புதன், 1 ஜனவரி, 2014

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!    புத்தாண்டு சிறக்க முத்தான யோசனைகள்!!


புத்தாண்டு பிறக்கப்போகிறது. நம் தலைக்கு மேல் ஆயிரத்தெட்டு அயல்வேலைகள். பிறகு, என்றைக்கு நாம் நம் வேலையைப் பார்த்திருக்கிறோம். சரி, இந்த ஆண்டிலாவது நாம், தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போமா?

#நாளை முதல் குடிக்க மாட்டேன்; சிகரெட் பிடிக்க மாட்டேன்; தினமும் உண்டியலில் காசு போடுவேன் என்றெல்லாம் தினுசு தினுசாய் சபதம் எடுப்பது நல்லதுதான். அதற்கு முன்பாக 2000-ம் ஆண்டு எடுத்த சபதம் என்ன ஆனது என்று ஒருமுறை திரும்பி பார்த்தீர்களானால் நல்லது. இதனால் ஒருவேளை உங்கள் வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்படலாம்.

#முப்பதாயிரம் ரூபாய் கொடுத்து ஆப்பிள் மொபைல் வாங்கியது எல்லாம் சரி. ஆனால் போன் பில்லுக்கு பயந்து மற்றவர்களுக்கு மிஸ்ட் கால் கொடுத்து கடுப்பேற்றாதீர்கள். இந்த வருடமாவது எதிர்முனையில் ஃபுல் ரிங்டோனை ஒலிக்க விடுங்கள்.

#கல்யாணத்துக்கு உங்களுக்கு பிடித்த ஹீரோவின் தோளோடு தோள் உரச ப்ளக்ஸ் பேனரில் வைப்பதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அதற்காக அஞ்சாறு வருடங்களுக்கு முன்னால் இறந்த ஆயாவின் நினைவு நாள் ப்ளெக்ஸ் பேனரிலும் உங்கள் அபிமான ஹீரோக்களின் படத்தை கோர்த்து விடாதீர்கள்.

#குண்டு உடம்பை தூக்கிக் கொண்டு அதிகாலை வாக்கிங் போவ தெல்லாம் நல்லதுதான். ஆனால் அந்த வாக்கிங் கேப்பில் இரண்டு இளநீர், இரண்டு அருகம்புல் ஜூஸ் குடித்து விட்டு, தெருமுனையில் இரண்டே இரண்டு இட்லியும் மெதுவடையும் சாப்பிட்டு வீடு வந்து சேர்ந்தால் உடம்பு எப்படி இளைக்கும் பிரதர்?

#ரேஷன் கடையோ பெட்ரோல் பங்க்கோ... கியூவை பார்த்தாலே அப்படி ஒரு அலர்ஜி நமக்கு! அந்த நீண்ட கியூவுக்கு நடுவில் புகுந்துகொண்டு செல்ல மூளையில் உள்ள ஹார் மோன்கள் உத்தரவிடும். இதனால் தகராறு ஏற்பட்டால் மூளைக்கு ஆபத்தில்லை. ஆனால் கைகால்கள் பாவம் சார். இதையெல்லாம் இனியா வது விட்டுடுங்க.

#எல்லை பஞ்சாயத்தை காட்டிலும் பெரும் தொல்லையாய் இருக்கிறது சீனாவின் சீப்பஸ்ட் மொபைல்கள். பஸ்ஸில், ரயிலில் என நடுநிசியில் எல்லோரும் தூங்கும்போது அதில் குத்துப்பாட்டை அலறவிட்டு அலப்பரை கூட்டுவதில் நமக்கு இணை நாமேதான். உங்களுக்கு இசையில் ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதை பாழாய்ப் போன சைனா போனில் இனியாவது காட்டாதீர்கள்.

#தியேட்டருக்குள் லேட்டாக நுழைந்து, ‘படம் போட்டு எவ்ளோ நேரமாச்சு?’ என்பதில் தொடங்கி முதல் நாள் படம் பார்த்துவிட்டு, மறுநாள் படம் ஓடுகையில் அடுத்தடுத்த சீன்களை சொல்லி இறுமாப்படைவதில் என்னவொரு சரித்திர பெருமை நமக்கு. பாவமய்யா பக்கத்து சீட் ஆட்கள்.

#பாக்கெட்டில் லட்சம் ரூபாய் இருந்தாலும் பைக்குக்கு மட்டும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவதை இந்த வருஷமாச்சும் நிறுத்துவோமே!

#அதென்ன தண்ணி போட்டால் மட்டும் தப்புத்தப்பாய் இங்கிலீஷ் பேசுவது? பேசி பழகுவது என்றால் எப்போதுமே பேசலாமே! தண்ணிக்கும் இங்கிலீஷுக்கும் என்னப்பா சம்மந்தம்? ஒண்ணுமே புரியலையே நண்பா!

#பஸ் ஓட்டுவோர் கார் ஓட்டுவோரையும் கார் ஓட்டுவோர் டூ வீலர் ஓட்டுவோரையும் டூ வீலர் ஓட்டுவோர் சைக்கிள் ஓட்டுவோரையும் காலம் காலமாய் திட்டிக்கொண்டே இருந்தால் நடப்பவர் எல்லாம் யாரைத் திட்டுவது? இந்த வருஷமேனும் அனுசரிச்சுப் போங்கப்பா.

#ஹெல்மெட் போட்டால் முடி கொட்டிடும். சீட் பெல்ட் போட்டால் ஃப்ரியா வண்டி ஓட்ட முடியாது இதெல்லாம் கூட மூட நம்பிக்கைதான். உயிருக்கு உத்தரவாதமில்லை ஜாக்கிரதை.

#தயவு செய்து வீட்டில் இருந்து கிளம்பும்போதே சாமி படத்துக்கு முன்னால் நின்று திவ்வியமாக கும்பிட்டுக் கிளம்புங்கள். ரோடெல்லாம் சாமிக்கு முத்தம் கொடுத்து பக்கத்து பைக்காரரை பதறி, சிதற வைக்காதீர்.

#ரயில் பயணங்களில் காலுக்கு அடியில் கடலை தோலை குவித்து வைப்பது, டாய்லெட் போனால் திறந்துப்போட்டே வருவது... இன்னி யோட நிறுத்துவோமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக