வெள்ளி, 14 மார்ச், 2014

அறிவியல் அற்புதம்....'கூகுள் க்ளாஸ்'

கூகுள் நிறுவனம்ஒரு சுண்டு விரல் நகத்தின் அளவேயுள்ள விழியொட்டு லென்சில்
ரேடியோ அலை ஏற்பியும் பரப்பியும் சேர்ந்த வைஃபை இணைப்புடன் ஆண்ட்ராய்டு செயலமைப்பில் இயங்கும் ஒரு கணினியை உருவாக்கியுள்ளது.அது உடலின் ரத்த அழுத்தம், சர்க்கரைச் செறிவுக்ளாக்கோமா நோய்க்குறியான உள்வழியழுத்தம் போன்றவற்றை அளவிட்டு ஒரு கணினித் திரைக்கு அனுப்புமாம். கூகுள் நிறுவனம் விழியொட்டு லென்சின் விளிம்பில் ஓர் உணர் படலத்தைப்பொருத்திக் கண்ணீரிலுள்ள சர்க்கரைச் செறிவை அளவிட்டுஅளவு கூடுதலாயிருந்தால் எச்சரிக்கை செய்கிற மாதிரி அமைத்துள்ளது.இதனால் ரத்தப் பரிசோதனை ஆய்வகத்துக்கோ மருத்துவரிடமோ போய்ரத்தம் சிந்த வேண்டிய அவசியமில்லாமல் போகிறது.

கூகுள் நிறுவனத்தின் மற்றுமொரு அதிசயப் படைப்பு க்ளாஸ் என்ற கணினி.அதை தயாரிக்கும் பொறுப்பு "ஃபாக்ஸ்கான்' என்ற நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. "டைம்' இதழ் அதை "2012ஆம் ஆண்டின் தலைசிறந்த புதுப்புனைவு' எனப் பாராட்டியிருக்கிறது. கூகுள் க்ளாஸ், லென்ஸ் இல்லாத மூக்குக் கண்ணாடி ஃபிரேமைப் போலததோற்றமளிக்கிறது. அதன் எடை 50 கிராம்தான். இந்த ஆண்டு இறுதிக்குள்அது விற்பனைக்கு வரலாம். அதற்கு முன்னோட்டமாக தற்போது 12 ஆயிரம்பேருக்கு அதை வழங்கி அவர்களுடைய அனுபவங்களைககேட்டறிந்து கொண்டிருக்கிறார்கள். அதன் விலை 1500 டாலராகஇருக்கலாம். கூடுதலான அப்ஸ் (பயன்பாட்டுக் குறிப்பு) களைச் சேர்த்தால் விலையும் கூடுதலாகும்.

க்ளாசில் ஒளிப்படக் கருவி, வைஃபை இணைப்பு, காட்சித்திரை ஆகியவற்றுடன் கூடிய ஒரு கணினி உள்ளது. அதை அணிபவரின் வலது கண்ணுக்குச் சற்று மேலே காட்சித் திரை தெரியும். அதை அணிந்து கொண்டு இணைய வலைதளத்தைப் பார்க்கலாம். ஒளிப்படமெடுக்கலாம். வீடியோப் பதிவு செய்யலாம். மின்னஞ்சல்களையும்,இதழ்களின் வலைப் பக்கங்களையும் படிக்கலாம். குறுஞ்செய்திகளைப்பரிமாறிக் கொள்ளலாம். ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பயணிக்கலாம். எதிரே வருகிற நபரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதா? அவர்முகத்தைப் படமெடுத்துத் தனது கோப்புகளிலுள்ள முகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவர் யார் என்பதை க்ளாஸ் கண்டுபிடித்து விடும். அதேபோல
ஒருவரது குரலை எங்கேயோ கேட்ட மாதிரியிருக்கிறதா? க்ளாஸ்அவரது குரலைப் பதிவு செய்து தனது கோப்புகளில் தேடி அந்தக் குரல் யாருடையது என்று சொல்லி விடும்.

தெரியாத மொழி புழங்கும் ஊர்களுக்குப் போகிறவர்கள் தாம் பார்க்கிற அல்லது கேட்கிற சொற்களுக்கு தன் சொந்த மொழியில் விளக்கம் பெறலாம். "இந்தாப்பா, சர்க்கரை கம்மியா, ஒரு மசாலா டீ கொடு' என்று சொல்வதற்கு அந்த ஊரின் மொழியில் எப்படிச் சொல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். சுருக்கமாக சொல்லப் போனால், இணையதளவசதியும் ஆன்ட்ராய்டு இயக்க முறைமையும் பெற்ற ஒரு முழுமையான கணினியை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் கூகுள் க்ளாசை அணிந்து கொண்டு செய்யலாம் என்கிறார்கள்.

கூகுள் க்ளாசுக்கு வாய் மூல ஆணைகளையும் இடலாம். "ஓக்கே க்ளாஸ்' என்று சொல்லிவிட்டு அதன் பின் ஆணை பிறப்பிக்க வேண்டியதுதான்.அதற்குச் சில கூடுதலான அப்ஸ்களைப் பொருத்த வேண்டும். க்ளாஸ், வைஃபை மூலமோ, புளூடூத் மூலமோ தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறது. அதன் காதுப் பட்டையில் பின்னோக்கித் தடவினால் செய்திகள்,வானிலை போன்ற நிகழ்நேரத் தகவல்களையும் முன்னோக்கித் தடவினால்அழைப்புகள், முகவரிகள், ஒளிப்படங்கள் போன்ற முற்காலத் தகவல்களையும்
திரையில் வரவழைக்க முடியும். கூகுள் க்ளாசின் அறிமுகப் பதிப்பில், வீடியோ காமிரா, வைஃபை கருவி,புளுடூத், ஜைராஸ்கோப், வேக மானி, காந்த மானி, ஒளியுணர் கருவி,இடைவெளி அளவு, மண்டை எலும்பு மூலம் செவிக்குள் ஒலியைசசெலுத்தும் கருவி, ஆன்ட்ராய்டு செயல் அமைப்பு, தரவு சேமிப்பகம் போன்றஉறுப்புகள் உள்ளன. பல நிறுவனங்களும், புதுப்புனைவர்களும் க்ளாசுக்கு ஏற்ற புதிய அப்ஸ்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். அவற்றை இலவசமாக வழங்க வேண்டும் எனவும் அவற்றில்
விளம்பரங்களை நுழைக்கக் கூடாது எனவும் கூகுள் நிறுவனம் இப்போதைக்கு நிபந்தனை விதித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக