வியாழன், 20 மார்ச், 2014

நியூட்டனுடன் ஒரு ஜாலியான பேட்டி....

நியூட்டனின் விதிகளை எளிமையாக விளக்கும் வகையில் ஒரு கற்பனை.....

நிருபர்: நியூட்டன் சார், ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்த கதை உண்மையா?

நியூட்டன்: கெப்ளர் கண்டுபிடித்த கோள்களின் இயக்க விதிகளை மூன்று நாட்களாக விடாமல் படித்துக்கொண்டிருந்தேன். கோள்களெல்லாம் சூரியனை நீள்வட்டமாகச் சுற்றிவருவதுபற்றி அவற்றின் மூலம் அறிந்தேன். அப்போது எனக்குப் பசி தாங்க முடியவில்லை. அந்த வாசிப்பைத் தொடர முடியாததால், ஆப்பிளைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்று தோட்டத்துக்குச் சென்றேன்.

நிருபர்: அப்போதுதான் அந்த ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்ததா?

நியூட்டன்: இல்லை, அது என் கையில் விழுந்தது.

நிருபர்: உங்களுக்குப் பசி எடுக்கிறது என்று ஆப்பிளுக்கு எப்படித் தெரியும்? அல்லது கடவுள் செயலா?

நியூட்டன்: கடவுள் செயலல்ல, கெப்ளர் செயல்.

நிருபர்: எப்படி?

நியூட்டன்: கோள்களைப் பற்றிய அவரது கண்டுபிடிப்புதான், ஆப்பிள் எப்படி நேராக என் கையில் வந்து விழுந்தது என்பதை எனக்குப் புரிய வைத்தது. கோள்களின் சுற்றுப்பாதை சூரியனை மையம் கொண்டு எப்படி ஒரு நீள்வட்டமாக அமைகிறது என்பதை அவர்தான் புரியவைத்தார்.

நிருபர்: கிரகங்களின் சுழற்சி எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே?

நியூட்டன்: மேலும் அவர் சொன்னது, "சூரியனிலிருந்து ஒரு விசை வெளிவந்து கோளங்களைப் பற்றிக்கொள்கிறது." அதிலிருந்து நான் சொல்வது, "பூமி தன் புலப்படாத கைகளால் ஆப்பிளைப் பற்றிக்கொள்கிறது."

நிருபர்: ஆப்பிளைப் பற்றியது உங்கள் கைதானே?

நியூட்டன்: சூரியனிலிருந்து வெளிவரும் விசைபோல் பூமியிலிருந்து ஒரு விசை வெளி வந்து அதைச் சுற்றியுள்ள அனைத்தையும் பற்றிக்கொள்கிறது என்பதைத்தான் நான் அப்படிச் சொன்னேன். கோள்கள், விண்மீன் திரள், ஆப்பிள், நீங்கள், நான் அனைத்தும் அசைவது ஒரு விதியின் கீழ்தான். அதுதான் 'நியூட்டனின் ஈர்ப்பு விதி'.

நிருபர்: சூரியனைச் சுற்றும் சனி அல்லது புதனைப் போல் ஆப்பிள் ஒன்றும் பூமியைச் சுற்றவில்லையே?

நியூட்டன்: ஆப்பிளால் சுற்ற முடியும்.

நிருபர்: எப்படி?

நியூட்டன்: கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். மிகமிகப் பலத்துடன், அதாவது பூமியின் ஈர்ப்பு விசையை அது சமாளிக்கக் கூடிய அளவு பலத்துடன் வீசியெறிந்தால் அது பூமியைச் சுற்ற ஆரம்பித்து, தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும்.

நிருபர்: ஆ… புரிகிறது, பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்களைப் போல…

நியூட்டன்: என் கணக்குப்படி ஆப்பிளை ஒரு நொடிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால், பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து ஆப்பிள் விடுபட்டுவிடும். அதையே நொடிக்கு 42 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால், சூரியனின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு அண்டவெளியில் சுதந்திரமாகப் பயணிக்கத் தொடங்கிவிடும், இன்னொரு கோளின் அல்லது இன்னொரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு வலையில் விழும்வரை.

நிருபர்: ஆகையால் உங்கள் புகழ்பெற்ற ஈர்ப்பு விதி ஆப்பிளிலிருந்துதான் வந்தது.

நியூட்டன்: ஆமாம். நிறையுள்ள பொருள்கள் எல்லாமே ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன. ஆகையால் மனிதர்கள் நாம் அனைவரும் ஒன்றாக இணையப் படைக்கப்பட்டவர்கள்.

நிருபர்: ஆப்பிளைச் சாப்பிடாமல் ஏன் அதைப் பார்த்தபடியே நிற்கிறீர்கள்?

நியூட்டன்: ஆப்பிளின் சிவப்பு நிறத்தைக் கவனித்தீர்களா?

நிருபர்: அதில் என்ன இருக்கிறது?

நியூட்டன்: சூரியனின் ஒளி ஆப்பிளின் தோல்மீது எதிரொலிப்பதால் ஆப்பிள் நம் கண்களுக்குத் தெரிகிறது.

நிருபர்: இதில் என்ன விஷயம்?

நியூட்டன்: சூரியனின் ஒளி வெண்மையாக இருக்க, அது எப்படி சிவப்பாகப் பிரதிபலிக்கிறது?

நிருபர்: ஆப்பிளின் தோல், ஒளியின் நிறத்தை மாற்றிவிடுகிறது.

நியூட்டன்: இல்லை இல்லை. சில நாள்களுக்கு முன்பு நான் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். சூரிய ஒளியை ஒரு முப்பட்டகம் (ப்ரிஸம்) வழியே செலுத்தினேன். அது வானவில்லாக வெளிவந்தது.

நிருபர்: ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு.

நியூட்டன்: வெண்மை என்பது ஒரு நிறமல்ல, அது அனைத்து நிறங்களின் கூட்டல்.

நிருபர்: ஓ, எல்லா நிறங்களின் தொகுப்பு என்று சொல்லவருகிறீர்களா?

நியூட்டன்: அந்தத் தொகுப்பை முப்பட்டகம் முழுமையாகப் பிரித்துவிடுகிறது. ஆப்பிளோ அனைத்து நிறங்களையும் உள்வாங்கிக்கொண்டு சிவப்பை மட்டும் பிரதிபலிக்கிறது.

நிருபர்: இதைச் சரி என்று எப்படி நிரூபிப்பது?

நியூட்டன்: நீல நிற வெளிச்சத்தில் இந்த ஆப்பிள் உங்கள் கண்களுக்குத் தெரியாது.அது எதையும் பிரதிபலிக்காமல் கருநிறத்தில் தெரியும்.

நிருபர்: அந்த ஆப்பிளைக் கொடுங்கள், நான் பரிசோதித்துப் பார்க்கிறேன்.

நியூட்டன்: ஐயோ, எனது ஆப்பிள்…?

நிருபர்: இயக்கம் குறித்த விதிகளை எனக்குப் புரியும்படி விளக்குங்கள். உங்கள் ஆப்பிளைத் தந்துவிடுகிறேன்.

நியூட்டன்: சரி, சொல்கிறேன். ஒரு பொருளின் அசைவுக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துவதுதான் எனது மூன்று இயக்க விதிகள். நீங்கள் ஒரு காரில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் நேராகச் சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் கார் எந்தவொரு மாற்றமுமின்றி நேராகச் செல்லும். அப்படிச் செல்லும் காரின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டால் என்ன அர்த்தம்?

நிருபர்: காரை ஓட்டும் நான் வேகத்தைக் குறைத்துவிட்டேன் அல்லது கூட்டிவிட்டேன்.

நியூட்டன்: அல்லது…

நிருபர்: ஸ்டீயரிங்கை வலது அல்லது இடது பக்கம் திருப்பிவிட்டேன்.

நியூட்டன்: இதுதான் என் இயக்க விதிகளின் மூலக்கரு. எந்தவொரு பொருளின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டாலும், அந்தப் பொருளின் மீது ஏதோவொரு விசை செயல்படுகிறது என்று அர்த்தம்.

நிருபர்: ஓ! திடீரென்று ஸ்டீயரிங்கைத் திருப்பியதுபோல்…

நியூட்டன்: ஆம்! இந்தத் திடீர் மாற்றத்தின் விளைவு உங்கள் காரின் வேகத்தில் அல்லது செல்லும் திசையில் தெரியும்.

நிருபர்: வேக மாற்றமும் விசையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதே நீங்கள் கண்டறிந்த உண்மை. இதை அனைவரும் மிகப் பெரிய சாதனை என்று சொல்கிறார்கள்.

நியூட்டன்: நான் மற்றவர்களுக்கு எப்படித் தோன்றுகிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், என்னை நான் பார்க்கும்போது கடலோரம் விளையாடும் ஒரு குழந்தையைப் போல் தெரிகிறேன். அந்தக் குழந்தை அதிர்ஷ்டவசமாக ஒரு அழகான கிளிஞ்சலைக் கண்டெடுத்தது. ஆனால், அந்தக் குழந்தையின் முன் பரந்த பெருங்கடலாக அறியப்படாத உண்மைகள் விரிந்துகிடக்கின்றன என்பதுதான் உண்மை.

- குமரன் வளவன், நாடகக் கலைஞர், இயற்பியலாளர்,
பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர்
தொடர்புக்கு: valavane@yahoo.fr




Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக