பொதுத் தேர்வு திட்டங்களில், முறைகேடுகளுக்கு வழிவிட்ட ஒரு சில ஓட்டைகளையும், பல புதிய திட்டங்கள் மூலம், முழுமையாக அடைத்து, தேர்வுத் துறை சாதனை படைத்துள்ளது. துறையின் நடவடிக்கைக்கு, மாணவர் மட்டும் அல்லாமல், ஆசிரியர் அமைப்புகளும், வரவேற்பு தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகள், குழப்பம் இன்றி முடியுமா என்பதில், தேர்வுத் துறைக்கே சந்தேகம் இருந்தது. கேள்வித் தாளில், குளறுபடியான கேள்விகள் கேட்பதில் துவங்கி, விடைத்தாள்களை, பத்திரமாக, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு சேர்த்து, தேர்வு முடிவை வெளியிடுவது வரை, ஒரே பதற்றம் தான்!
இந்த ஆண்டு, கடந்த, 3ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வு, எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்து வருகிறது. ஒவ்வொரு பணியும், திட்டமிட்டபடி சரியாக நடப்பது, தேர்வுத்துறைக்கு, மகிழ்ச்சியை தந்துள்ளது.
புதிய சீர்திருத்தங்கள்
* விடைத்தாளின் முதல் பக்கத்தில், மாணவர் புகைப்படம் மற்றும் மாணவரின் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய, 'பார்கோடிங்' திட்டம், தேர்வு பாடம், தேதி, பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய, புதிய வடிவிலான விடைத்தாள், இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.
* கடந்த ஆண்டு வரை, அனைத்து விவரங்களையும், மாணவர் எழுத வேண்டிய நிலை இருந்தது. இதனால், பல தவறுகள் ஏற்பட்டு, பின்னாளில் மாணவர்களுக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டது. தற்போது, இந்த குளறுபடி, முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
* 'மெயின் ஷீட்' அதிக பக்கங்களுடன் அச்சடிக்கப்பட்டுள்ளதால், தேர்வு அறையில், கூடுதல் தாள் கேட்பது கணிசமாக குறைந்துள்ளது. இதனால், அறை கண்காணிப்பாளர், முழுமையான கண்காணிப்பை செலுத்த முடிகிறது.
* கடந்த காலங்களில், முக்கிய பாடங்களுக்கு மட்டுமே, 'டம்மி' எண் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு, மொழிப்பாடம் முதல், அனைத்துப் பாடங்களுக்கும், டம்மி எண் பயன்படுத்தி, விடைத்தாள் திருத்தப்பட உள்ளது. விடைத்தாள் பயணம்
* நான்கு, ஐந்து தேர்வு மையங்களை ஒருங்கிணைத்து, அவற்றிற்கான விடைத்தாள்களை, தனி காரில், போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதன் மூலம், விடைத்தாள் கட்டுகள், பாதுகாப்பான முறையில், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு சென்று சேருவது, 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த சீர்திருத்தங்களால், தேர்வு பணியில், முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில், ஆங்காங்கே இருந்த ஒரு சில ஓட்டைகளையும், முழுமையாக அடைத்து, தேர்வுத்துறை சாதனை படைத்துள்ளது.
அதேநேரத்தில், தேர்வுப் பணி ஆசிரியர்கள், நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக, பொதுச்செயலர், பாலகிருஷ்ணன் கூறியதாவது: கடந்த காலங்களில், பல குளறுபடிகள் நடந்தன. யாருக்கு, எப்போது, 'மெமோ' வரும், 'டோஸ்' விழும் என, தெரியாது. எந்த பிரச்னை என்றாலும், தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர் மீது தான், நடவடிக்கை எடுப்பர். தற்போது, ஒரு பிரச்னையும் இல்லை. தேர்வுப் பணிகளை எளிமைப்படுத்தி, கண்காணிப்பையும், பாதுகாப்பையும், 100 சதவீதம் உறுதிபடுத்தி உள்ளனர். தேர்வில், மிகச்சிறிய அளவிற்கு கூட, முறைகேடு நடக்காத அளவிற்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுத்துறை சீர்திருத்தங்களை, முழுமையாக வரவேற்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
இதேபோல், பல்வேறு அமைப்புகளும், தேர்வுத்துறை சீர்திருத்தங்களுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக