக