செவ்வாய், 8 ஜூலை, 2014

83 அதிகாரிகள் பணியாற்ற தடை கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 83 அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உள்ளகரம் ஆழ்வார் நகரை சேர்ந்த செல்வராஜ் செல்லையன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பல்வேறு அரசுப் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வு மூலம் 83 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, 83 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் 2011-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி உத்தரவிட்டது. ஆனாலும், அரசுப் பணியில் இருந்து அவர்களை தமிழக அரசு இதுவரை நீக்கவில்லை.

இதற்கிடையே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் உச்ச நீதிமன்றத்தால் கடந்த ஜூன் 30-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

எனவே, தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. அந்த 83 பேரும் பணியில் தொடர்ந்து நீடிக்க தடை விதிக்க வேண்டும்.

மேலும், நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகும் எந்த தகுதியின் கீழ் அந்த 83 பேரும் பணியில் தொடர அனுமதிக்கப்படுகிறார்கள் என்று விளக்கம் அளிக்குமாறு தமிழக பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்பு இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மணிகண்டன் வத்தன் ஆஜரானார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒரு வார காலத்துக்கு ஒத்திவைத்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக