உதவி வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச்செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:– தமிழக அரசுக்கு வேளாண்மை ஆணையர் கடிதம் எழுதினார். அதில், உதவி வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடம் 2011–12–ம் ஆண்டிற்கு 417 என்று மதிப்பீடு செய்து அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு நேரடி நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டது.
2009 மற்றும் 2011–ம் ஆண்டுகளில் அந்த பணியிடங்கள் வேலைவாய்ப்பகம் மூலம் நேரடியாக நிரப்பப்பட்டது. தற்போது திறமையான, மேம்பட்ட மற்றும் இளையோருக்கு வாய்ப்பளிக்கும் விதத்தில், போட்டித்தேர்வு மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமனம் மேற்கொண்டால் சிறப்பாக அமையும். மேலும் மாநில முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தகுதியானவர்கள் அனைவரும் பங்கேற்கும் விதத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு மேற்கொள்வது உகந்ததாக இருக்கும். இந்த உதவி வேளாண்மை அலுவலர் பணிநியமனத்தினை தமிழ்நாடு தேர்வாணையத்தின் எல்லைக்குள் கொண்டு வந்து,417 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை நிரப்பிட ஆணை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையத்தின் ஆலோசனை கோரப்பட்டது. இந்த பணியிடங்களை தேர்வாணையத்தின் எல்லைக்குள் கொண்டுவந்து, 417 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்ப இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை ஆணையரின் கருத்தை அரசு கவனமுடன் பரிசீலித்து, அந்த பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பலாம் என முடிவு செய்து அரசாணை வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக, தமிழ்நாடு அரசு பணி விதிகளில் திருத்தம் கொண்டு வருவதற்கான அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக