ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும்
மதுரை கிளையில் வழக்குகள் பதியப்படுவதால், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டாலும்,வேலை கிடைக்குமா என்ற கலக்கத்தில், தேர்வர்கள் உள்ளனர். முதல்வர் அளித்த சலுகை : தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு, ஆசிரியர்களைப்
பணியமர்த்துவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), இரண்டு ஆண்டுகளில், மூன்று டி.இ.டி., தேர்வுகளை நடத்தி உள்ளது. முதல், டி.இ.டி., தேர்வில், ஆறு லட்சம் பேர் பங்கேற்றனர்.தேர்வு நேரத்தை குறைத்து வழங்கியதால், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், அடுத்த தேர்வில்,தேர்வு நேரத்தை அதிகரித்து, டி.ஆர்.பி., உத்தரவிட்டது. முதல் இரு தேர்வுகளில், குறைந்த மதிப்பெண்வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தேர்வர்கள், "தேர்வில், சரியான மதிப்பெண் வழங்கவில்லை' எனக் கூறி,
டி.ஆர்.பி., அலுவலகம் முன், தொடர்ச்சியாக, போராட்டம் நடத்தினர். கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 25ல்,டி.இ.டி., மூன்றாவது தேர்வு நடந்தது. இதில், 27 ஆயிரம் பேர் தேர்வாகினர். ஆனால், தேர்வு எழுதியவர்களில், இட ஒதுக்கீட்டாளர்களுக்கு சலுகை வேண்டும் எனக் கோரப்பட்டு, அவர்களுக்கு, மதிப்பெண்ணில்,ஐந்து சதவீத சலுகை அளித்து, அரசு உத்தரவிட்டது. அதன்படி, தேர்வானவர்களின், பிளஸ் 2 மதிப்பெண்
கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டதால், அதிலும், 45ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்க்கும் பணி,மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது.
500 பேர் : தமிழகத்தின், 32 மாவட்டங்களும், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், தஞ்சாவூர் ஆகிய,ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. "ஒவ்வொரு மண்டலத்திலும், தினமும்,500 பேர் வீதம், சான்றிழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். ஒரு மாதத்திற்கும் மேலாக, இப்பணி நடக்கும்' எனவும்,
டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், "டி.இ.டி., தேர்வு மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் கொண்டு, பணி நியமனம் செய்ய வேண்டும். இதர கல்வி தகுதிகளுக்காக அளிக்கப்படும்சலுகை மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளக்கூடாது. சலுகை மதிப்பெண் அளிக்கும் அரசின் உத்தரவை, ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்' என, வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதில் நிலவும் குளறுபடிகளை எதிர்த்து, மதுரை ஐகோர்ட் கிளையிலும்,சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, ரவிச்சந்திரபாபு, "வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே, பணி நியமனம் இருக்கும்' என, தெரிவித்து உள்ளார். இதனால், நீண்ட போராட்டங்களுக்குப் பின், தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றாலும், வேலை கிடைக்குமா, கிடைக்காதா என, தெரியாமல், தேர்வர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக