சந்தர்ப்பவாதத் தரகு அரசியலாலும் சக மனிதனை நேசிக்க மறுத்த சாதியப் பிணக்குகளாலும் நசுக்கப்படும் விவசாயிகளையும் துரித வாழ்வில் தொலைந்துகொண்டிருக்கும் ஏராளமான சாமானியர்களையும் “நாம் ஏன் நச்சற்ற, ரசாயனக் கலவை இல்லாத உணவைத் தேடி உண்ணக் கூடாது? எதற்கய்யா இந்த மரபணுப் பயிர்கள்?” என்று சிந்திக்க வைத்தவர், திருக்காட்டுப்பள்ளியில் பிறந்த அந்த மாமனிதர்.
பட்டம் முலம் தனக்குச் சமூகத்தில் அங்கீகாரம் தந்துவிட்டதாலேயே, அந்த ஏட்டுப் படிப்பில் கண்மூடித்தனமான நம்பிக்கையைக் கொண்டதும், அது உருவாக்கிய அளவுகோலைக் கொண்டே, ஒட்டுமொத்த வாழ்வியலை அளப்பதுமான மதயானைக் கூட்டம் நம் ஊரில் அதிகம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனக்குப் போதிக்கப்பட்ட பட்டப் படிப்பினால் கிடைத்த அரசுப் பணி, விளிம்பு நிலை மக்களுக்குத் துளியும் பயன்தராத ஆய்வில் ஈடுபடுகிறது என்பதை உணர்ந்ததும், அந்த வேலையை விட்டுவிட்டு, வேளாண் வாழ்வியலைக் களத்தில் படிக்கக் களம் இறங்கியவர் நம்மாழ்வார்.
எப்படி வந்தது ரசாயன உரம்?
உழவே தலை என்று 5,000-6,000 ஆண்டுகளாக வாழ்ந்த சமூகம், உழவா… ஐயையோ என தலைகுனிய ஆரம்பித்தது,
கடந்த 50-60 ஆண்டுகளாகத்தான் இருக்கும். இங்கு ஒரு மாபெரும் உழவுக் கலாச்சாரம் இருந்தது; மாபெரும் வேளாண் அறிவியல் அதில் கலந்திருந்தது. சிற்றெறும்புக்கும் சிட்டுக்குருவிக்கும் சேர்த்துச் சமைக்கும் பல்லுயிர் பேணும் அறம் இருந்தது. அப்படியாயிருந்த வேளாண் அறம், திட்டமிடப்பட்ட வணிகச் சுரண்டலுக்காகத் தேயிலை, புகையிலை, தைலமரம், உடை மரம், ஒட்டு வீரிய ரகம் என மொத்தமாகத் தன் உருவிழக்கத் துவங்கியது நம்மை ஆண்ட வெள்ளையர்களால்.
“இரண்டாம் உலகப் போருக்குப் பின், பல பன்னாட்டு நிறுவனங்களில் விற்காத வெடிகுண்டுகளின் மூலப்பொருள்களான அம்மோனியா முதலான ரசாயனக் கலவைகளை விற்றுப் பணமாக்க அதே ரசாயனம் மூலம் உற்பத்தியைப் பெருக்கலாம் என்ற கருத்தாக்கத்தை வேளாண் உலகில் உலகெங்கும் விதைத்த காலம் தொட்டு இந்தியாவின் வேளாண்மை கடன்காரத் தொழிலாயிற்று” என்பதைத் தமிழகத்தில் முதலில் உணர்த்தியவர் நம்மாழ்வார்.
கருக்கொண்ட புரட்சியாளர்
அரசுப் பணியை விட்டுவிட்டு, களக்காட்டில் அரசு சாரா நிறுவனம் ஒன்றில் சில காலம் பணியாற்றியபோதே, இடுபொருள் முதலீட்டில் விவசாயிகள் கடன்படுவதைப் புரிந்துகொண்டார். அதேசமயம், அவர் படித்த ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ நூல், ‘நாம் எதை இழக்கிறோம்? நாம் எங்கு சிக்குண்டிருக்கிறோம்? இயற்கையை விட்டு நம் வேளாண்மை எப்படி விலகுகிறது? பகுத்தறிவு நம் நுண்ணறிவை எப்படிச் சிதைக்கிறது’ என்பதையெல்லாம் அவருக்கு இன்னும் ஆழமாகப் புரியவைத்தது.
உசுப்பிய விடுகதை
பிறகு, களக்காட்டிலிருந்து புறப்பட்டு அங்கட்டி பகுதிக்குச் சென்றார். மேட்டூர் அணையால் இடம்பெயர்ந்து, அங்கட்டி பகுதியில் வறுமையில் உழன்றுகொண்டிருந்த விவசாயிகளுடன் வாழ்ந்தார். அப்போது, அவரை ஒரு விடுகதை உசுப்பியது என அடிக்கடி அவர் பேச்சில் சொல்வதுண்டு. “பழமாகிக் காயாவது எது? காயாகிப் பூவாவது எது?” என்பதுதான் அவர் சொல்லும் அந்த விடுகதை. பழமாகிக் காயாவது என்பது எலுமிச்சைதான். பழம் எப்படிக் காயானது? எலுமிச்சையில் அதிகமாக உப்பைப் போட்டு ஊறுகாய் செய்கிறோம் இல்லையா, அதுதான் பழம் காயாவது. அப்படியானால், உப்புதான் மக்கவிடாமல் தடுக்கிறது என்பது அவர் மனதில் அடிக்கடி ஓட ஆரம்பித்தது. இந்த ரசாயன உப்பை ஏராளமாக மண்ணில் கொட்டினால், களையெல்லாம் எப்படி மக்கி உரமாகும்? இயல்பாக உருவாக வேண்டிய மக்கு உரத்தை இந்த உர உப்பு எப்படித் தடுத்து, விவசாயியை இடுபொருள் செலவால் கடன்பட வைக்கிறது என்பதை மசானபு ஃபுகோகா சொன்னதைத் தன் நுண்ணறிவால் புரிந்துகொண்டார் நம்மாழ்வார்.
அன்றிலிருந்து “இப்படி உரமிடுவது மண்ணை எப்படிப் பாழாக்குகிறது? அதிக நீர்த் தேவையை உண்டாக்கி மறைநீரை (வர்ச்சுவல் வாட்டர்) அதிகரித்து, விவசாயத்தை எப்படிச் சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது” என்று விளக்க ஆரம்பித்தார்.
பூச்சிமருந்தா; பூச்சிக்கொல்லியா?
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருளில் மெய்ப்பொருள் தேடியவர் நம்மாழ்வார். ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த கருத்தரங்கிலும் பயிற்சிப் பட்டறையிலும் பயின்ற நம்மாழ்வார், அங்கு வந்த வெள்ளைக்கார ஆசிரியை “பெஸ்டிசைடுக்கு தமிழில் என்ன? ” எனக் கேட்க, “பூச்சிமருந்து” என்று சொல்ல, “ஹெர்பிசைடுன்னா களைக்கொல்லி, சூசைடுன்னா தன்னைத்தானே கொல்வது, ஆனால் பெஸ்டிசைடை மட்டும் பூச்சிக்கொல்லின்னு சொல்லாமல், பூச்சிமருந்து என்கிறீர்களே?” என அவர் கேட்டாராம். ஒரு கொலைகார வஸ்துவை மருந்து என்ற பெயரில் ஏமாற்றி, நம் ஏழை விவசாயிகளிடம் சந்தை வித்திருக்கிறது என்பதை நம்மாழ்வார் தெளிவாக உணர்ந்துகொண்டார். அன்று முதல் “அது பூச்சிக்கொல்லி விஷமடா… மருந்து அல்ல” என விவசாயிகளிடம் தெளிவுபடுத்த ஆரம்பித்தார் நம்மாழ்வார்.
தன்னை ‘லோ எக்ஸ்டெர்னல் இன்புட் ஸஸ்டெய்னபில் அக்ரிகல்ச்சர்’ அமைப்பில் ஈடுபடுத்திக்கொண்டு, பல காலம் கிராமம் கிராமமாகத் தன் நுண்ணறிவில் பெற்றதையும், உலக அரங்கில் ஃபுகோகாவிடமும் ரேச்சல் கார்சனிடமும் நூலறிவில் பெற்றதையும், விளிம்பு நிலையில் இருந்த படிப்பறிவில்லாத விவசாயியும் புரிந்துகொள்ளும்படி எளிய மொழியில் பேசி விளக்கியது நம்மாழ்வாரின் தனித்துவமான வெற்றி எனலாம்.
குரு பெர்னார்ட்
பெல்ஜியம் நாட்டு பெர்னார்டைத்தான் அவர் தன்னுடைய இயற்கை விவசாயத்தின் குருவாகப் பலமுறை சொல்வார். பெர்னார்ட் இன்றும் ஆரோவில்லில் வாழும் இயற்கை வேளாண் வித்தகர். தரிசாகவும், நீர் இருப்பே இல்லாமலும் இருந்த கல் நிறைந்த நிலம் பெர்னார்டுக்கு வழங்கப்பட்டது. அவரோ, செலவே இல்லாமல், இயற்கையை முதலீடாக வைத்தே அந்த நிலத்தைச் சோலையாக மாற்றிக்காட்டினார். பயிர் சுழற்சியையும் பல்லுயிர்ப் பாதுகாப்பையும் உறுதிசெய்வது தனிப் பயிர் சாகுபடியில் இல்லை; கூட்டுப் பயிராய், அணி நிழல்காடாகத் தன் நிலப்பரப்பை அமைப்பதில்தான் இருக்கிறது என்பதை அவரிடம் அறிந்துகொண்ட நம்மாழ்வார், தன் ஆசான் பெர்னார்டை ஒவ்வொரு பேச்சிலும் நினைவுகூர மறப்பதில்லை.
எதிர் யுத்தங்கள்
மரபணு மாற்றிய பயிர்களை இந்தியாவில் வேகமாகப் புகுத்த அரசு முனைந்தபோது, தமிழகத்தில் ஏராளமான விவசாயிகளைக் கைகோக்கச் செய்து, களம் இறக்கிய பசுமைப் போராளி நம்மாழ்வார். இன்னும் முழுமையாக ஆய்வுசெய்யப்படாமல், அறிவியல் தரவுகளைப் பாரபட்சமில்லாது நிறுவாமல், வணிகத்தில் கோலோச்சுவதற்காக நம் இந்திய மக்களைப் பலிகடாவாக்கும் மரபணுத் தொழில்நுட்பத்தைக் கடுமையாகவும் அறிவியல்பூர்வமாகவும் சாடியவர் அவர். இங்கிலாந்தின் செரிலினியின் சான்றுகளை, இந்த நிலத்து மாயாண்டிக்கும் புரியும்விதமாக கிராமம் கிராமமாக எடுத்துச்சொன்னது அவர் நிகழ்த்திய சத்தியாகிரகம். ‘பூவுலகின் நண்பர்கள்’ முதலான தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து, பாதுகாப்பான உணவுக் கூட்டமைப்பை உருவாக்கி, மரபணு மாற்றிய பயிர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியதிலும் கடைசியில், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பி.டி. கத்திரிக்குக் காலவரையற்ற தடை விதித்ததிலும் முக்கியக் காரணமாக இருந்தவர் நம்மாழ்வார்.
இயற்கையில் லயித்தால் போதுமா?
வட இந்தியாவில் வந்தனா சிவா, கவிதா குருகந்தி, தேவேந்தர் சர்மா முதலான பசுமைப் போராளிகள் குரல் கொடுக்கும்போதெல்லாம், தமிழகத்தின் குரலாக ஒலித்தவர் நம்மாழ்வார். வேளாண் மீட்பும் சூழல் பாதுகாப்பும் வெறும் சத்துணவுத் தேடலிலும், குருவி காகத்தின் குரல் சிலாகிப்பிலும் மட்டுமானதல்ல; சக மனிதர்களின் விடுதலையிலும்தான் சாத்தியம் என்பதை அடிக்கடி அறிவுறுத்தியவர் அவர். கீழவெண்மணி சாதியப் படுகொலையையும், அதற்கு ஆதிக்க சக்திகள் பெற்ற நீதிமன்ற விடுதலை வரிகளையும் வருத்தமுடன் அவர் விவசாயக் கூட்டங்களில் பேசுவது ஒரு சான்று.
உருவாக்கப்பட்ட படை
நம்மாழ்வாரால் உருவாக்கப்பட்டவர்கள், உத்வேகமடைந்தவர்கள், உணர்வுபெற்றவர்கள் ஏராளம். ஒருநாள் பூம்புகார் கூட்டத்தில், ‘காட்டு யாணம்’ நெல்லை வழங்கி, “நீங்க ஏன் பழம் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் பணிகளைத் தொடர்ந்து செய்யக் கூடாது?” என கிரியேட் ‘நெல்’ஜெயராமனிடம், அவர் விதைத்த விதை இன்று அதே ‘நெல்’ஜெயராமன் 158 பாரம்பரிய ரகங்களை மீட்கவும் பாதுகாத்துப் பயிரிட்டுக் கொடுக்கவும் வழிவகுத்திருக்கிறது. எங்கள் ‘பூவுலகின் நண்பர்கள்’அமைப்பைத் தொடர்ந்து மரபணு மாற்றிய பயிர்களுக்கு எதிரான களத்தில் நிறுத்தியது, குப்பை உணவுக்கு எதிராகச் சிறுதானிய உணவை மீட்டெடுக்க வைத்து, உலகின் பல்வேறு மொழிகளில் உள்ள செய்திகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து பரப்பத் துணைநின்றது எல்லாம் நம்மாழ்வாரும் அவருடைய கருத்தாக்கமும்தான். நம்மாழ்வாரின் இறுதிச்சடங்கில் மண்ணை நேசிக்கும் விவசாயிகளின் கண்ணீர் மட்டும் நிறைந்திருக்கவில்லை. ஏராளமான இளைஞர் கூட்டம் தங்கள் ஆசானை இழந்த அழுகுரலுடன் அங்கே நிரம்பியிருந்தது. “எதையாவது செய்யணும், இந்த மண்ணை நேசித்து, சூழலைக் காக்கும் இயக்கத்தில் என் பங்கை நான் எப்படியாவது ஆற்ற வேண்டும்” என அந்த இளைஞர் கூட்டம் அங்கு சூளுரைத்தது.
ரசாயனம் இல்லா விவசாயம், மருந்தில்லாத மருத்துவம், சுவரில்லாத கல்வி – இவைதான் மாற்றுலகை நிர்ணயிக்க அவர் சொன்ன சூத்திரம். நாம் வாழும் காலத்தின் காந்திகளில் அவரும் ஒருவர் என்றால், அது கூடுதல் இல்லை!
சிவராமன் சித்தமருத்துவர், சமூக விமர்சகர் - தொடர்புக்கு:herbsiddha@gmail.com.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக