சனி, 10 டிசம்பர், 2016

'மக்கள் பாவலர்' என அழைக்கப்படும் கவிஞர் இன்குலாப்

தமிழ் கவிஞர், பேராசிரியர், சொற் பொழிவாளர், நாடக ஆசிரியர் என பன்முகம் கொண்ட இன்குலாப், பொதுவுடைமைச் சிந்தனையால் கவரப்பட்டவர். இவருடைய 'நாங்க மனுஷங்கடா', கண்மணி ராஜம், மீட்சி, சூரியனைச் சுமப்பவர்கள் போன்ற படைப்புகள் காலத்தால் அழியாதவையாகும். இலக்கிய பணிகளுக்காக சிற்பி இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.


இளவேனில் என்பவர் நடத்திய கார்க்கி இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார். சூரியனைச் சுமப்பவர்கள் என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 'மார்க்சு முதல் மாசேதுங் வரை' என்னும் மொழியாக்க நூலை எஸ். வி. ராஜதுரையும் இன்குலாப்பும் இணைந்து எழுதினார்கள். மனுசங்கடா, நாங்க மனுசங்கடா என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப் படுகிறது. கல்லூரிக் காலத்தில் குரல்கள், துடி, மீட்சி என் மூன்று நாடகங்கள் எழுதினார். பிற்காலத்தில் அவ்வை, மணிமேகலை ஆகியன நாடகங்கள் இவரால் எழுதப்பட்டன. 2007 ஆம் ஆண்டு வரை இன்குலாப் எழுதிய கவிதைகள் அனைத்தும் ஒவ்வொரு புல்லையும் என்னும் பெயரில் ஒரு பெரிய நூலாக வெளிவந்தது.

கலகப்பாடலை உழைக்கும் மக்களுக்கு தந்தவர் மக்கள் கவிஞர் இன்குலாப்.

இன்குலாப் இன்குலாப் என்றால் புரட்சி என்று பொருள். புரட்சிகர சிந்தனையை வாழ்க்கையாகவே வரித்துக்கொண்ட இவர், பெயரையே இன்குலாப் எனப் புனைந்து கொண்டார். இயற்பெயர் சாகுல் அமீது. ராமநாதபுரம், கீழக்கரையில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். பிறந்த குடும்பத்தி லிருந்தே பாட்டுக்கட்டும் திறனையும், எதிர்ப்புக் குரலையும் ஈர்த்துக் கொண்ட இவரின் முதல் கவிதை முயற்சி 12 வயதில் நிகழ்ந்தது.
தர்க்காவில் 'பேய் ஓட்டுகிறேன்' என்று பெண்களைக் குச்சியால் அடித்துத் துன்புறுத்தியதைக் கண்டு பொறுக்க முடியாத கணத்தில் முதல் கவிதை கனன்று வெளிப்பட்டது. அது முதல் இன்றுவரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்.
சாதி, மதம், இனம், மொழி, வர்க்கம் என சகல தளங்களிலும் நிகழும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இவரது குரல் உரத்து ஒலிக்கிறது.
இவரது கவிதைகள் 'ஒவ்வொரு புல்லாய்' எனும் தொகுதியாகவும், கட்டுரைகள் 'ஆனால்' எனும் நூலாகவும், நாடகங்கள் 'குறிஞ்சிப்பாட்டு', 'குரல்கள்' எனும் தொகுதி களாகவும், கதைகளும் குறுநாவலும் 'பாலையில் ஒரு சுனை' எனும் நூலாகவும் வெளிவந்துள்ளன. 'பொன்னிக்குருவி' 'புலி நகச் சுவடுகள்' எனும் கவிதை நூல்களும், 'மணிமேகலை' நாடக நூலும் தயாராகி வருகின்றன.