ஞாயிறு, 5 ஜனவரி, 2014

அதிக விடைத்தாள் மதிப்பீடு நிர்பந்தம் கூடாது: தேர்வு இயக்குனரிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தல்


நிர்ணயித்த எண்ணிக்கையை விட, அதிக விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய,நெருக்கடி தரக்கூடாது. இது போன்ற பிரச்னையால் தான்,விடைத்தாளை மதிப்பீடு செய்யும்போது, தவறு ஏற்படுகிறது' என, தேர்வுத்துறை இயக்குனரிடம், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
 தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், பொதுத் தேர்வு தொடர்பாக, பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம், நேற்று, கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தினார். முதுகலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள்,தொழிற்கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கூட்டத்தில் பங்கேற்றனர். ஒரு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், வரும் பொதுத் தேர்வில்அமல்படுத்த உள்ள புதிய திட்டங்கள் குறித்தும், செய்முறை, எழுத்து தேர்வு மற்றும்மதிப்பீட்டு பணி ஆகியவற்றில் உள்ள நிறை, குறைகள் குறித்தும், இயக்குனர், கருத்துக்களை கேட்டார்.

 'மூத்த ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் மதிப்பீட்டு பணியின்போது,முதன்மைத் தேர்வாளர்,கூர்ந்தாய்வாளர்களாக நியமிக்கவேண்டும்.' என, பல நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதுகுறித்து,தொழிற்கல்வி ஆசிரியர் சங்க பொதுச்செயலர், ஜனார்த்தனன் கூறியதாவது:
 விடைத்தாள் திருத்தும் மையங்களில், பிளஸ் 2 எனில், ஒரு நாளைக்கு, 24 விடைத்தாள்களும் (ஒரு ஆசிரியருக்கு), 10ம் வகுப்பு எனில், 30 விடைத்தாள்களும் வழங்கப்படும். ஆனால், 'பணியை விரைந்து முடிக்க வேண்டும்' என, முடிவு எடுத்து,
கடைசி நேரத்தில், நிர்ணயித்ததை விட, அதிகமான விடைத்தாள்களை திருத்துமாறு, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இதனால், சரியான முறையில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய முடியவில்லை.மாணவர்களுக்கு, சரியான மதிப்பெண் கிடைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, நிர்ணயித்ததை விட, அதிக விடைத்தாள்களை கொடுத்து, திருத்த நிர்பந்திக்கக் கூடாது என, இயக்குனரிடம் தெரிவித்தோம்.அதை, இயக்குனர் ஏற்றுக்கொண்டார். மேலும், தொழிற்கல்வி விடைத்தாள்கள், மாநில அளவில்,
இரு மையங்களில் மட்டுமே, மதிப்பீடு செய்யப்படுகின்றன. இதை மாற்றி, மாநிலம் முழுவதும், விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, பரிசீலனை செய்வதாகவும், இயக்குனர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக