சனி, 18 அக்டோபர், 2014

உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று, மக்கள் முதல்வரை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.


11.50 AM: சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரையும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

11.48 AM: உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று, ஜெயலலிதாவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி குன்ஹா இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

11.40 AM: பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில், ஜாமீன் ஆணையை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.

11.30 AM: இன்று பிற்பகல் ஜெயலலிதா சென்னை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

11.20 AM: பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவிடம், ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவின் நகல் அளிக்கப்பட்டது.

11.15 AM: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். தமிழகத்தில் இருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வந்தடைந்தார்.

11.14 AM: பெங்களூர் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

10. 50 AM: பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தைச் சுற்றி அதிமுகவினர் அதிகளவில் திரண்டு வருவதால் ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

10.40 AM: ஜாமீன் சூரிட்டி வழங்க ஒருவருக்கு 2 பேர் வீதம் மொத்தம் 8 பேர் தேவைப்படுவதால் அவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னேற்பாடாக மேலும் 8 பேரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

10. 25 AM: காலை 11 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, நீதிமன்றம் வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

10. 20 AM: ஜெயலலிதாவை வரவேற்பதற்காக வழக்கறிஞர்கள் பன்னீர்செல்வம், பரணிகுமார், பழனிக்குமார்,செல்வக்குமார் ஆகியோர் காலையில் இருந்து காத்திருக்கின்றனர்.

10.15 AM: பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

10.10 AM: சிறையில் இருந்து ஜெயலலிதா விடுதலையாவதை ஒட்டி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் ஏராளமான அதிமுகவினர் இனிப்புகளுடன் காத்திருக்கின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. படிக்க: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்: வழக்கை தாமதிக்கக் கூடாது என நிபந்தனை

இதைய‌டுத்து 21 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு அவர் இன்று ஜாமீனில் விடுதலை ஆகிறார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வ‌ழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 27-ம் தேதி அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நால்வரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக