முதல் மதிப்பெண் வாங்கின பிள்ளையை பாலிடெக்னிக் சேர்த்துவிட்டோமே!" என வருத்தப்பட்ட பெற்றோரின் கவலையைப் போக்க யூ.பி.எஸ்.சி. எழுதியவர் சங்கர்கணேஷ் கருப்பையா. ஐந்தாவது முயற்சியில் வெற்றி பெற்றவருக்குக் கிடைத்தது ஐ.ஆர்.எஸ். (இந்திய வருமானவரித் துறை பணி). தேசிய வருமானவரித் துறையின் உதவி ஆணையராகச் சேர்ந்தவர் தற்போது துணை ஆணையராகச் சென்னையில் பணியாற்றிவருகிறார்.

விருதுநகர் மாவட்டம் செவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்கணேஷ் கருப்பையா. அப்பா கருப்பையா விவசாயி. அம்மா மாரியம்மாள் ஊட்டச்சத்துப் பணியாளர். செவலூரின் ஊராட்சி மற்றும் அருகிலுள்ள நடையினேரியின் அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்புவரை தமிழ் வழிக் கல்வி கற்றார் சங்கர்கணேஷ். பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றார். குடும்பச் சூழல் காரணமாக பாலிடெக்னிக்கில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி பிரிவில் சேர்ந்தார்.

வேலை செய்துகொண்டே படித்தவர்

அடுத்து, மதுரையிலும் திருப்பூரிலும் தனியார் ஜவுளி சாயத் தொழிற்சாலை மேற்பார்வையாளராகக் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வேலைபார்த்தார். அப்போது, தினந்தோறும் நாளிதழ் வாசிப்பும், நெல்லை கவிநேசன் எழுதிய 'நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்' புத்தகமும் யூ.பி.எஸ்.சி.யை அறிமுகப்படுத்தின.

உடனடியாக ஆர்வம் வந்தது. வேலைக்குப் போய்க்கொண்டே படிக்கலாம் என முடிவெடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியாகப் பொருளாதாரத்தில் பி.ஏ. படித்தார். பி.ஏ. படிப்பின் இறுதியாண்டில் முதல் முறையாக யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதினார். ஆனால், அப்போது முதல் நிலைத் தேர்வில்கூடத் தேர்ச்சி பெற முடியவில்லை. அதே நேரம் பொருளாதாரத்தில் பல்கலைக்கழக முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து மனம் தளராமல் முயற்சிக்க, 2009-ல் ஐந்தாவது முயற்சியில் ஐ.ஆர்.எஸ். கிடைத்தது.

'பள்ளியில் படிக்கும்போதே நான்தான் முதல் மாணவன். ஆனால் குடும்பச் சூழலால் மேல்படிப்பு படிக்க வைக்க முடியவில்லை என்கிற வருத்தம் அம்மா-அப்பாவுக்கும் அண்ணன்களுக்கும் இருந்தது. அவர்களைப் பெருமைப்படுத்தவே யூ.பி.எஸ்.சி. எழுத முடிவெடுத்தேன்" என்கிறார் சங்கர்கணேஷ்.

தமிழையும் பொருளாதாரத்தையும் விருப்பப் பாடங்களாக எடுத்தார். ஓரளவே ஆங்கிலம் தெரிந்தாலும் கடுமையாக முயற்சி செய்து பொருளாதாரப் பாடத்தை ஆங்கிலத்திலேயே எழுதினார்.

திருப்பூரில் இரவு நேரப் பணி முடித்து பகலில் கோயம்புத்தூரில் நடைபெற்ற யூ.பி.எஸ்.சி. பயிற்சி வகுப்புக்கு வர ஆரம்பித்தார். மத்திய சமூகநீதி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் ஜி.ஆர்.தாமோதரன் கல்லூரி நடத்திய இலவசப் பயிற்சி வகுப்பில் பயின்றார். அதன் பிறகுதான் 2005-ல் முதல் முயற்சி எடுத்தார்.

ஆனால், அதில் வெற்றி தவறிப்போனதால் நண்பர்களுடன் சென்னையில் அறை எடுத்துத் தங்கிப் படித்தார். இத்துடன், அனைத்திந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தின் இலவசப் பயிற்சியும் எடுத்துக்கொண்டார்.

ஆனால் வருமானம் இல்லாமல் சென்னையில் வசிக்க முடியுமா! தான் படித்த படிப்புக்கு ஏற்ற மாதிரி புத்திசாலித்தனமாக யோசித்து, ஜவுளி சாயங்களுக்காக ஆலோசனை அளிக்கும் நிறுவனத்தை நண்பர்களோடு சேர்ந்து தொடங்கினார்.

தவறுகளை சரிசெய்தல்

பொதுவாக, தமிழக மாணவர்கள் பொருளாதாரப் பாடத்தை யூ.பி.எஸ்.சி.யில் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால், சங்கர்கணேஷ் பொருளாதாரத்தை விரும்பி எடுத்து அதில் 300-க்கும் அதிகமான மதிப்பெண்களும் பெற்றார். சொல்லப்போனால் இரண்டு முறை நேர்முகத் தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றுவிட்டார். ஆனால், தமிழில் குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால் தேர்ச்சி பெற முடியவில்லை.

"பொருளாதாரத்தில் காட்டிய ஆர்வத்தை ஆரம்பத்தில் தமிழ்ப் பாடப் பிரிவில் நான் காட்டவில்லை. என்னிடம் இலக்கிய நயம் குறைவாக இருந்ததையும், பத்திகளில் போதுமான வாக்கியங்கள் இல்லாததையும் என்னுடைய தமிழாசிரியர் இளங்கோ பிறகு தெளிவாகச் சுட்டிக்காட்டினார்.

வாரம் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுத்து அவருடைய குறைகளைச் சரிசெய்யும் திறமை படைத்தவர் அவர். எனது குறைகளை சரிசெய்ய கன்னிமாரா நூலகத்துக்குத் தொடர்ந்து சென்று தமிழ் இலக்கியங்களைப் படித்தேன்.

பாடங்களுக்குப் பொருத்தமான இலக்கியங்களைப் படித்து மொழிநடையை மெருகேற்றிக்கொண்டேன். இதனால் 330 மதிப்பெண்கள் பெற்று வெற்றி அடைந்தேன். வேகமாகப் படிக்கும் திறனை வளர்க்க ஜோசப் பென்னட் எழுதிய 'A Course in Light-Speed Reading' எனும் நூல் உதவியது" என்கிறார் சங்கர்கணேஷ்.

ஒரு பக்கம் யூ.பி.எஸ்.சி. எழுதிக்கொண்டே சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.பொருளாதாரத்தையும் முடித்த சங்கர்கணேஷ் சமீபத்தில் பொருளாதாரத்தில் 'இந்தியப் பொருளாதாரம் முக்கியக் கருத்துகள்', 'Indian Economics Key Concepts' , 'At the Service of a Billion Plus' உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

தமிழில் வெற்றி பெறலாம்

பள்ளியில் தமிழ் மீடியம் பயின்றால்தான் அதை விருப்பப் பாடமாக எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. யூ.பி.எஸ்.சி.க்காகப் படிப்பவர்களுக்கு இளம் வயது முதல் தமிழில் நாவல்களும் பத்திரிகைகளும் படிக்கும் பழக்கம் இருந்தால் நல்லது. ஒரு பாட வகுப்பு முடிந்தவுடன் உங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கூச்சப்படாமல் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.

10-க்கு 6 மதிப்பெண் கிடைத்ததில் திருப்தி அடையாமல், அந்த 4 கிடைக்காதது ஏன் என்ற தேடல்தான் வெற்றிக்கு வழி வகுக்கும். யூ.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தை மையமாக வைத்துப் பொருத்தமான நூல்கள் மற்றும் கட்டுரைத் தொகுப்புகளைப் படிக்க வேண்டும். நீங்கள் எழுதும் விடை, புதுமையாக இருக்க வேண்டும். இதைத் திருத்துபவருக்கு உங்கள் விடை ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.