வங்காள மாகாணத்தை அன்றைய பிரிட்டிஷ் அரசு அக்டோபர் 16, 1905இல் இரண்டாகப் பிரித்தது. கிட்டதட்ட 2 லட்சம் சதுர மைல்கள் நிலப்பரப்பு, 8 கோடி மக்கள் தொகை கொண்ட வங்காள மாகாணத்தை நிர்வகிக்க இயலாத சூழலில்தான் இந்தப் பிரிவினை முடிவுக்கு வந்ததாக ஆங்கில அரசு அறிவித்தது. ஆனால் இது அக்காலகட்டத்தில் வங்கத்தில் எழுந்த மாபெரும் தேசிய எழுச்சியை நீர்த்துப் போகச் செய்யும் ஆங்கில அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிதான் என இந்திய தேசிய விடுதலைப் போராட்டக்காரர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. வங்கப் பிரிவினை நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் போராட்டக்காரர்களால் துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது.
அதன் விளைவாக ஆயுதப் போராட்டக் குழுக்கள் உருவெடுத்தன. வங்கத்தில் செயல்பட்ட யுகாந்தர் (Yugantar-New Era) இயக்கம் அதில் முக்கியமானது. விடுதலைப் போராளிகளுக்கு எதிராகக் கொடிய தீர்ப்புகளை வழங்கி வரும் நீதிபதி கிங்ஸ்போர்டைக் கொல்ல அந்த இயக்கம் சதித் திட்டம் தீட்டியது. இத்தாக்குதலுக்காக குதிராம் போஸ், பிரபுல்லா சாக்கி ஆகிய இளைஞர் இருவர்களுக்கு யுகாந்தர் இயக்கத்தால் பயிற்சி அளிக்கப்பட்டது.
இச்சதித் திட்டத்தைச் செயற்படுத்த குதிராம், பிரபுல்லா இருவரும் இன்றைய பீகார் மாநிலம் முஸாப்பூர் அருகில் உள்ள மோதிஜ்ஹில் என்னும் கிராமத்திற்கு 1908ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கிருஷோரிமோகன் பந்தபாத்யா என்பவரது வீட்டில் தங்கவைக்கப்பட்டனர். இருவரும் முறையே ஹரன் சர்க்கார், சுகுமார் ராய் ஆகிய ரகசியப் பெயர்களில் அழைக்கப்பட்டனர். நீதிபதி கிங்ஸ்போர்டின் தினசரி நடவடிக்கைகளை இருவரும் தொடர்ந்து கவனித்த பிறகு அவர் வீட்டிலிருந்து ஐரோப்பியன் கிளப்புக்குப் போகும் அல்லது திரும்பும் வழியில் தாக்கலாம் எனத் தீர்மானித்தனர். இத்திட்டம் பற்றி யுகாந்தர் இயக்க உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தினர். இக்காலகட்டத்தில் அவர்களுக்குத் தேவையான பண உதவிகளை, யுகாந்தர் உறுப்பினர்களான பரிந்திர குமார் கோஸ், அரவிந்த கோஸ் ஆகியோரிடம் இருந்து பெற்று வந்தனர்..
தாக்குதல் திட்டம்
சதித் திட்டத்தை நிறைவேற்ற அவர்கள் தேர்ந்தெடுத்த தேதி 1908ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி. ஐரோப்பியன் கிளப்புக்கு வெளியே குதிராம், பிரபுல்லா இருவரும் காத்திருந்தனர். இரவு 8.30 மணிக்கு கிங்ஸ்போர்டின் வண்டி வெளியே வந்தது. துரிதமாகச் செயல்பட்ட இருவரும் பாதுகாப்புக்காக ஒரு கையில் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் வெடிகுண்டை வண்டியை நோக்கி வீசினர். இலக்கு தப்பவில்லை. வீசிய குண்டுகள் பெரும் சத்தத்துடன் வெடித்ததும் இருவரும் இருளில் மறைந்து விலகினர். இதுதான் இந்திய விடுதலைப் போரில் நடத்தப்பட்ட முதல் வெடிகுண்டுத் தாக்குதல் எனச் சொல்லப்படுகிறது.
ஆனால் அத்தாக்குதல் நடத்தப்பட்ட வண்டியில் பயணித்தது மாஜிஸ்திரேட்டு கிங்ஸ்போர்டு அல்ல. மாறாக பாரிஸ்டர் பிரிங்கல் கென்னடியின் மகளும் மனைவியும். அவர்கள் இருவரும் தாக்குதலில் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் அத்தகவல் நகர் முழுவதும் பரவியது.
கொலையாளிகளைப் பிடித்துத் தருபவருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் தருவதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. அருகில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் ஆயதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டனர். பயணிகள் தீவிரமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதனால் குதிராம் ரயில் பயணத்தைத் தவிர்த்து கால்நடையாகவே இருபத்தைந்து மைலைக் கடந்தார்.
குதிராம் பிடிபட்டார்
இறுதியாகப் பெரும் களைப்புடன் ஓயினி என்னும் ரயில் நிலையத்தை அடைந்து அருகில் இருந்த டீக்கடையில் தண்ணீர் கேட்டுள்ளார். அங்கிருந்த ஆயுதம் தாங்கிய போலீசார் இருவர் குதிராமைச் சந்தேகத்துடன் அணுகியுள்ளனர். காலணி இல்லாத, கடும் புழுதி படர்ந்த கால்களைப் பார்த்ததும் அவர்கள் சந்தேகம் வலுத்தது. குதிராமிடன் அவர்கள் தொடர்ந்து தொடுத்த கேள்விகளால் அது உறுதியானது. உடனே குதிராமைக் கைதுசெய்ய அவர்கள் முயன்றனர். குதிராம் தப்பிக்க முயன்றபோது அவர் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியில் ஒன்று தவறி கிழே விழுந்தது. மறைத்துவைத்திருந்த இன்னொரு துப்பாக்கியை எடுத்துப் போலீசாரில் ஒருவரைச் நோக்கிச் சுட எத்தனித்தபோது மற்றொரு போலீசார் அவனுடைய கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டார். மிகவும் களைத்திருந்ததால் அவரால் திமிர முடியாமல் இறுதியில் மாட்டிக்கொண்டார். அவரிடம் இருந்து இரு துப்பாக்கிகள், 37 தோட்டக்கள், முப்பது ரூபாய் பணம், ரயில் பாதை வரைபடம் மற்றும் ரயில் கால அட்டவணை ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட குதிராம் மே 1ஆம் தேதி முசாஃபர்பூர் கொண்டு செல்லப்பட்டார். முசாஃபர்பூர் காவல் நிலையத்தில் இருந்து மாவட்ட குற்றவியல் நீதிபதி வுட்மேன் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதே மே 1ஆம் தேதி திரிகுணச்சரன் கோஷ் என்பவரின் உதவியால் பிரபுல்லா கல்கத்தா புறப்பட்டார். அவருடன் ஒரே பெட்டியில் பயணித்த நந்தலால் பானர்ஜி என்பவர் பிரபுல்லாவிடம் பேச்சுகொடுத்து வந்தார். அவர் ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர். அவருக்கு பிரபுல்லா மீது சந்தேகம் வலுத்தது. சிம்முராய்கட் ரயில் நிலையத்தில் தண்ணீர் குடிப்பதற்காக இறங்குவதுபோல முசாப்பூர் போலீசாருக்கு நந்தலால் தகவல் அளித்துள்ளார். இவை எதுவும் அறியாத பிரபுல்லா கெளரா ரயிலில் மாறுவதற்காக மொகமாகட் ரயில் நிலையத்தில் இறங்கிக் காத்திருந்தார். போலீசார் சூழ நந்தலால் பானர்ஜி வருவதைக் கண்டு திடுக்கிட்ட பிரபுல்லா அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ஆனால் குறி தவறிவிட்டது. அவர்கள் தன்னை நெருங்கியதை உணர்ந்த பிரபுல்லா தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்தார்.
இளைஞர் எழுச்சி
இதை அறியாத குதிராம் தன் நண்பனையும் இயக்கத்தையும் காக்கும் பொருட்டு முஸ்தாபூர் படுகொலையின் முழு பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார். பிறகு பிரபுல்லாவின் உடல் அடையாளம் காண்பதற்காக முஸாப்பூர் கொண்ட்டுவரப்பட்டபோது அதிர்ச்சியடைந்த குதிராம் அது பிரபுல்லாவின் உடல் என்பதை உறுதிசெய்தார்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் மாவட்ட அமர்வு நீதிபதி இ.டபுல்யூ.பிரெத்வுடு 1908 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி குதிராமுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். குதிராம் மேல் முறையீடு செய்ய ஒரு வாரம் அவகாசம் இருந்தது. முதலில் மேல் முறையீட்டை மறுத்த அவர் பின்பு ஏற்றுக்கொண்டார். கல்கத்தா உயர் நீதிமன்றம் ஜூலை 7ஆம் தேதி மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையைத் தொடங்கியது. நரேந்திரகுமார் பாசு என்பவர் குதிராமுக்காக வாதாடினார். குதிராமிடம் தாய் மொழியில் கேள்விகள் கேட்கப்படவில்லை,
'வழக்கின் மற்றொரு குற்றவாளிதான் குண்டை எறிந்துள்ளார், அவன்தான் முக்கியக் குற்றாவாளி' எனப் பல விதமாக வாதங்களை முன்வைத்தும் பலனில்லை. ஜூலை 13ஆம் தேதி கல்கத்தா உயர்நீதி மன்றம் மரண தண்டனையை உறுதிசெய்தது. 1908ஆம் ஆண்டு ஆகஸ்டு 11ஆம் தேதி குதிராம் தூக்கிலிடப்பட்டார். ஆனால் குதிராமின் மரணம் நாடெங்கிலும் இளைஞர் மத்தியில் பெரும் எழுச்சியை உண்டாக்கியது.
Keywords: குதிராம், வெடிகுண்டுத் தாக்குதல்,
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக