வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

வேலை வேண்டுமா?

போன ஆண்டு ஜூன் மாதம் லாஸ்லோ பாக், டைம்ஸ் இதழுக்காக ஒரு பேட்டியை அளித்திருந்தார். பாக் சாதாரண ஆளில்லை. உலகின் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் மனிதவளத் துறையில் மூத்த அதிகாரி. அந்தப் பேட்டியில் அவர் முக்கியமான விஷயம் ஒன்றைக் கூறினார், "வேலைக்கு ஆள் எடுக்கும்போது ஜி.பி.ஏ-வும் (தரத்தின் அடிப்படையிலான மதிப்பெண் சராசரி) தேர்வு மதிப்பெண்களும் எந்த விதத்திலும் பயனளிப்பதில்லை. அவை நமக்கு எதையும் சொல்வதில்லை" என்கிறார் அவர். மேலும், "கல்லூரிப் படிப்பு பெற்றிராதவர்களின் எண்ணிக்கை கூகுளில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது" என்கிறார். இந்த எண்ணிக்கை சில குழுக்களில் 14% வரை இருக்கிறது.

வழி என்ன?

சமீப காலமாகப் பெரும்பாலானவர்களின் கேள்வி இதுதான்: "என் பிள்ளைக்கு வேலை கிடைப்பதற்கு வழி என்ன?" பாக் என்ன சொல்கிறார் என்பதை இவர்கள் எல்லா ரும் கேட்பது மிகவும் பயனளிக்கும் என்று நினைக்கிறேன்.

பாக் மேற்சொன்ன விஷயங்களை நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். "நல்ல மதிப்பெண்களால் நிச்சயம் பிரச்சினை இல்லைதான்" என்கிறார் பாக். கூகுளில் நிறைய வேலைகளுக்குக் கணிதம், கணக்குப் போடுதல், கணினி மொழியை எழுதுதல் ஆகிய திறன்கள் அடிப்படை. எனவே, மேற்கண்ட துறைகளில் நீங்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தால், அந்தத் திறனையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், கூகுள் தேடுவது இதற்கெல்லாம் மேலே. "வேலைக்கு ஆள் எடுப்பதில் நாங்கள் ஐந்து விஷயங்களைப் பின்பற்றுகிறோம். தொழில்நுட்பம் சார்ந்த வேலை என்றால், கட்டளை நிரல்களை எழுதும் திறனை மதிப்பிடுவோம். நாங்கள் எதிர்பார்க்கும் முதல் விஷயம் பொதுவான புரிந்துகொள்ளும் திறன்தான். தவிர, அறிவுத் திறன் (ஐ.க்யூ.) அல்ல. ஒரு விஷயத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும்போதும் செயல்படக்கூடிய திறன்தான் முக்கியம். சிதறிக்கிடக்கும் தகவல்களையெல்லாம் ஒன்றுதிரட்டும் திறன்தான் முக்கியம். ஒருவருடைய இயல்புகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கான முறையான தேர்வுகளைக்கொண்டு மேற்கண்ட குணங்களையெல்லாம் நாங்கள் கண்டறிகிறோம்" என்கிறார் பாக்.

தலைமைப் பண்பு

அடுத்த விஷயம், தலைமைப் பண்புதான் என்கிறார் அவர். "வழக்கமான தலைமைப் பண்பைவிட, வளர்ந்து வரும் தலைமைப் பண்புக்குத்தான் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நீங்கள் செஸ் சங்கத்துக்குத் தலைவராக இருந்திருக்கிறீர்களா? விற்பனைப் பிரிவின் துணை அதிகாரியாக இருந்திருக்கிறீர்களா? எப்படி அவ்வளவு சீக்கிரம் அந்தப் பதவியை அடைந்தீர்கள்? இதெல்லாம் வழக்கமான தலைமைப் பண்பைப் பற்றிக் கேட்கப்படும் கேள்விகள். நாங்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒரு பிரச்சினை என்றால், ஒரு குழுவின் அங்கமாக இருக்கும் நீங்கள், சரியான தருணத்தில் நீங்களாகவே முன்வந்து வழிநடத்தத் தயாராக இருக்கிறீர்களா? அதே போல், சரியான தருணத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி, மற்றவர் அந்தப் பொறுப்பை ஏற்க அனுமதிக்கிறீர்களா? இதெல்லாம்தான் முக்கியம். இந்தப் பணிச்சூழலில் திறன்வாய்ந்த தலைவராக இருப்பதற்கு அதிகாரத்தைத் துறக்கத் துணியக் கூடிய குணம் மிக முக்கியம்" என்கிறார் பாக்.

