ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தமிழகம் முழுவதும் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கியது.

ஆசிரியர் தகுதி தேர்வு தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் 1 முதல் 10– வது வகுப்பு வரை ஆசிரியர்களாக பணிபுரிவதற்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற புதிய நிலை உள்ளது. 'பி.எட்.' படிப்பை முடித்த பார்வையற்ற மாணவ– மாணவியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த இருக்கிறது.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள பார்வையற்ற 'பி.எட்.' பட்டதாரி மாணவ–மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படுகிறது. 40 நாட்கள் கொண்ட இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் நேற்று (சனிக்கிழமை) தொடங்கியது.

சென்னை திருவல்லிக்கேணி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளை, தொடங்கிவைத்து பேசிய ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குனர் டாக்டர் எஸ்.கண்ணப்பன் பேசியதாவது:– ஏப்ரல் 28–ந்தேதி தொடங்க இருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில், தமிழகம் முழுவதிலும் இருந்து 652 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் எழுத இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 250 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
இவர்களுக்காக இலவச சிறப்பு வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், சைக்காலஜி (குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை), சமூக அறிவியல்–1 (வரலாறு மற்றும் பொருளாதாரம்) மற்றும் சமூக அறிவியல்–2 (குடிமையியல் மற்றும் புவியியல்) ஆகிய 5 பாடங்கள் குறித்த பயிற்சிகள் மற்றும் விளக்கங்கள் தெளிவுபடுத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் 30 மையங்களில் இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் முதன்மை கல்வி அலுவலகத்தில் மார்ச் 5–ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய கடைசி நாள் மார்ச் 28–ந்தேதி ஆகும். ஆனால் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்திலேயே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு பயிற்சி வகுப்பின் கடைசி 3 நாட்களும், மாதிரி எழுத்துத்தேர்வு நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், பூந்தமல்லியிலேயே இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பூந்தமல்லியிலேயே தனி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக