ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

அரிய நூல்கள் அத்தனையும் பொக்கிஷங்கள்

காரைக்குடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள அந்த சிறிய சந்துக்குள் ஒரு அரிய பொக்கிஷக் கூடம் இருக்கும் என்று யாராலும் எதிர்பார்க்க முடியாதுதான். மேல ஊரணி வாய்க்கால் தெருவில் உள்ள சா.ந. லட்சுமணனின் அந்த வீட்டை வெளியிலிருந்து பார்த்தால் சாதாரணமாகத்தான் இருக்கிறது. ஆனால், உள்ளே சென்று பார்த்தால் அத்தனையும் பொக்கிஷங்கள்.

பழைய அரிய புத்தகங்கள், இதழ்கள், நோட்டீஸ்கள், அறிக்கைகள், கலைப் பொருட்கள், வகை பிரிக்க முடியாத பொருட்களும்கூட, அவை உருவாக்கப்பட்ட காலத்தின் சாட்சியங்களாகத் திகழ்கின்றன.

எடுத்துக்காட்டுக்கு, இந்தியாவில் தேநீர் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் விற்பனையை அதிகரிக்க வெளியிடப்பட்ட நோட்டீஸ், கதர் உடுத்த காந்தி விடுத்த வேண்டுகோள், 1937-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வலியுறுத்தி கல்யாணப் பத்திரிகை போல விநியோகிக்கப்பட்ட வித்தியாசமான நோட்டீஸ், எளிய மக்கள் சிந்துப் பாடல் எனப்படும் குஜிலி இலக்கியங்கள்... இப்படி காலத்தின் குரலாய் ஒலிக்கும் அச்சு வரலாற்று ஆவணங்கள், கலை ஆவணங்கள் அங்கே தோண்டத் தோண்ட வந்துகொண்டே இருக்கின்றன.

தனி இடம்

தன் வீட்டின் முதல் தளத்தில் 900 சதுர அடி பரப்பில் இது போன்ற அரிய புத்தகங்கள், அச்சுப் பிரதிகள், கலைப் பொருள் சேகரிப்புக்காக ஒதுக்கிவிட்டார் லட்சுமணன். ஒவ்வொன்றும் ஒரு புதிய சுவாரசியத்தை ஒளித்து வைத்துள்ளன. அவரிடம் இருக்கும் நூல்களின் எண்ணிக்கை மட்டும் 60,000.

காரைக்குடி பல விஷயங்களுக்காக பெயர்பெற்றது. அவற்றில் ஒன்று மதிப்புமிக்க பழம்பொருள்களின் விற்பனை. அதையே தனது பணியாகக் கொண்டவர் லட்சுமணன். ஆனால், அதில் அவர் பார்த்த வருமானத்தைவிட, இதுபோன்ற அரிய பொருட்களை ஏன் மற்றவர்களிடம் விற்க வேண்டும், தானே சேகரிக்கலாமே என்ற எண்ணம் அவரது மனதில் துளிர்விட, உடனடியாக அதை செயல்படுத்தியும்விட்டார்.

ஆர்வம் வந்தது

"1982-ல இலங்கைத் தலைநகர் கொழும்புவுக்குப் போயிருந்தேன். அப்போது சி.வை. தாமோதரன் பிள்ளை எழுதி 1887-ல் பதிப்பிக்கப்பட்ட கலித்தொகை கிடைச்சது. அதுல தமிழ் மொழி 15,000 ஆண்டுகள் பழைமையானதுன்னு குறிப்பிடப் பட்டிருந்தது, என் ஆர்வத்தைக் கிளறுச்சு. இதுதான் அரிய நூல் சேகரிப்பு மீதான, என் ஆர்வத்தை பெரிசா தூண்டிவிட்டுச்சு.

காரைக்குடியைச் சுற்றியுள்ள செட்டிநாட்டுப் பகுதி வீடுகள்ல பலரும் நிறைய பழைய புத்தகங்களை வைச்சிருக்காங்க. பழம்பொருள்களை விற்பதற்காக அவங்கள்ல பலரும் என்னைக் கூப்பிடுவாங்க. அதுக்குப் போகும்போது, அரிய நூல்களை என் சேகரிப்புக்காக தனியா கேட்டு வாங்கிக்குவேன். செட்டிநாடு மட்டுமில்லை. இப்படி அரிய நூல்களைத் தேடி மும்பை, கொல்கத்தான்னு நாடு முழுக்க சுத்தியிருக்கேன்" என்கிறார் லட்சுமணன்.

முதல் பதிப்புகள்

குறிப்பாக முதல் பதிப்புப் புத்தகங்களைச் சேகரிப்பது அவருடைய தனித்துவம். 200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நூல்கள் அவரது சேகரிப்பில் தனியிடம் பெற்றிருக்கின்றன. 1824 முதல் 1900-ம் ஆண்டு வரை வெளியான அரிய 2,000 புத்தகங்கள், அவரது சேகரிப்பில் உள்ளன.

உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், வீரமாமுனிவர் தொகுத்த தமிழின் முதல் அகராதிகளில் ஒன்றான சதுரகராதியின் 1824-ம் ஆண்டு முதல் பதிப்பு, அதைத் தொடர்ந்து வெளியான 55 பழைய அகராதிகள். அத்துடன் 1848-ல் வெளியான தொல்காப்பியம் முதல் அச்சுப் பதிப்பு. 1832-ல் வெளியான ஆத்திச்சூடி இரண்டாவது பதிப்பு போன்றவை மட்டுமில்லாமல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தடை செய்யப்பட்ட நூல்களையும்கூட அவர் வைத்திருக்கிறார்.

இது மட்டுமில்லாமல் 700 ஓலைச்சுவடிகளை வைத்திருக்கிறார். இவற்றில் பாதி தமிழ், பாதி கிரந்த மொழியில் எழுதப்பட்டவை. நான்கு வேதங்கள், ராமாயணம், வால்மீகி ராமாயணம், துலாகாவேரி மகாத்மியம் உள்ளிட்டவை இதில் அடக்கம். அதிலும் தாமிரபரணி மகாத்மியம் போன்ற ஓலைச்சுவடிகள் இன்னும் அச்சுப் பதிப்பையே காணாதவை.

இதழியல் பொக்கிஷம்

விடுதலைப் போராட்ட காலத்தில் வெளியான பாரதியாரின் இந்தியா, காந்தி, ஜனநாயகம், சுதேசமித்திரன், மெட்ராஸ் மெயில் போன்ற இதழ்கள், முரசொலி முதல் இதழ் என அவருடைய இதழியல் பொக்கிஷப் பட்டியலுக்கும் முடிவே இல்லை.

அவரிடம் மொத்தமுள்ள 5,000 இதழ்களில், 1900க்கு முந்தைய வேறுபட்ட இதழ்களின் எண்ணிக்கை மட்டும் 250. துண்டுப் பிரசுரங்கள் என்று எடுத்துக்கொண்டால், தேர்தல் பிரசாரம், சினிமா, நாடக விளம்பரம், புத்தக விளம்பரம் என்று 4,000 துண்டுப் பிரசுரங்களை சேகரித்துள்ளார்.

அவர் சேகரித்து வைத்துள்ள இந்த பொக்கிஷத்தின் அருமை கேள்விப்பட்டு பேராசிரியர்கள், ஆய்வு மாணவ, மாணவிகள் பலரும் வீடு தேடி வருகிறார்கள். அறிவையும் ஆவணங்களையும் தேடி வருபவர்களுக்கு தன் வாசல் கதவை தாராளமாகத் திறந்து வைத்து, மனப்பூர்வமாக வரவேற்கிகிறார் லட்சுமணன்.

தொடர்புக்கு: 9442985055,




Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக