புதன், 23 ஏப்ரல், 2014

அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டுப்போடுவதற்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்

அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டுப்போடுவதற்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் எவை என்பதை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது:– மாற்று ஆவணங்கள் கடந்த 2011–ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், வாக்குப்பதிவுக்காக வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் ஆகிய இரண்டு ஆவணங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. ஆனால் இந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்காக, 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி,
* புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை.
* பாஸ்போர்ட் * வாகன ஓட்டுனர் உரிமம்.
* மத்திய–மாநில அரசுகள்–பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியுள்ள புகைப்படம் உள்ள அடையாள அட்டைகள்.
* வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வழங்கியுள்ள புகைப்படமுள்ள சேமிப்பு கணக்கு புத்தகம்.
* வருமான வரி கணக்கு அட்டை (பான் அட்டை)
* ஆதார் அட்டை.
* தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் அட்டை.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை.
* மத்திய தொழிலாளர் நலத்துறை வழங்கியுள்ள சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கான ஸ்மார்ட் கார்டு.
* புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.
* தேர்தல் ஆணையம் வழங்கும் வாக்குச்சாவடி சீட்டு (பூத் சிலிப்) ஆகியவை மாற்று ஆதாரங்களாக உள்ளன.

வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வரவில்லை என்றால் இந்த ஆவணங்களைக் காட்டி ஓட்டு போடலாம். அதோடு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது பூத் சிலிப்பில் புகைப்படம் தவறுதலாகவோ சரியில்லாமல் தெளிவற்று இருந்தாலோ, இந்த ஆவணங்களில் ஒன்றை காட்டி அடையாளத்தை உறுதி செய்யலாம்.இந்திய தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள கூடுதல் ஆவணங்களின் அசலை கொண்டு வர வேண்டும். ஜெராக்ஸ் நகல் எடுத்துக்கொண்டு வரக்கூடாது. தேர்தல் கமிஷன் கொடுக்கும் பூத் சிலிப்தான் அங்கீகரிக்கப்பட்டதாகும். அரசியல் கட்சிகள் கொடுக்கும் பூத் சிலிப்புகள் அங்கீகாரம் பெற்றதல்ல. அதைக் காட்டி ஓட்டுப்போட முடியாது. அரசியல் கட்சிகள் தரும் பூத் சிலிப்புகளில் கட்சியின் சின்னம், பெயர் இடம் பெற்றுள்ள பகுதியை வாக்குச்சாவடிக்குள் கொண்டு வரக்கூடாது.வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் அதைக் கொண்டு வர முடியாதவர்கள், பூத் சிலிப்பை தொலைத்தவர்கள் ஆகியோரும் இந்த கூடுதல் மாற்று ஆவணங்களை பயன்படுத்தலாம்.அனைவருமே வாக்களிக்க வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். 100 சதவீத ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.
நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்.
அனைவருமே வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்காளர்களை நினைவூட்டும் வகையில் 23 மற்றும் 24–ந் தேதிகளில் (இன்று மற்றும் நாளை) நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்.களை வாக்காளர்களின் செல்போன்களுக்கு அனுப்புவோம்.23–ந் தேதி மாலை ஒரு எஸ்.எம்.எஸ். வரும். 24–ந் தேதியன்று 3 எஸ்.எம்.எஸ்.கள் வரும். தியேட்டர்கள், தூர்தர்ஷன் டி.வி. ஆகியவற்றில் தனி எழுத்துகளில் நினைவூட்டல் வாசகங்கள் வெளியிடப்படும். தனியார் சேனல்களும் நினைவூட்டல் வாசகங்களை ஸ்குரோலாக வெளியிட வேண்டுகோள் விடுக்கிறேன். ரேடியோ, எப்.எம். மூலமாகவும் நினைவூட்டல் பேச்சை கேட்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக