சனி, 23 ஏப்ரல், 2016

பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட அச்சுப்பிழை 22 மதிப்பெண் 'கருணை' மதிப்பெண்ணாக வழங்கப்பட்டது

.மார்ச் 4ல் பிளஸ் 2 தேர்வுகள்துவங்கி ஏப்.,1ல் முடிவுற்றது. மார்ச் 14ல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கி பலமாவட்டங்களில் நேற்றுடன் திருத்தும் பணிகள் முடிந்தன. கடந்த ஆண்டில் அனைத்து
பாடங்களிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் 'சென்டம்' பெற்றனர். இதனால், விடைத்தாள்
மதிப்பீடு தொடர்பாக கல்வித்துறையில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.இதனால் இந்தாண்டு மாணவர்கள் அதிக 'சென்டம்' எடுப்பதை தவிர்க்க வினாத்தாள் கடினமாக அமைக்கப்பட்டது. அதேநேரம்
வினாத்தாளில் அச்சுப்பிழை மற்றும் தவறுகள் அதிகம் இருந்தன.இதன் எதிரொலியாக, வேதியியலில் 6, இயற்பியலில் 2, கணிதத்தில் 4, வணிக கணிதத்தில் 10 என மொத்தம் 22 மதிப்பெண், கருணை மதிப்பெண்ணாக வழங்கப்பட்டது.பிளஸ் 2 தேர்வுகளில் கடந்த சில ஆண்டுகளில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணில் இது அதிகபட்சம்.இவ்வினாக்களை எழுத முயற்சி செய்த மாணவர்களுக்கு 22 மதிப்பெண் அப்படியே கிடைக்கும் என்பதால் அவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதுகுறித்து விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
சில ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற அச்சுப்பிழையால் வேதியியல் தேர்வுக்கு மட்டும் 22 மதிப்பெண்
கருணையாக வழங்கப்பட்டது.
அதன்பின் பல ஆண்டுகள் தொடர்ந்து சில மதிப்பெண்கள் மட்டுமே கருணை அடிப்படையில் வழங்கப்பட்டன.ஆனால் இந்தாண்டு அதிகபட்சமாக 22 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. வினாத்தாள் தயாரிக்கும் பணியில் தேர்வுத்துறை அதிக கவனம் செலுத்த வேண்டும். அனுபவம் உள்ள அரசு பள்ளி
ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும்.கல்லுாரி ஆசிரியர்களை தவிர்க்கலாம். 0.25 'கட்ஆப்' மதிப்பெண் வித்தியாசத்தில் கூட பொறியியல், மருத்துவ படிப்பு சேர்க்கை வரிசையில் ஆயிரம் மாணவர்களுக்கு பின்தங்கும் வாய்ப்புள்ளது. இதனால் அச்சுப்பிழை மற்றும் தவறு இல்லாமல் வினாத்தாள் தயாரிப்பதில் தேர்வுத்துறை அதிக கவனம் செலுத்த வேண்டும், என்றனர்.