அப்புறம் என்னென்ன? தன்னடக்கமும் தன்னுடைய தாகக் கருதும் இயல்பும். "ஒரு விஷயத்தில் தனக்குப் பொறுப்பு இருக்கிறது என்று நினைத்து முன்வரும் குணம், அது மிகவும் முக்கியம்" என்கிறார் பாக். எந்தப் பிரச்சினைக்கும் தீர்வுகாண முயலும் பண்பும் அப்படித் தீர்வுகாண முடியாத பட்சத்தில், தனது நிலையிலிருந்து இறங்கிவந்து பிறருடைய யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் பண்புதான் அது. "தீர்வை எட்டுவதற்கு நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து என்ன செய்ய முடியும் என்பதுதான் உங்களுடைய இறுதி இலக்கு. என்னால் முடிந்ததை நான் செய்துவிட்டேன், பிறர் பங்களிப்பு செய்வதற்காக நான் இப்போது ஒதுங்கிக்கொள்கிறேன் என்னும் இயல்பு" என்று விளக்குகிறார் பாக்.

சின்ன ஈகோவும் பெரிய ஈகோவும்

மிகவும் வெற்றிகரமாக இருப்பவர்கள், அதாவது நாங்கள் வேலைக்கு எடுக்க விரும்புபவர்கள், தங்கள் நிலைப்பாடுகளில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். அனல்பறக்க விவாதிப்பார்கள். ஆனால், மறுக்க முடியாத ஒரு புதிய கோணத்தை நாங்கள் அவர்களுக்குக் காட்டும்போது, "ஆமாம், நீங்கள் சொல்வதுதான் சரி" என்று ஒப்புக்கொள்வார்கள். ஒரே சமயத்தில் ஒரே நபருக்குள் பெரிய ஈகோவும் சின்ன ஈகோவும் இருக்க வேண்டும்" என்கிறார் பாக்.

"நிபுணத்துவம் என்ற விஷயத்தை நாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதில்லை" என்கிறார் பாக். "நல்ல சிந்தனைத் திறன் கொண்டவர் இயல்பாகவே ஆர்வம் கொண்டவராகவும் கற்றுக்கொள்ள விரும்புபவராகவும் தலைமைத் திறனின் அறிகுறிகளைக் கொண்டவராகவும் இருப்பார். அவரை நிபுணருடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 'நான் இதை நூற்றுக்கணக்கான முறை பார்த்திருக்கிறேன்' என்று அந்த நிபுணர் சொல்வார். நிபுணர் அல்லாதவரும் பலமுறை இதுபோல்தான் சொல்வார் என்றாலும், அவ்வப்போது மிகமிகப் புதியதும் பிரமாதமானதுமான ஒரு விஷயத்தை அவர்கள் முன்வைப்பார்கள். அதன் மதிப்பு மிகவும் உயர்ந்தது" என்கிறார் பாக்.

வேலைக்கு ஆள் எடுப்பதற்கு பாக் பின்பற்றும் அணுகுமுறையை இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்: திறமைகள் வெவ்வேறு வடிவங்களில் வரலாம், வழக்கத்துக்கு மாறான வகைகளிலும் அவை காணக் கிடைக் கலாம். எனவே, ஆள் எடுக்கும் அதிகாரிகள் பிரபலமான கல்லூரிகளின் பெயர்களைப் பார்த்து அசந்துவிடாமல், ஒவ்வொருவரையும் விழிப்புடனே அணுக வேண்டும். ஏனென்றால், "முறையான கல்வியை அதிகம் பெறாமல், தாங்களாகவே தடுக்கி விழுந்து கற்றுக்கொண்டவர்கள் பிரமாதமானவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை எப்பாடுபட்டாவது நாம் கண்டுபிடித்தாக வேண்டும். புற்றீசல்போல் பெருகியிருக்கும் கல்லூரிகள் தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. மலைமலையாகக் கடன்தான் அதிகரிக்கிறது. உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான, உருப்படியான விஷயங்கள் எதையும் நீங்கள் கற்றுக்கொள்வதில்லை."

கூகுளுக்குப் பெருமளவில் திறமைசாலிகள் தேவைப்படுகிறார்கள் என்பதால், அவர்களால் மரபான தர அளவீட்டு முறைகளைத் தாண்டி, அந்தத் திறமைகளைக் கண்டுபிடிக்க முடியும். பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிக்குப் போய் நன்றாகப் படிப்பதுதான் தங்கள் வருங்காலத்துக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளச் சிறந்த வழி என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு பாக் முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்கிறார். "எச்சரிக்கை. உங்கள் படிப்பு என்பது எந்த வேலையையும் நீங்கள் செய்யக்கூடியவர் என்பதற்கான அங்கீகாரம் அல்ல. உங்களுக்குத் தெரிந்ததைக் கொண்டு நீங்கள் எதைச் செய்யப்போகிறீர்கள் என்பதுதான் இந்த உலகத்துக்கு முக்கியம். அதற்குத்தான் உங்களுக்குச் சம்பளமும் கொடுக்கப்போகிறார்கள். புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தல் என்பது ஒரு குழு முயற்சியாக ஆகிவரும் இந்தக் காலத்தில், வேறு விதமான சில திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது: தலைமைப் பண்பு, தன்னடக்கம், ஒத்துழைப்பு, தகவமைத்துக்கொள்ளும் திறன், கற்றல், மறுபடியும் கற்றல் ஆகிய திறன்கள்தான் அவை. நீங்கள் எங்கு வேலைக்குச் சென்றாலும் இவற்றுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக