அரசுப் பள்ளி ஆசிரியர்களும் சாதிக்க முடியும் என்பதற்கு இன்னொரு உதாரணம் ஜெ.செந்தில் செல்வன். சிவகங்கை மாவட்டம் மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி கணித ஆசிரியர் இவர். இப்போது, பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவர்கள் கொண்டாடும் கதாநாயகன் இவர்தான். தகவல் தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி இவர் கணிதம் கற்பிக்கும் முறையைப் பார்த்து சக ஆசிரியர்களே வியந்து நிற்கிறார்கள்.

க்ளிக் செய்தால் போதும்

10-ம் வகுப்பு மாணவர்களின் கணக்குப் பாடம் முழுவதையும் தனது 'லேப்டாப்'பில் வலைத்தளச் சரக்காக அடைத்து வைத்திருக்கிறார். www.tnkanitham.in என்ற இவரது 'பிளாக் ஸ்பாட்' பக்கத்தைப் புரட்டினாலே எந்த மாணவரும் ஆசிரியர் துணை இல்லாமலேயே கணிதத்தைக் கற்றுக்கொள்ளலாம். 10-ம் வகுப்பு கணிதத்தில் மொத்தம் இருப்பது 208 ஒரு மதிப்பெண் வினாக்கள். பொதுத்தேர்வில் இதிலிருந்துதான் ஏதாவது பதினைந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இந்த 208 கேள்விகளில் ஒவ்வொன்றுக்கும் தலா நான்கு பதில்களை வலைப் பதிவாக வைத்திருக்கிறார் செந்தில் செல்வன். மாணவர்கள் இந்தப் பக்கத்தில் சென்று 208 கேள்விகளுக்கும் விடையளிக்கலாம். நான்கு விடைகளில் சரியான விடையை 'க்ளிக்' செய்தால் தான் அடுத்த கேள்விக்குப் போக முடியும். அதே சமயம், நான்கு விடைகளில் எதை முதலில் 'க்ளிக்' செய்கிறோமோ அதுதான் அந்தக் கேள்விக்கு மாணவர் அளித்த பதிலாக எடுத்துக் கொள்ளப்படும். அது சரியான விடையாக இருந்தால் ஒரு மதிப்பெண் கணக்கிடப்படும். அத்தனை கேள்விகளுக்கும் விடையளித்து முடிந்த பிறகு, எத்தனை கேள்விகளுக்குச் சரியான பதில் அளித்திருக்கிறோம் என்ற விவரம் 'எக்ஸ்ஸெல் ஷீட்' வடிவில் கிடைத்துவிடும்.

ஆயிரம் ரூபாயில் ஸ்மார்ட் போர்டு

ஒரு மதிப்பெண் கேள்விகள் மாத்திரமல்ல. பத்தாம் வகுப்பு கணிதத்தின் அத்தனை கேள்விகளுக்கும், ஜியாமென்ட்ரி, கிராஃப் உள்ளிட்வற்றுக்கான வழிமுறை விளக்கங்களையும் அழகாக எளிய முறையில் 'பவர்பாயிண்ட் பிரசண்டேஷன்' வடிவில் வடிவமைத்திருக்கிறார் செந்தில் செல்வன். எல்லாவற்றுக்கும் மேலாக, அண்மையில் இவர் உருவாக்கியிருக்கும் 'ஸ்மார்ட் போர்டு' மாணவர்களை மாத்திரமல்ல கல்வித்துறை அதிகாரிகளையும், ஆசிரியர்களையும்கூட அசரவைத்திருக்கிறது.

ஒரு புரஜெக்டர் மட்டும் இருந்தால் போதும் ஆயிரம் ரூபாயில் இந்த 'ஸ்மார்ட் போர்டை' உருவாக்கிட முடியும். கணினி மவுஸ் இல்லாமல் கைவிரல்களையே மவுஸாகக் கொண்டு 'ஸ்மார்ட் போர்டில்' விருப்பம்போல் விளையாடவும் முடியும். கேள்விகளுக்கு மாணவர்கள் எப்படிப் பதிலளிக்க வேண்டும், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படி எப்படிக் கணிதப் பாடங்களை நடத்துவது என்கிற ஆசிரியர்களுக்கான செயல்விளக்கம் உள்ளிட்டவற்றையும் தனது 'பிளாக் ஸ்பாட்' பக்கத்தில் ஒளி - ஒலி வடிவில் பதிவேற்றம் செய்து வைத்திருக்கிறார் செந்தில் செல்வன்.

"எப்படியாவது மாணவர்களைக் கணிதத்தில் குறைந்தபட்சம் 50 மதிப்பெண்கள் எடுக்க வைத்துவிட வேண்டும் என்பதற்காகதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மாதிரி எளிய முறையில் கணிதம் கற்பிக்கும் முறையை உருவாக்கினேன். மாணவர்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அடுத்தடுத்த கட்டத்துக்குச் சென்று அனைத்தையும் கையடக்கத்துக்குள் கொண்டுவந்துவிட்டேன். இப்போது என்னிடம் படிக்கும் மாணவர்கள் கணிதத்தில் 50 மதிப்பெண்ணுக்குக் குறைவாக எடுப்பதே இல்லை" மகிழ்ச்சி பொங்க சொல்கிறார் செந்தில் செல்வன்.

தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு கற்பித்தலில் புதுமை படைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு டெல்லியிலுள்ள என்.சி.இ.ஆர்.டி. ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு அந்த விருதுக்காகத் தமிழகத்திலிருந்து செந்தில் செல்வனும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.