கடந்த 2004–ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்–1 தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற 83 பேர் பல்வேறு உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், குரூப்–1 தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–1 தேர்வினை ரத்து செய்து கடந்த 2011–ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்தது.

இந்நிலையில், டின்.பி.எஸ்.சி தேர்வில் 83 பேர் தேர்ச்சி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், 83 பேர் தேர்ச்சி விவகாரத்தை உச்ச நீதிமன்றம் சரியாக கையாளவில்லை. எனவே இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.