எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி சென்னையில் நேற்று தொடங்கியது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்காக அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு படிக்கும் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்கான வழிகாட்டும் நிகழ்ச்சி சென்னை விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது.
முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதல் படி நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்செயலாளர் த.சபீதா இந்த திட்டம் பற்றி விளக்கம் அளித்தார்.
வெவ்வேறு பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு மாணவர்களை வழிநடத்துவது என்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதில், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள வினா-விடை புத்தத்தை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் உள்ள மாணவர்களுக்கு சிறப்பாக தயாரிக்கப்பட்ட கையேட்டைக்கொண்டு பயிற்சி அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு பயத்தை போக்கி வருகிறோம். அதற்காக ஆசிரியர்கள் கடும் சிரத்தை எடுத்து வருகிறார்கள்.
மேலும் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கும் சில ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். அனைத்து பள்ளிகளிலும்இந்த திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், இணை இயக்குனர் எம்.பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக