வியாழன், 9 ஜனவரி, 2014

வெற்றியாளராக  நாவன்மை அவசியம்


வெற்றியாளராக  நாவன்மை அவசியம்.......

ஒரு மனிதன் வெற்றியாளராக மாறுவதற்கு நிறைய பண்புகள் தேவைப்படுகின்றன. மனிதனுடைய நற்பண்புகளே அவனை வெற்றியாளராக உருவாக்குகிறது.

நாம் வெற்றியாளராக உருமாற, நல்ல பேச்சுத் திறமை இருக்க வேண்டும். "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என்பது முதுமொழியாகும். பேச்சு என்பது ஒரு கலை. ஒரு வாசகம் ஆயினும் திருவாசகமாய் பேச வேண்டும். "எதைக் கொட்டினாலும் அள்ளி விடலாம். ஆனால் வார்த்தையைக் கொட்டினால் அள்ள முடியாது" என்பது ஆற்றோர் வாக்கு.

உலகிலேயே பயங்கரமான ஆயுதம் நாக்குதான். இதனால் தான் நம்முடைய நாக்கை முப்பத்திரண்டு பற்கள் காவல் காக்கின்றன. எனவே நம்முடைய பேச்சு சுருக்கமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்.

இன்னும் சொல்வதானால் எத்தனையோ பிரச்னைகள் பேச்சு வார்த்தைகள் மூலமே சமரசம் செய்யப்படுகின்றன. ஒருவருடைய இதமான பேச்சு பகைவரைக் கூட நட்பு பாராட்ட வைக்கும். பேச்சுத் திறமையினாலே சிகரத்தைத் தொட்ட நிறைய சாதனையாளர்கள் உள்ளனர். உதாரணமாக மார்டின் லூதர் கிங், வின்ஸ்டன் சர்ச்சில், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

நல்ல பேச்சுத் திறமையைப் பற்றி ஒரு நகைச்சுவைத் துணுக்கு உள்ளது. ஒரு பேச்சாளர் மேடையில் வெகுநேரம் வன்முறையைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். பேசி முடித்த உடன், அந்தப் பேச்சாளர் பார்வையாளர்களை நோக்கி, "நான் பேசிய கருத்துகளில் எந்தக் கருத்து உங்களுக்குப் பிடித்திருக்கிறது?" என்று கேட்கிறார். உடனே ஒரு பார்வையாளர் சட்டென்று எழுந்து, "ஐயா...! நீங்கள் நிறைவாகக் கூறிய நன்றி...! வணக்கம்...! என்ற கருத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்றார். ஆக, சுருக்கமாகவும், சுவையாகவும் பேசுவது என்பது, ஒரு மனிதன் தன்னை வெற்றியாளனாக மாற்றிக் கொள்வதற்கு தேவைப்படும் முதன்மையான குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக