புதன், 9 ஜூலை, 2014

வாசிப்பு நல்ல கனவுகளை உருவாக்கும்...கனவுகள் நல்ல எண்ணங்களை உருவாக்கும்...



மின்னணு பொருள்களின் வருகையால் வாசிப்பு குறைந்துவரும் இக்காலத்தில் 6 மாதக் குழந்தைகளும் தொட்டு, உணர்ந்து புரிந்துகொள்ளும் வகையில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

நல்ல நூல் சிறந்த நண்பர் எனக் கூறுவர் நம் முன்னோர். ஆனால், இப்படிப்பட்ட நல்ல நண்பனை நம்மில் பலர் இழந்துவருவது நிதர்சனமான உண்மை. தொலைக்காட்சி, விடியோ கேம் உள்ளிட்ட மின்னணு பொருள்களின் வருகையாலும், அதன்மேல் குழந்தைகள், சிறுவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தாலும் வாசிப்பு என்பது இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளிடமும் சிறுவர்களிடமும் மறக்கப்பட்டு வருகிறது. பள்ளிப் புத்தகங்கள்கூட தற்போது மின்னணு வடிவில் வீடியோ, ஆடியோ குறுந்தகடுகளாக போட்டிபோட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன.

புதியவகை புத்தகங்கள்

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த பெரும்பாலானோரைக் கவர்ந்தது குழந்தைகளுக்கான தொட்டு உணர்ந்து புரிந்துகொள்ளும் வகையிலான புதிய வகை புத்தகங்கள். 6 மாதக் குழந்தைகள் முதல் 3 வயது வயது வரையுள்ள குழந்தைகளுக்காக இந்த வகை புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் குழந்தைப் பருவத்திலிருந்தே புத்தகங்களைப் பயன்படுத்துவதையும், வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவதும்தான் இதன் முக்கிய நோக்கம் என்கின்றனர் புத்தகக் காட்சியின் நிர்வாகிகள்.

இதுகுறித்து, புத்தகக் காட்சி நடத்திவரும் மதுரை டர்னிங் பாய்ண்ட் புத்தக நிலைய மேலாளர் சூர்யபிரீத்தி கூறியது: சிவகாசியில் தொடங்கியுள்ள புத்தகக் காட்சி இம்மாதம் 13-ம் தேதி வரை நடைபெறும். அதைத்தொடர்ந்து, ஜூலை 17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ராஜபாளையத்திலும் நடத்தப்படுகிறது.

இதில் குறிப்பாக சிறுவர்களுக்கான புத்தகங்களே 75 சதவீதம் இடம்பெற்றுள்ளன. ஆறு மாத குழந்தையும் புத்தகத்தை கையில் தொட வேண்டும் என்பதற்காக தொட்டு, உணர்ந்து புரிந்துகொள்ளும் வகையிலான புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் பலவித பொருள்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், வாகனங்கள் என வரையப்பட்டிருக்கும். அவை எப்படி இருக்கும் என்பதை குழந்தைகள் தொட்டு உணர்ந்துகொள்ளும் வகையில் குறிப்பாக பூனை படம் அச்சிடப்பட்டிருந்தால் அந்த உருவத்தில் பூனையின் உடலைத் தொட்டுப் பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் ரோமங்கள் போன்று ஒட்டவைக்கப்பட்டிருக்கும்.

செடியைத் தொட்டுப்பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் இலையைப் போன்ற மாதிரிகள் செடி போன்று வரையப்பட்டுள்ள படங்களில் ஒட்டவைக்கப்பட்டிருக்கும். இப்படி தொட்டுப்பார்த்தே குழந்தைகள் ஒவ்வொன்றின் தன்மையையும் அறிந்துகொள்ள முடியும்.

ஒழுக்கத்தை கற்றுத்தரும் புத்தகங்கள்

அதுமட்டுமின்றி, குழந்தைகளுக்குப் பிடித்தமான சோட்டாபீம், டோரா புஜ்ஜி, டாம் அண்டு ஜெர்ரி உள்ளிட்ட பல்வேறு கார்ட்டூன் கதை புத்தகங்கள், முல்லா, பீர்பால் உள்ளிட்ட கதை புத்தகங்களும், சுற்றுப்புறத் தூய்மை, பசுமையைக் காக்கும் வழிமுறைகள், வீட்டில் பயன்படுத்தப்பட்டு வீணாக தூக்கிவீசப்பட்ட பொருள்களைக் கொண்டு பல்வேறு பயன்பாட்டுக்குரிய உபகரணங்கள் செய்வது போன்றவற்றை விளக்கும் புத்தகங்களும், நல்லொழுக்கத்தை வளர்க்கும் வகையான புத்தகங்கள் மற்றும் பொது அறிவை வளர்க்கும் வகையான புத்தகங்களும் அதிக அளவில் விற்பனையாகின்றன.

வாசிப்பு நல்ல கனவுகளை உருவாக்கும். கனவுகள் நல்ல எண்ணங்களை உருவாக்கும். நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களுக்கு வழிவகுக்கும் என்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வரிகளை பெற்றோர் தங்கள் மனதில் பதியவைத்து தொலைக்காட்சி, வீடியோகேம் போன்றவற்றில் புதைந்து கிடக்கும் குழந்தைகளை மீட்டெடுத்து வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது வலிமையான, அறிவார்ந்த சமுதாயத்தை ஏற்படுத்துவதற்காக நாட்டப்படும் அடிக்கல் என்கிறார்கள் கல்வியாளர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக