திங்கள், 5 டிசம்பர், 2016

முதல்வர் விரைவில் உடல் நலம்பெற நான் பிராத்திக்கிறேன்'' என்று ரிச்சர்டு பேல்


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என்றும் உலகின் தலைசிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முதல்வருக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்ட செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். நான் அவரது உடல் நிலை குறித்து மிகவும் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். அவர் உடல் நலம் தேறிவருகிறார் என்பது குறித்து அனைவரையும் போல் நானும் உற்சாகமடைந்தேன். துரதிர்ஷ்டவசமாக, அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டும், அடிப்படையில் அவரது ஆரோக்கியம் மேலும் பிரச்சினைக்குள்ளாகும் இடர்ப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கவே செய்தது. 

தற்போது நிலைமை மோசமாக உள்ளது. எனினும் இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திலிருந்து அவரை மீட்க அனைத்துவிதமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

முதல்வரது உடல் நிலையை பல்துறை உயர் நிபுணர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது 'எக்மோ' உயிர் காக்கும் கருவியின் உதவியுடன் இருக்கிறார். இதுதான் இருப்பதிலேயே சிறந்த உயிர்காப்பு உதவி சாதனமாகும். 

உலகின் மிகவும் சிறந்த மருத்துவ மையங்கள் கையாளும் அணுகுமுறையாகும் இது. இந்த முறை சென்னை அப்போலோ மருத்துவமனையில் உள்ளது என்பதே இந்த மருத்துவமனையின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

முதல்வர் விரைவில் உடல் நலம்பெற நான் பிராத்திக்கிறேன்'' என்று ரிச்சர்டு பேல் தெரிவித்துள்ளார்.