செவ்வாய், 6 டிசம்பர், 2016

சிவஞான முனிவர்

"சைவமும் தமிழும் தழைத்தினிது ஓங்க அருள்மழை பொழிந்த கார்முகில், புறச்சமய இருள் போக்கிச் சைவ சமயத்தை விளங்கவைத்த செங்கதிர்" என்று பலவாறு சிவஞான முனிவரைச் சைவசமயச் சான்றோர்கள்
புகழ்வர். இவரைப் புலவர் பெருமக்கள் சிவஞானயோகி, சிவஞானசுவாமி,
மாதவச் செல்வர், முனிவர் என்றெல்லாம் புகழ்ந்து கொண்டாடுவர். தமிழ் இலக்கண நூல்களுக்கும் சைவ சமய சாத்திரங்களுக்கும் திறமானஉரைகண்ட இவரைத் தமிழறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை பின்வருமாறுபாராட்டுகின்றார்: "தெளிவும் திட்பமும் உடைய செய்யுள் இயற்றுவதிலும், சிறந்த
உரைநடை ஆள்வதிலும் இவர் இணையற்றவர். பிற்காலத்துப் பெரும் புலவர் யாவரும் இவர் உரைநடையைப் பெரும்பாலும் தழுவியே செவ்வியசெந்தமிழ் வாசகநூல்கள் வகுத்தனர். செந்தமிழிலே உரைநடைகைவந்தவர்களுள் தலை சிறந்தவர் இவரே. ஆதலின் இவரை உரைமன்னர் என்னலாம்"*

சிவஞான முனிவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் தென்பாண்டி நாட்டில் விக்கிரசிங்கபுரம் என்னும் ஊரில் சைவ வேளாளர்குடியில் பிறந்தார். தந்தையார்பெயர் ஆனந்தக் கூத்தர். தாயார் பெயர்
மயிலம்மை. இளமையில் இவருக்குப் பெற்றோர் இட்டபெயர் முக்காளலிங்கர்
என்பதாகும். சுசீந்திரம் ஈசான மடத்தில் வேலப்ப தேசிகரிடம் சமய அறிவும் தமிழ்ப் புலமையும் பெற்றார். தீக்கைப் பெயராகச் 'சிவஞானம்' என்ற பெயர் இவருக்கு இடப்பெற்றது.