ஞாயிறு, 5 ஜனவரி, 2014

மீண்டும் வேலை கேட்டு மக்கள் நலப்பணியாளர்கள் மனு தாக்கல்


மீண்டும் வேலை கேட்டு மக்கள் நலப்பணியாளர்கள் தாக்கல் செய்த புதிய மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
 தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது சுமார் 13 ஆயிரம் மக்கள் நல பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், மக்கள் நல பணியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை நீதிபதி சுகுணா விசாரித்து, மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். 
இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்து, பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்களுக்கு 5 மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், நீதிபதி சுகுணா பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
 இந்த நிலையில், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்கள் நல பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் மதிவாணன், சென்னை ஐகோர்ட்டில் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது சரியல்ல. எனவே அவர்களது வழக்கை, சென்னை ஐகோர்ட்டு மீண்டும் விசாரிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டது.
 இதையடுத்து, மக்கள் நல பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு மீண்டும் பணி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று புதிய மனுவை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. 
இந்த மனு நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை 27–ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக