வியாழன், 9 ஜனவரி, 2014

நீதிபதிகள் நியமன பெயர் பட்டியல் நியாயமற்றதாக உள்ளது உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன்



சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமனம் செய்வது தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியல் நியாயமற்றதாக உள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதியான சி.எஸ்.கர்ணன், உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் புதன்கிழமை நேரில் ஆஜராகி தெரிவித்தார்.

இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதை பதிவுசெய்து கொள்ளுமாறும் நீதிபதிகளிடம் அவர் தெரிவித்தார்.

வழக்கு விசாரணையின்போது, உயர்நீதிமன்ற நீதிபதியே நேரில் ஆஜரானது வழக்குரைஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிபதி நியமனப் பட்டியல் தொடர்பாக மூத்த வழக்குரைஞரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஆர்.காந்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி வி.தனபாலன், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பின்னர், இந்த பட்டியல் தொடர்பாக இப்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக வழக்கறிஞர் ஆர்.காந்தி தாக்கல் செய்த மனு விவரம்:

கடந்த 30 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு ஒரே சமூகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மட்டுமே தொடர்ந்து நியமிக்கப்படுகின்றனர்.

அரசியலமைப்புச் சட்டத்திலும் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இருப்பினும், உண்மையான மற்றும் தகுதியான இதர சமூக வழக்குரைஞர்கள் உயர்நீதிமன்ற நீதிபதி பதவியில் சமமாக நியமிக்கப்படவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கான புதிய நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக 12 பேரின் பெயர்கள் அடங்கியப் பட்டியலை உயர்நீதின்ற நீதிபதிகள் குழு டிசம்பர் இறுதி வாரத்தில் தயார் செய்தது. அப்பட்டியலில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அவர்களை நீதிபதியாக நியமிப்பதற்கு போதிய தகுதி இல்லை. எனவே சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றச் செயலருக்கு அனுப்பப்பட்ட பெயர்ப் பட்டியலை திரும்பப் பெறுவதற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த வழக்கு, எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை வேறு டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றக் கோரும் மனுவை மூத்த வழக்குரைஞர் காந்தி செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனு தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த மனுவை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதிகள் வி.தனபாலன், கே.கே.சசிதரன் ஆகியோர் அடங்கிய புதிய அமர்வுக்கு வழக்கை மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சிறப்பு அமர்வின் முன்பு புதன்கிழமை (ஜனவரி 8) விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வழக்குரைஞர்கள் சங்கம் தங்களையும் மனுதாரராக இணைத்துக் கொள்ளுமாறு இணைப்பு மனுத் தாக்கல் செய்தது.

இந்த மனு மீது மனுதாரரின் வழக்குரைஞர் எஸ்.பிரபாகரன் வாதாடிக்கொண்டிருக்கும்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் நீதிமன்றத்துக்குள் வந்தார்.

""நீதிபதிகள் நியமனம் தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் நியாயமற்றதாக உள்ளது. அதனால், இந்த வழக்கு தொடர்பாக எனது பெயரில் மனுத் தாக்கல் செய்ய உள்ளேன். இதைப் பதிவு செய்து கொள்ளுங்கள்'' என்று நீதிபதிகளிடம் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

இந்த சம்பவம் வழக்குரைஞர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமையும் தொடர்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக