புதன், 22 ஜனவரி, 2014

தமிழக சட்டசபை வரும் 30–ந் தேதி கூடுகிறது


தமிழக சட்டசபை வரும் 30–ந் தேதி கூடுகிறது. அப்போது தமிழக கவர்னர் உரை நிகழ்த்துகிறார்.
 ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு தமிழக சட்டசபை ஜனவரி 30–ந் தேதி கூடுகிறது. முதல் நிகழ்ச்சியாக கவர்னர் உரை நிகழ்த்தப்படுகிறது. இதற்கான உத்தரவை கவர்னர் கே.ரோசய்யா பிறப்பித்தார். அதில், ‘‘30–ந் தேதியன்று நண்பகல் 12 மணிக்கு சட்டசபை கூட்டப்பட வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் சட்டசபை செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘‘தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தை ஜனவரி 30–ந் தேதி (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு கவர்னர் கூட்டியுள்ளார். அன்று சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்துவார். எனவே அன்று உங்கள் வருகையை வேண்டுகிறேன்’’ என்று கூறப்பட்டுள்ளது.
  30–ந் தேதி காலை 11.55 மணிக்கு சட்டசபைக்கு கவர்னர் வருகை தருவார். அவரை மரபுப்படி, சபாநாயகர் தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று, சட்டசபைக்குள் அழைத்து வருவார்கள். அங்கு கவர்னர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். அதன் மொழியாக்கத்தை சபாநாயகர் தனபால் படிப்பார். அதோடு சட்டசபை நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். அதன் பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடும். அதில், சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்படும்.

 கவர்னர் உரையில் பொதுவாக அரசு மேற்கொண்ட சாதனைகள், மேற்கொண்டு வரும் திட்டங்கள், புதிதாக கொண்டு வரப்படும் திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும். எனவே புதிய நல்ல திட்டங்களை கவர்னர் உரையில் எதிர்பார்க்கலாம். பிப்ரவரி இறுதியில் வரும் மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு அந்த தேர்தல் நடத்தப்படும் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி, பிப்ரவரி இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புகள் வெளியாகிவிடும் என்று தெரிகிறது. தேர்தல் அறிவிப்புகள் வெளியான பிறகு எந்த அரசும் தனது தரப்பில் மக்கள் நலத் திட்டங்களை வெளியிட முடியாது. எனவே தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக தமிழக சட்டசபை கூட்டத்தொடர்களை நடத்தி முடிப்பதற்கு ஏதுவாக முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக