வியாழன், 9 ஜனவரி, 2014

பிளஸ் 2 தனித்தேர்வர்களின் உரிமை கோராத 50 ஆயிரம் மதிப்பெண் சான்றிதழ்களை அழிக்க முடிவு


பிளஸ் 2 தனித்தேர்வர்களின் சுமார் 50 ஆயிரம் மதிப்பெண் சான்றிதழ்களுக்கு பல ஆண்டுகளாக யாரும் உரிமை கோரவில்லை. எனவே, இந்த சான்றிதழ்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகு அழிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற விரும்பினால், அரசுத் தேர்வுகள் இயக்ககத்திடம் மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2006 முதல் செப்டம்பர் 2011 வரை நடைபெற்ற பிளஸ் 2 தேர்வுகளில் தனித்தேர்வர்கள் பலர் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களுக்கு உரிமை கோரவில்லை. அதோடு, விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட்ட பழைய மதிப்பெண் சான்றிதழ்களும் உரிமை கோரப்படாமல் உள்ளன.

இதனால், சுமார் 50 ஆயிரம் மதிப்பெண் சான்றிதழ்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் தேங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூன் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களில் பலர் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெறுவதில்லை. இதன்காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பெண் சான்றிதழ்கள் சேர்ந்துவிடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த உரிமை கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ்களுக்கான தனித்தேர்வர்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இந்த கால அவகாசத்துக்குள் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற விரும்பும் தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய ஆண்டு, மாதம், பதிவெண், மையம் ஆகிய விவரங்களைத் தெரிவித்து, சுயமுகவரியிட்ட ரூ.40-க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையுடன் கீழ்க்கண்ட அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கூடுதல் செயலாளர் (மேல்நிலை), எச்-9 பிரிவு, அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 என்ற முகவரிக்கு அவர்கள் விண்ணப்பித்து சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த கால அவகாசத்துக்குள் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் எவ்வித அறிவிப்புமின்றி அழிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

2 ஆண்டுகள் வரை மட்டுமே..

மேலும் எதிர்காலத்தில் உரிமை கோரப்படாமல் உள்ள மதிப்பெண் சான்றிதழ்கள் இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே பாதுகாக்கப்பட்டு, பின்னர் அழிக்கப்பட்டுவிடும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக